Published:Updated:

திருப்பம் தருமா திருவண்ணாமலை? - ரஜினியின் நவம்பர் புரட்சி!

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினி

தனித்துப் போட்டியிட்டால் வெற்றிபெற முடியாது என்பதை ரஜினி அறிந்தேயிருக்கிறார். 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி 40.6 சதவிகித வாக்குகளைப் பெற்றது.

திருப்பம் தருமா திருவண்ணாமலை? - ரஜினியின் நவம்பர் புரட்சி!

தனித்துப் போட்டியிட்டால் வெற்றிபெற முடியாது என்பதை ரஜினி அறிந்தேயிருக்கிறார். 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி 40.6 சதவிகித வாக்குகளைப் பெற்றது.

Published:Updated:
ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினி

ரஜினி இன்று ‘ஆன்மிக அரசியல்’ பேசுகிறார் என்றால், ஒருவகையில் அதற்குக் காரணம், இசையமைப்பாளர் இளையராஜா. திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆசிரமத்துக்கு ரஜினியை அழைத்துச் சென்று, அவரது ஆன்மிகப் பாதைக்கு வழியமைத்தவர் இளையராஜாதான். ஒருமுறை கங்கை அமரனிடம் ரஜினி பேசிக்கொண்டிருந்தபோது இதை நினைவுகூர்ந்த ரஜினி, “சாமி (இளையராஜா) மட்டும் என்னைத் திருவண்ணாமலைக்கு அழைச்சுட்டுப் போயிருக்கலைன்னா... இன்னைக்கு நான் இந்த இடத்துல இருந்திருக்க மாட்டேன்” என்றாராம். இன்று அதே திருவண்ணாமலை, ரஜினியின் அரசியல் பாதைக்கும் வழியமைக்கப்போகிறது என்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமானவர்கள்!

“நான் அரசியலுக்கு வருவது உறுதி. போருக்குத் தயாராகுங்கள்!” - சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் 2017 டிசம்பர் 31-ம் தேதி இப்படி அறைகூவல் விடுத்தார் ரஜினி. மூன்றாண்டுகள் நெருங்கப்போகின்றன. அவர் எதிர்பார்த்த போரும் நெருங்கிவிட்டது. போரிடத் தயாரா ரஜினி? ரஜினிக்கு நெருங்கமானவர்களிடம் பேசினோம். “பெயர் வெளியிட வேண்டாம்” என்றபடி பேசினார்கள் அவர்கள்.

மதுரையில் முதல் மாநாடு

“ஓர் அரசியல் கட்சிக்கு தேர்தலைச் சந்திக்க அடிப்படையானவை பூத் கமிட்டிகள். எனவே, ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சுமார் 62,000 பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு கமிட்டிக்கு 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 1972-ல் தி.மு.க-விலிருந்து வெளியேற்றப் பட்ட எம்.ஜி.ஆர், அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர் தொடங்கி யிருந்த அ.தி.மு.க என்னும் இயக்கத்தில் தொண்டனாகத் தன்னை இணைத்துக்கொண்டார். பிற்பாடு, அந்த இயக்கம் அனைத் திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாகப் பரிண மித்தது. இதே பார்முலாவைத்தான் ரஜினியும் கையிலெடுக்கப்போகிறார்.

ரஜினி
ரஜினி

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு விசுவாசியின் பெயரில் ரஜினிக்கான கட்சி பதிவு செய்யப் பட்டுவிட்டது. அந்தக் கட்சியில் தன்னை அவர் இணைத்துக் கொள்ளலாம் அல்லது கட்சியைக் கையிலெடுக்கலாம். கட்சியை அமைப்புரீதியாக ஐந்து மண்டலங் களாகப் பிரிக்கவுள்ளார் ரஜினி. ஒவ்வொரு மண்டலத்திலும் எட்டு மாவட்ட அமைப்புகள் அமைக்கப் படவுள்ளன. நிர்வாகிகள் நியமனம், கட்டமைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்டப் பணிகளை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், தொழிலதிபர்கள் கொண்ட குழு அமைக்கப்படும்.

ரஜினி நவம்பர் மாதம் அரசியலுக்கு வருவது உறுதி. முதல் அரசியல் மாநாடு மதுரையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு 5 லட்சம் பேரைத் திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல், வருகின்ற ஜனவரி மாதத்துக்குப் பிறகு ஓய்ந்துவிடும் என்று கணக்கிட்டு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கொரோனா அச்சுறுத்தல் நீடித்தால், அதற்கேற்ப திட்டம் மாறும்.

இளைஞர், பெண்கள் ஆதரவு!

