மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 3 - ராமநாதபுரம் - வளமும் வாய்ப்பும்

ராமநாதபுரம்
News
ராமநாதபுரம்

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

கனவு - 3 - ராமநாதபுரம் - வளமும் வாய்ப்பும்

ராமநாதபுரத்தின் அடுத்த வளம் கடல்! பொதுவாகக் கடல் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருகிற விஷயம் மீன் பிடிப்பு மட்டுமே. ஒன்றிய அரசும் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் `One District One Product (ODOP)’ திட்டத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தின் வளமாகக் கருவாட்டை (Dry Fish) மட்டுமே பட்டியலிட்டிருக்கிறது. ஆனால், ராமநாதபுரத்தில் கடல் வளத்தை மையமாகவைத்து ஏராளமான தொழில்முனைவு வாய்ப்புகள் இருக்கின்றன!

சுரேஷ் சம்பந்தம்
ஒருங்கிணைப்பாளர் 
கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர் கனவு தமிழ்நாடு

கூண்டு மீன் வளர்ப்பும் குளிர்ப்பதனக் கிடங்கும்!

முதலாவதாக, `கூண்டு மீன் வளர்ப்பு’ (Cage Farming). அதாவது, படகில் கடலுக்குச் சென்று வலைவீசி மீன்களைப் பிடிக்காமல், கடலிலேயே ஒரு நன்னீர் பகுதியைத் தேர்ந்தெடுத்து, கூண்டுகளைப் பொருத்தி மீனை வளர்ப்பது. இதில் மீன் மட்டும் இல்லை. இறால் போன்ற மற்ற கடல்வாழ் உயிரினங்களையும்கூட வளர்க்கலாம். இதற்கு, ஒன்றிய அரசு நிறைய மானியமளித்து ஊக்குவித்துவருகிறது. நான் உரையாடிய ஒன்றிய அரசு அதிகாரி ஒருவர், “ஒரு மீன் கூண்டுக்குத் தோராயமாக 5 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இந்தக் கூண்டை பெண்களின் பெயரில் வாங்கினால் 60% தொகையும், ஆண்களின் பெயரில் வாங்கினால் 40% தொகையும் ஒன்றிய அரசு மானியமாக வழங்கும். மீதம் கையிலிருந்து செலவழிக்கவேண்டிய தொகைக்கும் கடனுதவி (Loan) போன்ற மற்ற வாய்ப்புகள் இருக்கின்றன” என்று சொன்னார். ஏற்கெனவே, ராமேஸ்வரம் பகுதியில் கூண்டு மீன் வளர்ப்பு வளர்ந்துவரும் தொழில்முனைவாக இருக்கிறது. முக்கியமாக, கடலுக்குச் செல்ல அனுமதிக்கப்படாத பெண்கள் அதில் அதிகம் ஈடுபட்டிருக்கிறார்கள். அதை இன்னும் விரிவுபடுத்தி அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்லலாம்.

அடுத்ததாக, ராமநாதபுரத்தில் கடல் சார்ந்து குளிர்ப்பதனக் கிடங்கு (Cold Storage) வசதிகளை ஏற்படுத்துவதும் முக்கியத் தொழில்முனைவு வாய்ப்பு. கடல் உயிரினங்களுக்கு மட்டுமல்ல, மிளகாய், மல்லிகை போன்ற விவசாயப் பொருள்களுக்கும் இந்தக் குளிர்ப்பதனக் கிடங்கு வசதி அத்தியாவசியமாக இருக்கிறது. இதை அரசு மட்டும்தான் முன்னின்று அமைக்க வேண்டுமென்று இல்லை. தனியார்களுக்கும் வாய்ப்புகளை வழங்கலாம். நியாயமான கட்டணத்தை மட்டும் நிர்ணயிக்க அரசு சில வழிமுறைகளை வெளியிடலாம். என் ஆய்வின்படி, மீன்களுக்காக ராமேஸ்வரத்திலும், மிளகாய்க்காகக் கடலாடியிலும், மல்லிகைக்காக மண்டபம் பகுதியிலும் குளிர்ப்பதனக் கிடங்குகள் உடனடித் தேவையாக இருக்கின்றன.

கனவு - 3 - ராமநாதபுரம் - வளமும் வாய்ப்பும்

ஒரே ஓர் இயந்திரம்... ஒன்பது மடங்கு லாபம்!

