அறிவிப்புகள்
கார்ட்டூன்
சமூகம்
Published:Updated:

ஊட்டிக்கு டூட்டி... ராஜ்பவன் ஏட்டிக்குப் போட்டி!

ராஜகோபால்
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜகோபால்

இதுதான் சிக்கன நடவடிக்கையா?

‘சிக்கன நடவடிக்கை மேற்கொள்கிறோம்’ எனச் சொல்லி, புள்ளிவிவரங்களுடன் செய்திக் குறிப்புகளை வெளியிடுகிறது கவர்னர் மாளிகை. ஆனால், அது உண்மையில்லை என்கின்றன அங்கே நடக்கும் விஷயங்கள். என்ன நடக்கிறது அங்கே?

இளநிலை உதவியாளர்கள், ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள் ஆகியோரைத் தேர்வு செய்வதற்காக கவர்னர் மாளிகை வெளியிட்ட விளம்பரம்தான் இப்போது சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. இதுபற்றி ராஜ்பவன் அலுவலர்களிடம் பேசினோம். “விளம்பரம் கொடுத்து பணியாளர்களைத் தேர்வுசெய்யும் நடைமுறை கடந்த காலங்களில் இல்லை. ராஜ்பவனில் பத்தாண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை கவர்னர் மூலம் அரசுக்குப் பரிந்துரை செய்து, பணி நிரந்தரம் செய்வார்கள். இப்படிப் பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்கள் கண்காணிப்பாளர்கள், இளநிலை உதவியாளர்கள், காசாளர் வரை பதவி உயர்வுபெற்று ஓய்வும் பெற்றிருக்கிறார்கள்.

தவிர, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேர்முகத் தேர்வு நடத்தி, பணி நியமனம் செய்யப்படுவதும் வழக்கம். அலெக்ஸாண்டர், குரானா ஆகியோர் கவர்னர்களாக இருந்தபோது, அவர்களே நேரடியாக நேர்முகத் தேர்வு நடத்திப் பணி நிரந்தரம் செய்திருக்கிறார்கள். அத்துடன் காலி இடங்களை நிரப்ப அரசிடமிருந்து அலுவலர்களைக் கேட்டால், வேறு துறையில் இருந்து விருப்பப்பட்டவர்களைப் பணி மாறுதல் செய்து அனுப்புவார்கள். இந்த நடைமுறைகளைத் தான் இப்போது மாற்றிவிட்டார்கள். கவர்னரின் செயலாளராக ராஜகோபால் வந்த பிறகு சிலரைத் தற்காலிகப் பணியாளர்களாக நியமித்திருக்கிறார். அவர்களை நிரந்தரம் செய்யவே இந்த ஏற்பாடு. ராஜ்பவனின் ‘கம்ட்ரோலர்’ ஆக இருக்கும் செங்கோட்டையன் மூலம் இதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.

கவர்னர் மாளிகைகளில் 50-க்கும் மேற்பட்ட கடைநிலை ஊழியர்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றுகிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்குக் கருணை அடிப்படையில் இன்னும் பணி வழங்கப்படவில்லை. கவர்னர் இல்லத்தின் அலுவலகத்தில் பணியாற்றிய பெரும்பாலானோர் ஓய்வு பெற்றுவிட்டதால், அலுவலகமே காலியாகிவிட்டது. பொது கண்காணிப்பாளர், கண்காணிப் பாளர், இளநிலை உதவியாளர், காசாளர் உள்பட பல பணியிடங்களை நிரப்பி, கவர்னர் இல்ல அலுவலகத்தை மீண்டும் இயக்க வேண்டும். இந்த ஒன்றரை வருடத்தில் ஐந்து கணக்கு அலுவலர்கள் வேலையைவிட்டுச் சென்றுவிட்டார்கள். இந்த வருடத்தில் மட்டும் ஐந்து பணியாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஊட்டி ராஜ்பவன்
ஊட்டி ராஜ்பவன்

ஊட்டியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தற்காலிகப் பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களைப் பணி நிரந்தரம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரவீந்திரன், சுரேஷ்பாபு, சின்னதுரை ஆகியோர் சென்னையிலிருந்து ஊட்டிக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அங்கு கட்டாய ஓய்வில் மூன்று பேர் அனுப்பப்பட்டிருக் கிறார்கள். ஊட்டி கவர்னர் மாளிகையில் அதிகபட்சம் ஓர் ஆண்டில் ஒரு வாரம்தான் கவர்னர் தங்குவார். மற்றபடி அங்கே பெரிதாக எந்த வேலையும் இருக்காது. ஊட்டிக்கு அனுப்பப்பட்டிருக்கும் சென்னை ஊழியர்கள் பணியே இல்லாமல்தான் அங்கே இருப்பார்கள். இப்படி ஊட்டிக்குப் பணியாளர்களை அனுப்பிவிட்டு, ராஜ்பவனுக்கு வெளியில் இருந்து பணியாளர்களை நியமனம் செய்வதுதான் சிக்கன நடவடிக்கையா? ஊட்டியில் பணியாற்றும் தோட்டப் பணியாளர்கள் சுழற்சி முறையில் மாதம்தோறும் சென்னைக்கு வந்து பணியாற்று கிறார்கள். அதுவும் தேவையில்லாத ஒன்று’’ என்றார்கள்.

இதுகுறித்து ராஜகோபாலின் கருத்தைக் கேட்க அவருக்கு போன் செய்தோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பினோம். அந்தத் தகவலை அவர் பார்த்ததற் கான ‘டபுள் டிக்’ குறியீடு வந்திருக் கிறது. அப்போதும் அவர் தனது கருத்தைத் தெரிவிக்கவில்லை.

இதுதான் நிலைமை!

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கவர்னர் மாளிகையின் தனிநிலைச் செயலாளர் பதவியை வேறு ஒருவருக்கு வழங்கியதை எதிர்த்து, நாகராஜ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் கவர்னர் மாளிகை சார்பாக மேல்முறையீடு செய்தார்கள். அந்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நாகராஜுக்குப் பதவி உயர்வு வழங்கி, வழக்கை முடிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், கவர்னரின் செயலாளராக இருந்த ஷீலா ப்ரியா முதல், தற்போதைய செயலாளர் ராஜகோபால் வரை நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை. அதன் பின்பு நாகராஜ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பிறகுதான், சார்பு செயலாளர் பதவி உயர்வும் இழப்பீடும் வழங்க ராஜகோபால் உத்தரவிட்டார். 25 ஆண்டுகாலம் போராடி நாகராஜ் நியாயம் பெறும் நிலையில்தான் கவர்னர் மாளிகையின் செயல்பாடுகள் இருக்கின்றன என்பதே அங்கு பணியாற்றும் நேர்மையான அதிகாரிகளின் ஆதங்கமாக இருக்கிறது.