ரஜினி ரசிகர்களுக்கு வயதாகிவிட்டது என்பது போன்ற பிம்பத்தை சிலர் கட்டமைக்கிறார்கள். ஆனால் பெண்கள், இளைஞர்கள் மத்தியில் ரஜினிக்கு அபரிமிதமான வரவேற்பு உள்ளது. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை, மகன் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தின்போது ‘சத்தியமா விடவே கூடாது’ என்கிற ‘ஹேஷ்டேக்’கில் ட்வீட் செய்தார் ரஜினி. கந்தசஷ்டி விவகாரத்தின்போது ‘கந்தனுக்கு அரோகரா’ என்று ட்வீட் செய்தார். இவை இரண்டுமே சர்வதேச அளவில் டிரெண்ட் ஆகின. இளைஞர்களின் ஆதரவு இருந்ததாலேயே இது சாத்தியமானது. மதுரை மாநாடு முடிந்த வுடன், திருவண்ணாமலையில் இரண்டாவது மாநாடு நடத்தப்படும். இதன் பிறகு, அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் புயல் வேகத்தில் பிரசாரம் தொடங்கும்” என்றவர் களிடம், கூட்டணி குறித்துக் கேட்டோம்.

நிச்சயம் உண்டு கூட்டணி!

“தனித்துப் போட்டியிட்டால் வெற்றிபெற முடியாது என்பதை ரஜினி அறிந்தேயிருக்கிறார். 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி 40.6 சதவிகித வாக்குகளைப் பெற்றது. அ.தி.மு.க கூட்டணி 41.7 சதவிகித வாக்குகளை வாங்கியது. மக்கள் நலக் கூட்டணி 6.1 சதவிகித வாக்குகளை அள்ளியது. தனித்துப் போட்டியிட்ட பா.ம.க 5.4 சதவிகிதத்துடன் நான்காவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. பா.ஜ.க. 2.9 சதவிகிதத்துடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் இரு திராவிடக் கட்சிகளுக்கு எதிராக, தே.மு.தி.க தனித்துப் போட்டியிட்டு பெற்ற 10.1 சத விகிதம்தான் பிரமிக்கத்தக்க விஷயம். இந்த சதவிகிதத்தைவிட 5 சதவிகிதம் கூடுதலாக ரஜினியால் தனித்துப் பெற முடியும். இதற்கு ரஜினியின் மாஸ் பிம்பம், ரசிகர்கள், பெண்கள் செல்வாக்கு எனப் பல காரணங்களை அடுக்கலாம். இத்துடன் பா.ம.க, அ.ம.மு.க, புதிய தமிழகம், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் பா.ஜ.க-வுடன் செல்லும் எண்ணம் ரஜினிக்கு இல்லை. இவை போக, தேர்தல் நேரத்தில் உருவாகும் ‘அரசியல் மாற்றத்துக்கான அலை’ தன்னைக் கரைசேர்க்கும் என்று ரஜினி நம்புகிறார். இப்படி மெகா கூட்டணியுடன் களமிறங்கும்போது எங்களுக்கு வெற்றி உறுதி” என்றனர்.

திருப்பம் தருமா திருவண்ணாமலை?

ஓட்டுக்காக ரஜினி பணம் தர மாட்டார். தேர்தல் வாக்குறுதியிலும் இலவசங்களுக்கு இடமில்லை. 234 தொகுதிகளுக்கும் தலா மூவரைத் தேர்ந்தெடுத்து வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கிவிட்டது. அந்தந்தத் தொகுதியில் மக்களுக்காகப் பணியாற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களே பெரும்பாலும் வேட்பாளர்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள். அதேசமயம், மாற்றுக் கட்சிகளிலிருந்து வருபவர்களுக்கு சீட் ஒதுக்கீட்டில் 20 சதவிகிதம் முன்னுரிமை வழங்கப்படும்.

ரஜினியின் ஆன்மிகத் தேடலுக்கு விடையளித்த பூமி திருவண்ணாமலை. அதே மண்தான் ரஜினியின் அரசியல் தேடலுக்கும் விடையளிக்கப் போகிறது. ரஜினி அந்தத் தொகுதியில்தான் போட்டியிட தீர்மானித்துள்ளார். ஒருசிலர் மதுரையில் போட்டியிட வேண்டும் என்கிறார்கள். இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. முதல்வர் வேட்பாளர் யார் என்று கேட்கிறார்கள்... ரஜினி தேர்தலில் போட்டியிட்டாலே அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று மக்களுக்குத் தெரியும். பொறுத்திருந்து பாருங்கள்...” என்றார்கள் உற்சாகமாக.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த பிறகுதான் வெளியே வருவது என்பதில் திரைத்துறையில் இருவர் தீர்மானமாக இருக்கிறார்கள். ஒருவர் ரஜினி, மற்றொருவர் அஜித். ரஜினியைப் பொறுத்தவரை ஊர் ஊராக... தெருத் தெருவாக பிரசாரம் செய்வது என்பதிலெல்லாம் பெரிய நம்பிக்கை இல்லையாம். தான் போட்டியிடப்போவதாக அறிவித்தாலே, மக்களின் ஆதரவு குவிந்துவிடும் என்று நினைக்கிறாராம். அதனால், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கத் தாமதமானாலும், அதிகபட்சம் 20 நாள் பிரசாரம்... நான்கு இடங்களில் ஹெலிகாப்டரில் சென்று தலைகாட்டினாலே போதும் என்கிற ஓவர் கான்ஃபிடன்ஸில் ரஜினி இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.

