ராஜபாளையம் சஞ்சீவநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்இருளப்பன் (வயது 32). இவரின் மனைவி சபரீஸ்வரி. இந்தத் தம்பதிக்குத் திருமணமாகி, ஓராண்டு நிறைவு பெற்றிருக்கிறது. பொன்இருளப்பன் ஜவுளிக்கடையில் ஊழியராகப் பணியாற்றிவந்தார். இந்த நிலையில் இவர், பணிமுடிந்து இரவு வீடு திரும்பும்போது டி.பி.மில்ஸ் சாலையில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் டூ வீலருடன் விழுந்ததாகக் கூறப்படுகிறது. அதேசமயம், இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், இருளப்பனை அவரின் உறவினர்கள் பல இடங்களிலும் தேடியுள்ளனர்.

இந்த நிலையில், டி.பி.மில்ஸ் சாலையில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் டூ வீலருடன் ஒருவர் விழுந்து இறந்துகிடப்பதாக அக்கம் பக்கத்தினர் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பள்ளத்தில் விழுந்து இறந்துகிடந்த பொன் இருளப்பனை மீட்டு உடற்கூறாய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
குழிக்குள் விழுந்து கிடந்த டூ வீலரை அடையாளம் கண்டுகொண்ட இருளப்பனின் உறவினர்கள், விஷயம் கேள்விப்பட்டு அரசு மருத்துவமனைக்குப் பதறியடித்துச் சென்றனர். அங்கு உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டிருந்த பொன்இருளப்பனின் உடலை அடையாளம் காட்டி உறவினர்கள் உறுதிசெய்தனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ராஜபாளையம் நகராட்சியில், கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில், குழாய் பதிக்கும் பணிகள் சமீபத்தில் நிறைவுபெற்றன. இந்த நிலையில், ஒருசில இடங்களில் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யும் பணிக்காக டி.பி.மில்ஸ் சாலையில் தற்போது பள்ளம் தோண்டப்பட்டது. கடந்த சில நாள்களாக நடைபெற்றுவந்த இந்தப் பணிக்காக சாலையின் நடுவே 10 அடி ஆழத்துக்கு பெரிய பள்ளம் தோண்டப்பட்டு உடைப்பைச் சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுவந்தனர். ஆனால், பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் எச்சரிக்கை தெரிவிக்கும்விதத்தில் ஒளிரும் எச்சரிக்கைப் பலகைகள் நிறுவப்படவில்லை. பள்ளத்துக்கு முன்பாகவே தடுப்புகள் அமைத்து வாகன ஓட்டிகளுக்குத் தகுந்த வழிகாட்டுதல்கள் தரவில்லை. நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மெத்தனப் போக்கே பொன் இருளப்பனின் உயிரிழப்புக்கு முக்கியக் காரணம் எனக் கூறி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆவேசக் குரல் கொடுத்துவருகின்றனர். இது தொடர்பாக, போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.