மீனுக்கான பதப்படுத்தலுக்கு மட்டும் குளிர்ப்பதனக் கிடங்கைத் தாண்டி இன்னொரு வசதி இருக்கிறது. அதன் பெயர் RSW (Refrigerated Sea Water). அதாவது, மீனைப்பிடித்து கரைக்குக் கொண்டுவந்து பதப்படுத்தாமல், படகிலேயே பதப்படுத்தி எடுத்துவரலாம். இந்த முறையில், கடல்நீரைக் குளிரூட்டியே நம்மால் மீன்களைப் பதப்படுத்த முடியும். இந்த இயத்திரத்தின் விலை 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை. இதனால் என்ன சிறப்பான பயன் என்றால், மீனவர்கள் ஒவ்வொரு மீனையும் கடலில் பிடித்து, அங்கேயே பதப்படுத்தி Sashimi Grade நிலைக்கு மாற்றி, கரைக்குக் கொண்டுவந்து ஏற்றுமதி செய்யலாம். உதாரணத்துக்கு, Yellowfin tuna என்றொரு மீன் வகை தமிழ்நாடு கடல் பகுதிகளில் கிடைக்கிறது. அதை அப்படியே பிடித்துக் கரைக்குக் கொண்டுவந்து விற்றால், கிலோவுக்கு 100 ரூபாய் மீனவர்களுக்குக் கிடைக்கும். ஆனால், மீனைப் படகிலேயே பதப்படுத்தி Sashimi Grade நிலையில் வெட்டிக் கொண்டுவந்து ஏற்றுமதி செய்தால், கிலோவுக்கு 1,000 ரூபாய் கிடைக்கும். ஒரே மீன்தான். ஒரே உழைப்புதான். ஆனால், ஒரே ஓர் இயந்திரத்தின் மூலம் ஒன்பது மடங்கு அதிக வருமானத்தை மீனவர்கள் பார்க்க முடியும். இனிமேல் ராமநாதபுரம் என்றில்லாமல், தமிழ்நாட்டின் அத்தனை கடல் மீன்பிடிப் படகுகளிலும் இந்த RSW போன்ற பதப்படுத்தும் இயந்திரத்தை இணைப்பதைப் பற்றி அரசு சிந்திக்க வேண்டும்.

Sashimi Grade நிலையில் கிலோவுக்கு 1,000 ரூபாய்!
Sashimi Grade நிலையில் கிலோவுக்கு 1,000 ரூபாய்!
அப்படியே விற்கும்போது, கிலோவுக்கு 100 ரூபாய்!
அப்படியே விற்கும்போது, கிலோவுக்கு 100 ரூபாய்!

கப்பல் உடைக்கும் தளம்... காலத்தின் கட்டாயம்!

ராமநாதபுரத்தில் கடல் சார்ந்து நான் ஆய்வு மேற்கொள்கையில், அதிகம் பேர் குறிப்பிட்டது `வாலிநோக்கம் கப்பல் உடைக்கும் தளம்.’ தொடர்ச்சியாக அந்த வார்த்தை காதில் விழுந்துகொண்டிருந்ததால் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டேன். பிறகு ஆராய்ச்சியைத் தொடங்கினேன். வாலிநோக்கம் கப்பல் உடைக்கும் துறைமுகம், சுற்றுச்சூழல் காரணங்களுக்காக 30 வருடங்களுக்கு முன்னரே மூடப்பட்டுவிட்டது. ஆரம்பகட்டத்தில்கூட அங்கே பெரிய அளவில் கப்பல் வருகை என எதுவுமில்லை. ஒன்றிரண்டு கப்பல்களே வந்திருக்கின்றன. பணிபுரிந்த தொழிலாளர்களும் 30 - 40 பேர்தான். ஆனால், இன்றைக்கு நம்மால் வாலிநோக்கம் கப்பல் உடைக்கும் தளத்தை நவீன முறையில் புதுப்பித்துத் திறக்க முடியும். அதற்குத் தேவையும் இருக்கிறது. ஏனென்றால், தமிழ்நாட்டுக்குள் அரசு கண்காணிப்புடன் செயல்படும் எந்தக் கப்பல் உடைக்கும் தளமும் பயன்பாட்டில் இல்லாததால், பெரும்பாலான கப்பல்களும் பெரும்படகுகளும் கடலிலேயே மூழ்கடிக்கப்படுகின்றன. மேலும் அவை கேரளாவுக்கும் இலங்கைக்கும் அடிமாடுகளைப்போலக் குறைந்த விலைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. எனவே, வாலிநோக்கம் கப்பல் உடைக்கும் தளத்தை மீண்டும் திறப்பது காலத்தின் கட்டாயமாகிறது.

சரி, என்னென்ன தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகள் கப்பல் உடைப்பில் புதிதாக வந்திருக்கின்றன?

கூண்டு மீன் வளர்ப்பு
கூண்டு மீன் வளர்ப்பு
கப்பல் உடைக்கும் தளம்
கப்பல் உடைக்கும் தளம்

Green Ship Recycling: இந்த முறைதான் இப்போது வளர்ந்த நாடுகளெங்கும் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. இதில், எக்காரணத்தைக்கொண்டும் கப்பல் கடற்கரையில் நிறுத்தி உடைக்கப்படாது. முழுக்க முழுக்க உலர்ந்த தரைப்பகுதிக்கு ராட்சத கிரேன்கள் மூலம் கொண்டுவரப்பட்டுவிடும். அதை `Dry - Dock’ என்கிறார்கள். மேலும், கப்பலிலிருந்து வெளியேறும் நச்சுத் தனிமங்களும் வாயுக்களும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்படும். இந்த முறையில் கப்பலைக் கைகளால் உடைக்கும் செயலுக்கும் முழுக்கத் தடை. மிக சக்திவாய்ந்த, அளவில் பெரிய வெல்டிங் இயந்திரங்களைக் கொண்டே கப்பல்கள் உடைக்கப்படும்.

Green Passport: இந்த முறை, கப்பல் முதலாளிகளுக்கானது. அவர்கள் கப்பலை வாங்கும்போதே, கப்பலில் எந்தெந்தப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்று கப்பல் உற்பத்தி நிறுவனத்திடமிருந்து சான்றிதழ் பெற வேண்டும். அதுதான் கிரீன் பாஸ்போர்ட். இந்த கிரீன் பாஸ்போர்ட், கப்பல் ஒவ்வொரு முறை பழுது நீக்கத்துக்குச் செல்லும்போதும் புதுப்பிக்கப்படும். நாம் வண்டிகளுக்கு FC பெறுவோம் அல்லவா, அதேபோல. பிறகு, கப்பல் உடைப்புக்காகச் செல்லும்போது கிரீன் பாஸ்போர்ட் இருந்தால்தான் உள்ளேயே அனுமதிப்பார்கள்.

இந்த நவீன கப்பல் உடைக்கும் துறையிலும் புதிய Startup-கள் வந்துவிட்டன. முக்கியமான இரண்டு நிறுவனங்களை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். ஒன்று, Greig Green. இன்னொன்று, Leela World Wide. இவற்றில், Leela World Wide இந்திய நிறுவனம். குஜராத்தைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கிக்கொண்டிருக்கிறது. வேண்டுமானால், இந்த நிறுவனங்களின் வழிகாட்டுதல்களைப் பெற்றோ, இந்த நிறுவனங்களுடனேயேகூட ஒப்பந்தம் போட்டோ வாலிநோக்கம் கப்பல் உடைக்கும் தளத்தைப் புதுப்பிக்கலாம். ஆனால், அதற்கு முன்னால் அந்தப் பகுதி மக்களின் கருத்தையும் கேட்டுக்கொள்வது அவசியமானது. அவர்கள் வேண்டாம் என்றால் வேண்டாம். வேண்டும் என்றால் வேண்டும்!

சூயஸ் கால்வாய்
சூயஸ் கால்வாய்
பனாமா கால்வாய்
பனாமா கால்வாய்

‘சேது சமுத்திரத் திட்டம்’ எனும் பெருங்கனவு!

சேது சமுத்திரத் திட்டத்தைத் தொடாமல் ராமநாதபுரம் மாவட்டம் பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதிவிட முடியாது. ஏனென்றால், அது நவீன தமிழ்நாட்டின் தந்தையான கலைஞர் கருணாநிதியின் பல ஆண்டுக் கனவு. பாக் நீரிணையிலிருந்து மன்னார் வளைகுடா வரை ஆடம்ஸ் பாலத்தின் குறுக்கே கப்பல்கள் செல்ல கால்வாய் அமைக்கும் திட்டமே சேது சமுத்திரத் திட்டம். உலகில் இதுபோல ஏற்கெனவே பனாமா கால்வாய், சூயஸ் கால்வாய் போன்ற கால்வாய்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கால்வாய்கள் நவீன பொறியியல் மற்றும் பொருளாதாரச் சாத்தியங்களின் மிகப்பெரும் சாதனைகளாகவும் பார்க்கப்படுகின்றன. இதேபோல சேது சமுத்திரம் கால்வாயையும் நாம் நிலைநிறுத்த முடியும்.

முதன்மையாக, சேது சமுத்திரத் திட்டம் செயல்பாட்டுக்கு வருவதால், இந்திய ஒன்றியத்துக்குத்தான் பெரும் நன்மை. அதாவது, இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பகுதியை சர்வதேசக் கப்பல்களும், உள்நாட்டுக் கப்பல்களும் ஒருசேரப் பயன்படுத்தி வருகின்றன. சேது சமுத்திர திட்டம் அமைந்தால், அந்தக் கப்பல்கள் அனைத்துமே வீணாக இலங்கையைச் சுற்றிக்கொண்டு செல்வது தடுக்கப்பட்டு, நேரடியாக தூத்துக்குடி துறைமுகத்துக்கும், சென்னை துறைமுகத்துக்கும் வர முடியும். இதனால், ஏறக்குறைய 36 மணிநேரக் கூடுதல் பயணம் தவிர்க்கப்பட்டு, எரிபொருள் மிச்சமாகும். கூடவே, கப்பல்களுக்கு Toll Fee வசூலிப்பதன் மூலமும், அந்நியச் செலாவணி மூலமும் இந்தியக் கருவூலத்துக்கு வருமானமும் அதிகரிக்கும். இதனால்தானோ என்னவோ, “வேறு வழிகளில் சேது சமுத்திரத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்வோம்” என்று தற்போதைய ஒன்றிய அரசு, உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்திருக்கிறது. இந்த ஒன்றிய அரசுதான் சேது சமுத்திரத் திட்டத்தை மதக் கதையாடல் ஒன்றைக் காரணம் காட்டி முன்பு மறுத்தவர்கள். அவர்களே இறங்கி வந்திருப்பது நல்ல அறிகுறி.

அடுத்ததாக, சேது சமுத்திரத் திட்டத்தால் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் ஆதிக்கம் சந்தேகத்துக்கு இடமின்றி உறுதிப்படுத்தப்படும். தற்போதைக்கு எல்லாக் கப்பல்களும் இலங்கையைச் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியிருப்பதால், தூத்துக்குடி மற்றும் சென்னை துறைமுகத்துக்கு பதிலாக கொழும்பு துறைமுகத்தில் மையம்கொள்கின்றன. இது இலங்கை அரசுக்கு அபாரத் துணிச்சலை அளித்துக்கொண்டிருக்கிறது. சீனாவின் உதவியுடன் கொழும்பு துறைமுக நகரத்தையும் (Colombo Port City) பிரமாண்டமாக அவர்கள் உருவாக்கிவருகிறார்கள். அங்கே சீன முதலீட்டுடன் வெளிநாட்டினருக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகளும், பொழுதுபோக்குத் தலங்களும் வேகமாக அணிவகுத்துவருகின்றன. இவை எல்லாவற்றையும் சேது சமுத்திரத் திட்டத்தால் சில ஆண்டுகளுக்குள் நாம் பயனற்றதாக ஆக்க முடியும். அருணாச்சலப்பிரதேச எல்லையில் சீனா நமக்குத் தொடர்ச்சியாகக் கொடுக்கும் குடைச்சலுக்கும், சேது சமுத்திர நடவடிக்கை தகுந்த பதிலடியாக அமையும்!

கனவு - 3 - ராமநாதபுரம் - வளமும் வாய்ப்பும்

ஆனால், சேது சமுத்திர திட்டத்தால் உருவாகும் சுற்றுச்சூழல் மற்றும் மீனவர்களுக்கான பாதிப்புகளை மட்டும் நாம் அதிகம் கவனமெடுத்துப் பார்க்க வேண்டும். National Environmental Engineering Research Institute அறிக்கையின்படி, பாக் நீரிணைக்கும் மன்னார் வளைகுடாவுக்கும் இடைப்பட்ட 10,500 சதுர கிலோமீட்டர் பரப்பு மிக முக்கியமான கடல் வளப் பகுதியாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அதேபோல, அந்தப் பகுதியில் மீன் வளமும் வியக்கத்தக்க அளவில் உள்ளது. என்னிடம் பேசிய சில ராமநாதபுரம் மீனவர்கள், “நாங்க பிடிக்கிற 10 மீன்ல அஞ்சு மீன் மன்னார் வளைகுடாவுல பிடிக்கிறதுதான் சார். அதுலயே கையைவெச்சா எப்படி ஏத்துக்க முடியும்...” என்று கொதித்தார்கள். மேலும், சேது சமுத்திர திட்டம் அமலாகி, கப்பல் போக்குவரத்து அதிகரிக்கத் தொடங்கும்போது, அரசுக்கும் முதலாளிகளுக்கும் நடுவே மீனவர்கள் எந்த இடத்தில் வைக்கப்படுவார்கள் என்பதும் பெரிய கேள்விக்குறி. இவற்றுக்கெல்லாம் உரிய தீர்வு கண்டுபிடித்த பிறகு, சேது சமுத்திரத் திட்டத்தைத் தைரியமாக நடைமுறைப்படுத்தலாம்!

(இன்னும் காண்போம்)