
ராமநாதபுரத்தில் விளையும் மிளகாயை வைத்து Chili Oil தயாரிப்பு நிறுவனங்களை உருவாக்கலாம்.

பனைக்கு அடுத்தபடியாக ராமநாதபுரத்தில் கவனம் ஈர்க்கும் விவசாயப் பொருளாக மிளகாய் இருக்கிறது. இந்த மிளகாயின் தனிச்சிறப்பு இதன் அதீத காரம். எனவே, இந்த மிளகாயை வைத்து பெரும் சந்தை மதிப்புகொண்ட மதிப்புக்கூட்டு நிறுவனங்களை உருவாக்கலாம். உடனே ஏதேனும் மசாலா கம்பெனியைச் சொல்வேன் என்று நினைக்காதீர்கள். அதுவும் மதிப்புக்கூட்டு நிறுவனம்தான். ஆனால், அது ஓரடுக்கு மதிப்புக்கூட்டு (Incremental Value Addition) வகையில் சேரும். ஓரடுக்கு மதிப்புக்கூட்டு என்றால், 100 ரூபாய் மதிப்புகொண்ட மிளகாயை, அப்படியே மிளகாய்த்தூளாக மாற்றி 200 ரூபாய்க்கு விற்பது. அதாவது, இடையில் ஒரே ஒரு Process மட்டும்தான். அதனால்தான் ஓரடுக்கு. ஆனால், அதற்கு அடுத்ததாக இருக்கும் பல்லடுக்கு மதிப்புக்கூட்டு (Exponential Value Addition) வகையில், அந்த 100 ரூபாய் மிளகாயைப் பல படிகளில் Process செய்து 1,000 ரூபாய் வருமானம்கொண்டதாக நாம் மாற்ற முடியும். அத்தகைய பொருள்களையே நான் இப்போது பட்டியலிடப்போகிறேன்.


10 நிறுவனங்களை உருவாக்கலாம்!
ராமநாதபுரத்தில் விளையும் மிளகாயை வைத்து Chili Oil தயாரிப்பு நிறுவனங்களை உருவாக்கலாம். நூடுல்ஸ், சாலட், பாஸ்தா என உலகம் முழுவதும் Chili Oil இன்று கணிசமாகப் பயன்படுத்தப்படும் காரச்சுவை கூட்டியாக மாறியிருக்கிறது. இந்தச் சந்தையைப் பயன்படுத்தி Lee Kum Kee போன்ற சர்வதேச நிறுவனங்களை நாம் உருவாக்கலாம்.
Chili Oil போல Chili Sauce-ம் நல்ல பல்லடுக்கு மதிப்புக்கூட்டு பொருள். உலகம் முழுவதும் இன்று Chili Sauce-ன் மொத்தச் சந்தை மதிப்பு 30,000 கோடி ரூபாயாக இருக்கிறது. இங்கு, அமெரிக்காவின் Tabasco Sauce நிறுவனத்தை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். இந்த Tabasco Sauce நிறுவனம் மட்டுமே ஆண்டுக்கு 1,400 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டுகிறது. இத்தனைக்கும், அவர்களின் நிறுவனம் இருக்கும் அமெரிக்காவில் மிளகாய் உற்பத்தி பெரிய அளவில் இல்லை. நேராக மெக்ஸிகோவிலிருந்து இறக்குமதி செய்துதான் Sauce தயாரிக்கிறார்கள். ஆனாலும், 1,400 கோடி ரூபாய் வருமானம் பெறுகிறார்கள். ஆனால், நமக்கு ராமநாதபுரத்திலேயே 12,000+ மெட்ரிக் டன் அளவுக்கு மிளகாய் விளைகிறது. எனவே, Tabasco Sauce-போல ஒரு நிறுவனம் அல்ல, பத்து நிறுவனங்களை உருவாக்கி நம்மால் உலகெங்கும் கொண்டுசெல்ல முடியும். இதைக் கடந்து Chili flakes, Chili Jam, Chili Paste என ஏராளமான பல்லடுக்கு மதிப்புக்கூட்டு நிறுவனங்களை உருவாக்கவும் நமக்கு வாய்ப்புகள் இருக்கின்றன. சரியாகத் திட்டமிட்டு அடித்தால் இந்தியாவின் ‘Red Hot Spot’-ஆக ராமநாதபுரத்தை நாம் மாற்றலாம்!