எப்படியோ... திருவண்ணாமலையில் களமிறங்கத் தயாராகிவிட்டார் ‘அண்ணாமலை’. மக்கள் அளிக்கும் முடிவுகளே அவர் ‘அண்ணாமலை’யா, ‘பாபா’வா? என்பதைத் தீர்மானிக்கும்!

“வென்றால் மகிழ்ச்சி... தோற்றால் இரட்டை மகிழ்ச்சி!”


ஜினி தரப்பில் மக்களுக்காக விரிவான அறிக்கை ஒன்று தயாராகியிருக்கிறது. இதை அவருக்கு மிகவும் வேண்டப்பட்ட ஏழெட்டு பேரிடம் மட்டுமே ரஜினி பகிர்ந்துகொண்டுள்ளார். ‘கொரோனா பேரிடர் காலத்தில் இதை வெளியிட்டு, பரபரப்பாக்க வேண்டாம்; கொரோனா தாக்கம் குறையட்டும்’ என்று அறிக்கையை பொக்கிஷமாகப் பாதுகாக்கிறது ரஜினி தரப்பு. அறிக்கையின் சாரம்சம் இதுதான்...

“எனக்கு இதற்கு மேல் அரசியலுக்கு வந்துதான் சம்பாதிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. போதும் போதும் என்றளவுக்கு பணத்தையும் புகழையும் என் ரசிகர்களும் தமிழ் மக்களும் கொடுத்திருக்கிறார்கள். என் குடும்பத்துக்கு பேரக்குழந்தைகள் வரை செட்டில் செய்துவிட்டேன். எனக்கென்று இனி எதுவும் தேவையில்லை. நான் பெற்ற நல்லனவற்றை எல்லாம் மக்களுக்கே திருப்பியளிக்கத் தீர்மானித்துள்ளேன். ‘கட்சி செலவுக்கு என்ன செய்வார் ரஜினி?’ என்று பலரும் கேட்கிறார்கள். பெரிய பெரிய தொழிலதிபர்கள் எல்லாம் எனக்கு விமானமும் ஹெலிகாப்டரும் தரத் தயாராக இருக்கிறார்கள். நிதியையும் தருவோம் என்கிறார்கள். எதுவும் எனக்குத் தேவையில்லை. கட்சிக்கும் பிரசாரத்துக்கும் எனது சொந்தக் காசையே செலவு செய்வேன். என் வேட்பாளர்களும் அப்படிதான் செய்வார்கள். இதுதான் என் நிலைப்பாடு.

என்னை நீங்கள் நம்பி ஓட்டு போடுங்கள். இல்லை, என்னைவிட நல்லவர் என்று யாரையேனும் நீங்கள் நினைத்தால் அது உங்கள் முடிவு. நான் வெற்றிபெற்றால் மகிழ்ச்சி. தோற்றால் இரட்டை மகிழ்ச்சி. நான் தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டுதான் களமிறங்குகிறேன். நீங்கள் என்னைத் தேர்வு செய்யாதபோது, ‘மக்களுக்கு எதுவும் செய்யவில்லை’ என்கிற குறை நீங்கிவிடும்” என்றபடி மிகவும் உணர்வுபூர்வமாக நீள்கிறது அந்த அறிக்கை. வரும் தேர்தலில் மொத்த ஓட்டுகளையும் கவர இந்த அறிக்கை ஒன்றே போதும் என்று உற்சாகத்தில் திளைக்கிறார்கள் ரஜினியின் ஆதரவாளர்கள்!

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த பிறகுதான் வெளியே வருவது என்பதில் திரைத்துறையில் இருவர் தீர்மானமாக இருக்கிறார்கள். ஒருவர் ரஜினி, மற்றொருவர்...

உடலினை உறுதிசெய்!

ரஜினி
ரஜினி

ஜினி சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. தேர்தலுக்கு முன்பாக அவருக்கு மாஸ்டர் ஹெல்த் செக்-அப் செய்துவிட வேண்டும் என்பதில் அவரின் குடும்பத்தினர் உறுதியாக இருக்கிறார்கள். அதேசமயம் கிரியா யோகா, தினமும் 6 கிலோமீட்டர் நடைப்பயற்சி, நீச்சல் ஆகிய பயிற்சிகளைச் செய்து உடலை உறுதிசெய்துவருகிறார் ரஜினி.“

இப்போதில்லை என்றால் எப்போதும் முடியாது!”


டிட்டர் குருமூர்த்தி தரப்பிலிருந்தும் சமீபத்தில் ரஜினிக்கு அட்வைஸ் செய்யப்பட்டதாம். “இரண்டு திராவிடக் கட்சிகளையும் வீழ்த்துவதற்கு இதுதான் சரியான தருணம். இப்போது நீங்கள் அரசியலுக்கு வரவில்லை என்றால், இனி எப்போதுமே வர முடியாது. மேலும், மக்களுக்கும் உங்கள்மீது நம்பிக்கை போய்விடும். அது உங்கள்மீது தவறான இமேஜையும் ஏற்படுத்திவிடும்” என்று கூறப்பட்டதாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism