அரசியல்
அலசல்
Published:Updated:

தனிப்பட்ட பகைக்காக பகடைக்காய் ஆக்கப்பட்டார்களா மாணவிகள்?

 - ராமநாதபுரத்தில் திசை மாறும் போக்சோ வழக்கு!
பிரீமியம் ஸ்டோரி
News
- ராமநாதபுரத்தில் திசை மாறும் போக்சோ வழக்கு!

- ராமநாதபுரத்தில் திசை மாறும் போக்சோ வழக்கு!

ராமநாதபுரத்தில், பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறி ஆசிரியர்மீது போக்சோ வழக்கு பதிவுசெய்யப்பட்ட பரபரப்பே இன்னும் அடங்கவில்லை. இந்த நிலையில், பொய்ப் புகாரின் அடிப்படையிலேயே, அந்த ஆசிரியர்மீது போக்சோ வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது என்று மாணவியின் குடும்பத்தினரே சொல்லியிருப்பது அதிர்ச்சித் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே திருவரங்கத்தில், ‘திரு இருதய மேல்நிலைப் பள்ளி’ எனும் அரசு உதவிபெறும் பள்ளி இயங்குகிறது. இந்தப் பள்ளியின் கணித ஆசிரியரான ஆரோக்கிய அருள் தோமஸ் என்பவர், பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறி, அவர்மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. ஆனால், ‘பள்ளியில் படிக்கும் நான்கு மாணவிகளைக் கட்டாயப்படுத்தி, புகார்க் கடிதம் எழுதி வாங்கி, அவர்மீது போக்சோ வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது’ என்று தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தனிப்பட்ட பகைக்காக பகடைக்காய் ஆக்கப்பட்டார்களா மாணவிகள்?

ஆசிரியர் மீதான வழக்கில் சாட்சியாகச் சேர்க்கப்பட்ட ஒரு மாணவியிடம், அவரின் தாய் பேசும் ஆடியோ சமீபத்தில் வெளியானது. அதில் பேசிய மாணவி, தன்னை வற்புறுத்தி எழுதி வாங்கி சாட்சியாகச் சேர்த்ததாகக் குமுறியிருந்தார். இதையடுத்து, அந்த மாணவியின் தாயிடம் பேசினோம். “கடந்த மார்ச் 29-ம் தேதி பள்ளியில் நடந்த தேர்வுக்கு சூப்பர்வைசராக கணித ஆசிரியர் ஆரோக்கிய அருள் தோமஸ் வந்திருக்கிறார். அப்போது ஒரு மாணவி தனது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தில் பேனாவால் கோடு கிழித்து கிறுக்கியிருக்கிறார். அதைப் பார்த்த ஆசிரியர் அந்த மாணவியிடம் விசாரித்தபோது, ‘எனக்கு என்னைப் பிடிக்கவில்லை’ என்று சொல்லியிருக்கிறார். அதனால் அந்த மாணவி மன அழுத்தத்தில் இருப்பதைப் புரிந்துகொண்ட ஆசிரியர், மாணவியின் தலையில் கைவைத்து ‘அப்படியெல்லாம் பேசக் கூடாது. உன்னை எங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்’ என்று அறிவுரை சொல்லியிருக்கிறார். நடந்தது இதுதான்...

அதே பள்ளியைச் சேர்ந்த அமுதா என்ற ஆசிரியைக்கும், ஆரோக்கிய அருள் தோமஸுக்கும் இடையே தனிப்பட்ட பகை இருந்துள்ளது. அதனாலேயே, மாணவியின் தலையில் கைவைத்து அந்த ஆசிரியர் பேசியதை பாலியல் வன்கொடுமைபோலத் திரித்து, பிரச்னையாக்கி குழந்தைகள் நலக்குழு மற்றும் போலீஸில் புகார் அளித்திருக்கிறார்கள். இதற்காக என் மகள் உள்ளிட்ட நான்கு மாணவிகளுக்கு நெருக்கடி கொடுத்து, கடிதமும் எழுதி வாங்கியிருக்கிறார் ஆசிரியை அமுதா. அதன்பேரிலேயே பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் ஆசிரியர் தோமஸ் மீது போக்சோ வழக்கு பதிவுசெய்திருக்கிறார்கள்.

நான் என் மகளை குழந்தைகள் நல அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, அவள் எழுதிக் கொடுத்த சாட்சிக் கடிதத்தைக் கேட்டேன். அதைத் தர மறுத்த குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராஜகாந்தி, ‘உன்னுடைய ஆசிரியை அமுதா ஜெயிலுக்குப் போனால் பரவாயில்லையா?’ என்று என் மகளிடம் கோபமாகக் கேட்டார். நான் அவரிடம், ‘ஏன் இப்படிக் கடுமையாகப் பேசுகிறீர்கள்?’ என்றதும், கையிலிருந்த நோட்டைத் தூக்கி வீசிவிட்டு வெளியே போய்விட்டார். பிறகு ஆசிரியை அமுதா என்னைத் தொடர்புகொண்டு, ‘உங்கள் மகள் சாட்சியாக எழுதிக் கொடுத்ததைத் திரும்பப் பெற்றால், நான் தற்கொலை செய்துகொள்வேன்’ என்றார். பிற மாணவிகளிடமும், ‘எனக்கு எதிராக யாராவது பேசினால் என்னுடைய சாவுக்கு நீங்கள்தான் காரணம்’ என்று மிரட்டுகிறார்.

அதனால் என் மகள் உட்பட நான்கு மாணவிகளும் கடும் மன உளைச்சலில் இருக்கிறார்கள். பள்ளிக்குச் சென்றால் சக மாணவர்கள் அவமானமாகப் பார்ப்பதாகச் சொல்லி பள்ளிக்குச் செல்வதையும் நிறுத்திவிட்டார்கள். ஆசிரியை அமுதா தனது தனிப்பட்ட பகைக்குப் பழி தீர்ப்பதற்காக, பெண் குழந்தைகளின் வாழ்க்கையைச் சீரழிக்கிறார். எனவே, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தாளாளர் சிங்கராயர், ஆசிரியை அமுதா, குழந்தைகள் நல உறுப்பினர் ராஜகாந்தி, பரமக்குடி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்செல்வி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருக்கிறேன்” என்று படபடத்தார்.

இது குறித்து ஆசிரியர் அமுதாவின் கருத்தை அறிய தொடர்புகொண்டபோது, அவரது அலைபேசி அணைத்துவைக்கப்பட்டிருந்தது. பள்ளியின் தாளாளர் சிங்கராயரிடம் கேட்டதற்கு, “இது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. பள்ளி தொடர்பான எந்த விவரமாக இருந்தாலும் தலைமை ஆசிரியருக்கு மட்டுமே தெரியும்” என்றார். தலைமை ஆசிரியரோ நமது அழைப்பை ஏற்கவில்லை.

தனிப்பட்ட பகைக்காக பகடைக்காய் ஆக்கப்பட்டார்களா மாணவிகள்?

குழந்தைகள் நலக்குழு உறுப்பினரான ராஜகாந்தியிடம் விளக்கம் கேட்க அவரது அலுவலகத்துக்குச் சென்றோம். அங்கு அவர் இல்லாததால், அவரது செல்போனில் தொடர்புகொண்டோம்... ‘‘இது பற்றி போனில் எதையும் பேச முடியாது. எதுவாக இருந்தாலும் என் ஆபீஸுக்கு வாங்க’’ என்றார். “நாங்கள் அங்குதான் இருக்கிறோம்’ என்று சொன்னதும் அழைப்பைத் துண்டித்துவிட்டார். பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்செல்வியிடம் பேசியபோது, ‘‘புகாரின் அடிப்படையில்தான் விசாரணை நடந்துவருகிறது. மாணவிகளை மிரட்டிக் கடிதம் எழுதி வாங்கியிருந்தால், அது குறித்தும் விசாரணை செய்வோம்’’ என்றார். ஆசிரியர் ஆரோக்கிய அருள் தோமஸின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கும் நிலையில், ‘ஜாமீன் வாங்கும் முயற்சிகளில் அவர் இருக்கிறார்’ என்று அவர் தரப்பில் கூறினார்கள்.

இந்த விவகாரத்தில், உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டியது கல்வித்துறை மற்றும் காவல்துறையின் கடமை!