மல்லிகையில்... 10 மடங்கு வருமானம்!
மிளகாயைத் தொடர்ந்து, மல்லிகையும் ராமநாதபுரத்தின் தனித்துவமான ஒரு வளமாக உள்ளது. ராமேஸ்வரம், கடலாடிப் பகுதிகளில் இது அதிகமாக விளைகிறது. இங்கேயும் அதே பல்லடுக்கு மதிப்புக்கூட்டுப் பொருள் முறையை நாம் பொருத்திக்கொள்ளலாம். அதாவது, ஒரு கிலோ மல்லிகையை 200 ரூபாய்க்கு நம் வியாபாரிகள் கடைகளுக்கு விற்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், இதே ஒரு கிலோ மல்லிகையை Jasmine Tea Powder-ஆக மாற்றி நம்மால் 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும். ஒரே அளவு மல்லிகைதான். ஆனால், கிடைக்கும் வருமானம் பத்து மடங்கு அதிகம்.
அழகுசாதனம் மற்றும் வாசனைத் திரவியத் தொழிலிலும் மல்லிகை முக்கிய இடம் வகிக்கிறது. அந்தவகையில், Jasmine Essential Oil தயாரிக்கும் பல்லடுக்கு மதிப்புக்கூட்டு நிறுவனத்தை உருவாக்கலாம். இதில் பிரபலமாக இருக்கும் நிறுவனம் Clay. இந்த நிறுவனம், வெறும் 10 மில்லிலிட்டர் Jasmine Essential Oil-ஐ 1,195 ரூபாய்க்கு விற்கிறது. 1,000 மல்லிகைப் பூக்களிலிருந்து ஒரு மில்லிலிட்டர் ஜாஸ்மின் ஆயிலை நாம் உருவாக்கலாம். ராமநாதபுரத்தில் நமக்கு வருடத்துக்குக் கிடைக்கும் மல்லிகையின் அளவு 200+ டன். எண்ணிப் பாருங்கள், நாம் எத்தனை லிட்டர் ஆயிலை உருவாக்க முடியுமென்று!
ராமநாதபுரத்தில் அடுத்து குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய முக்கிய வளம், சூரிய ஆற்றல். வருடத்துக்கு 320 - 340 நாள்கள் அதிக அளவு சூரிய வெளிச்சம் இங்கு பதிவாகிறது. பொதுவாக, சூரியசக்தி மின்சாரம் தயாரிக்க... வெப்பம் அல்ல, வெளிச்சமே முக்கியம். எவ்வளவுக்கு எவ்வளவு சூரிய வெளிச்சம் கிடைக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு சூரிய மின்சாரம் தயாரிக்கலாம். ராமநாதபுரத்தில் மட்டும் 2,00,000+ ஏக்கர் தரிசு நிலங்கள் மாவட்டம் முழுவதும் இருக்கின்றன. இவற்றில் கடலோரப் பகுதி தரிசு நிலங்களைக் கழித்துவிட்டுப் பார்த்தால், எப்படியும் ஒரு லட்சம் ஏக்கராவது தேறும். ஏனென்றால், கடலோரப் பகுதி நிலங்களில் சூரிய மின் உற்பத்தி அவ்வளவாகச் செய்ய முடியாது என்கிறார்கள் வல்லுநர்கள்.


20,000 மெகாவாட் சூரிய மின்சாரம்... 3,60,000 பேருக்கு வேலைவாய்ப்பு!
இந்த ஒரு லட்சம் ஏக்கரில், 20,000 மெகாவாட் அளவுகொண்ட சூரிய மின் உற்பத்திக் கூரைகளை (Solar Panel) நாம் அமைக்கலாம். ஏனெனில், ஐந்து ஏக்கர் நிலத்தில் ஒரு மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். அப்படியானால், ஒரு லட்சம் ஏக்கருக்குத் தோராயமாக 20,000 மெகாவாட் மின்சாரம். ஒரு மெகாவாட் உற்பத்திக்குத் தேவைப்படும் மூலதனம் 3 முதல் 4 கோடி ரூபாய். இன்னொரு பக்கம் இது மிகப்பெரிய வேலைவாய்ப்பையும் ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உருவாக்கும். அதாவது, ஒரு மெகாவாட் மின் உற்பத்தி செய்ய ஐ.டி.ஐ மற்றும் டிப்ளோமா படித்த ஆறு தொழில்நுட்ப வல்லுநர்களும் 12 பராமரிப்புத் தொழிலாளர்களும் தேவைப்படுவார்கள். அப்படியே 20,000 மெகாவாட்டுக்குக் கணக்குப்போடுங்கள். 20,000 X 18. மொத்தம் 3,60,000 பேர். எனவேதான் முன்கூட்டியே சுதாரித்துக்கொண்டு அதானி நிறுவனம், உலகின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்திக் கூரையை, ராமநாதபுரத்தின் கமுதியில் அமைத்திருக்கிறது. அந்த மின்சாரம் யாருக்குப் பயன்படும் என்பதை நான் சொல்லவே வேண்டாம். ஆகவே, நாம் முந்திக்கொள்வது எல்லாவிதத்திலும் சிறந்தது!


ராமநாதபுரத்தைச் சூரிய மின் உற்பத்தி மையமாகப் புகழ்பெறச் செய்ய, தமிழ்நாடு அரசு தொழில்முனைவாளர்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டியதும் அவசியம். இங்கே எனக்கு ஒரு பழைய சம்பவம் நினைவுக்கு வருகிறது. 1979-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது, திண்டுக்கல் மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக இருந்தது. தொழில் வளர்ச்சி பெரிதாக இல்லை. ஆனால், ஜவுளித் தொழில் வேகமெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டன. இதை உணர்ந்த எம்.ஜி.ஆர் “திண்டுக்கல்லில் ஜவுளி ஆலை தொடங்குபவர்களுக்கு விற்பனை வரியிலிருந்து (Sales Tax) முழு விலக்கு அளிக்கப்படும்" என்று அறிவித்தார். அவ்வளவுதான். வயல்களில் அறுவடை முடிந்த அடுத்தநாள் ஆட்டுப்பட்டிகள் முளைப்பதைப்போல, திண்டுக்கல்லில் பரவலாக ஜவுளி ஆலைகள் முளைத்தன. இன்று திண்டுக்கல், ஜவுளித்துறையில் முன்னேறிய மாவட்டங்களில் ஒன்றாக உருமாறி நிற்கிறது. இதே பாணியைத்தான் இப்போது ராமநாதபுரத்துக்கும் செயல்படுத்த வேண்டும் என்று நான் கூறுகிறேன். என்ன ஒன்று, விற்பனை வரிக்கு விலக்கு அளிக்க முடியாது. ஏனென்றால், விற்பனை வரி விதிக்கும் உரிமையை GST வாயிலாக ஒன்றிய அரசிடம் நாம் பறிகொடுத்துவிட்டோம். எனவே, Capital மற்றும் SGST-ல் நிதிச் சலுகை அளிக்கலாம். SGST என்றால் மாநிலத்துக்கான GST வரி. அதாவது, மொத்த GST வரி 18% என்றால், அதில் 9% மாநிலத்துக்கு உரிமையானதாகும். இந்த 9% தொகையை, சரியான ரசீதைப் பெற்றுக்கொண்டு தொழில்முனைவாளருக்கு நாம் அளிக்கலாம்.

சூரிய மின் உற்பத்திக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் இன்னோர் அம்சம், ‘வல்லமை (Power)!’ உலகமே இன்று சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற, புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பின்னால் சென்றுகொண்டிருக்கிறது. நூறாண்டுகள் பழைமையான பென்ஸையும், பி.எம்.டபிள்யூ-வையும் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம்விட்டுக் கொண்டிருக்கிறது, இருபது வயதே ஆன டெஸ்லா. எனவே, ராமநாதபுரத்தின் சூரிய ஆற்றலைச் சரியாகப் பயன்படுத்தி, தமிழ்நாட்டை இந்திய ஒன்றியத்தின் வல்லமை பொருந்திய மாநிலமாக நாம் வளர்த்தெடுக்க முடியும். ஏற்கெனவே, மன்னார் வளைகுடா மற்றும் தீவுப் பகுதிகளில் கடல் காற்றாலைகள் அமைக்கும் திட்டம் தொடங்கப்படவிருக்கிறது. அதோடு, இந்தச் சூரிய சக்தி மின் தயாரிப்பும் இணைந்தால், தமிழ்நாட்டின் பேரம் பேசும் சக்தி (Demanding Ability) பல மடங்கு உயரும். துணை விளைவாக, தினமும் 2,500 மெகாவாட் மின்சாரத்தை வெளிச்சந்தைகளில் வாங்கவேண்டிய தேவையும் நம் மின்சார வாரியத்துக்கு ஏற்படாது. மேலும், வளத்தூரில் தினமும் 200 மெகாவாட் மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்து சுற்றுச்சூழலை நாசம் செய்துகொண்டிருக்கும் அரசு எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தையும் (Gas Turbine Power Station) படிப்படியாகப் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளச் செய்துவிடலாம்.
ராமநாதபுரத்தின் அடுத்த வளமும் வாய்ப்புகளும் என்னென்ன? அடுத்த இதழில்...
(இன்னும் காண்போம்)