மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 4 - ராமநாதபுரம் - வளமும் வாய்ப்பும்

கனவு - ராமநாதபுரம்
News
கனவு - ராமநாதபுரம்

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

கனவு - 4 - ராமநாதபுரம் - வளமும் வாய்ப்பும்

ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய வளங்களும் வாய்ப்புகளுமான பனை, மிளகாய், மல்லிகைப் பூ, சூரிய ஒளி, மீன், கப்பல் உடைக்கும் தளம், சேது சமுத்திரத் திட்டம் உள்ளிட்டவற்றைக் குறித்து, கடந்த மூன்று பகுதிகளில் விரிவாகப் பார்த்தோம். இறுதியாக, ராமநாதபுரத்தின் இன்றியமையாத வளமான ‘சுற்றுலா’ குறித்துப் பார்ப்போம்!

சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர் கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர் கனவு தமிழ்நாடு

மும்மதங்களின் சங்கமம்... ஆன்மிகச் சுற்றுலாத்தலம்!

ராமநாதபுரம், தமிழ்நாட்டின் அதி முக்கியமான ஆன்மிகச் சுற்றுலா மண். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என மும்மதங்களின் சங்கமமாக நிறைய ஆன்மிகத் தலங்கள் வரிசையாக அங்கு அமைந்திருக்கின்றன. ராமநாதசாமி ஆலயம், இந்திய அளவில் புகழ்பெற்ற ஆன்மிகத் தலம். காசிக்கு நிகராக அது இந்துமதப் பற்றாளர்களால் மதிக்கப்படுகிறது. இது தவிர, உத்தரகோசமங்கை சிவன் ஆலயம், ராமர் பயணித்ததாகச் சொல்லப்படும் பாலம், திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதர் ஆலயம், தேவிப்பட்டினம் நவகிரக ஆலயம் ஆகிய தலங்களும் புகழ்பெற்ற தலங்களே. “ராமேஸ்வரத்துக்குச் சென்று கடலில் கால் நனைக்க வேண்டும்” என்று ஒரு யாத்ரீகர் கிளம்பினால், கண்டிப்பாக இந்த ஆன்மிகத் தலங்களில் இரண்டையேனும் பார்த்துவிட்டுத்தான் வீடு திரும்புவார். எனவே, இந்தத் தலங்களை இணைத்து Allied Tourism- ஐ வளர்க்கும் வகையில் ‘டூர் பஸ்’ வசதியை ஏற்படுத்தலாம். டூர் பஸ் என்றால், ஒட்டுமொத்தமாகப் பல பகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் சென்று சுற்றிக் காண்பிக்கும் பஸ். லண்டனில் இது போன்ற ‘லண்டன் டூர் பஸ்’ஸை அடிக்கடி பார்க்க முடியும். திருப்பதியிலும் அமலில் இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். இதை ராமேஸ்வரத்தைச் சுற்றிய ஆன்மிகச் சுற்றுலாத்தலங்களுக்கு இயக்கத் தொடங்கலாம்.

கீழக்கரை ஜும்மா பள்ளிவாசல்!

இந்தியாவிலேயே இரண்டாவது பழைய பள்ளிவாசலான கீழக்கரை ஜும்மா பள்ளிவாசல், ராமநாதபுரத்தின் ஆன்மிகப் பெருமைக்கு வலுசேர்க்கும் இன்னொரு தலம். இந்தப் பள்ளிவாசல், இன்னும் தமிழ்நாடு சுற்றுலாத்துறையால் சரியாக விளப்பரப்படுத்தப்படவில்லை. தமிழ்நாட்டு இஸ்லாமியர்களிலேயே பல பேருக்கு இது பற்றித் தெரியாது. ஆக, கீழக்கரை ஜும்மா பள்ளிவாசலை இனி தீவிரமாக விளம்பரப்படுத்த வேண்டும். அப்படி விளம்பரப்படுத்தினால், தென் தமிழ்நாட்டின் முக்கிய இஸ்லாமிய ஆன்மிகச் சுற்றுலாத்தலமாக கீழக்கரை ஜும்மா பள்ளிவாசல் மாறும். இதே போன்றதுதான் ஏர்வாடி தர்காவும். ஆனால் ஏர்வாடி, ஆன்மிகத்தோடு மருத்துவமும் கலந்த ஒரு தனித்துவமான தலம். கிட்டத்தட்ட `Doctor Strange’ திரைப்படத்தில் வரும் பெளத்த மடாலயம் போன்றது. இங்கு போக்குவரத்தும் தங்குமிடங்களும்தான் பெரிய பிரச்னைகளாக இருக்கின்றன. நிறைய நேரங்களில் தர்கா வளாகத்திலேயே யாத்ரீகர்களும் நோயாளிகளும் படுத்து உறங்கவேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதை இஸ்லாமிய அமைப்புகளும், சுற்றுலாத்துறையும் கவனத்தில் எடுத்து விரைந்து சீர்ப்படுத்தினால், பயணிகளின் வருகை அதிகரிக்கும்.

சர்ஃபிங்
சர்ஃபிங்
ஆடம்ஸ் பாலம்
ஆடம்ஸ் பாலம்
 தனுஷ்கோடி தேவாலயம்
தனுஷ்கோடி தேவாலயம்

தனுஷ்கோடி எனும் தனித்துவமான தலம்!

புயலில் அழிந்த தனுஷ்கோடி இன்னுமொரு சுற்றுலாத்தலம்தான். நாம் நினைத்தால், தனுஷ்கோடியை உலக அளவில் தனித்தன்மை கொண்ட சுற்றுலாத்தலமாக மாற்றலாம். கம்பீரமாக உயர்ந்து நிற்கும் கட்டுமானங்கள் சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை எப்படி ஈர்க்குமோ, அதேபோல சிதிலமடைந்து கிடக்கும் எச்சங்களும் சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை ஈர்க்கும். அதற்குச் சிறந்த உதாரணம், ஜப்பானின் ஹிரோஷிமா நகரம். இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்கா வீசிய அணுகுண்டால், முற்றிலும் சிதைந்த நகரம் அது. ஆனால், இன்று ஜப்பானின் முக்கியச் சுற்றுலா நகரமாக ஹிரோஷிமா திகழ்கிறது. காரணம், ஹிரோஷிமாவின் அத்தனை இடிபாடுகளையும் அட்டகாசமாகப் பராமரித்துவருகிறார்கள் ஜப்பானியர்கள். முக்கியமாக, `அணுகுண்டு கும்பம்’ (Atomic Bomb D2ome) என்றழைக்கப்படும் கட்டடம், சுற்றுலாப்பயணிகளை வெகுவாகக் கவர்ந்துகொண்டிருக்கிறது. அதேபோல, நாமும் தனுஷ்கோடி நகரத்தைப் பராமரிக்கத் தொடங்கலாம். தனுஷ்கோடியின் சிதைந்த தேவாலயம், படகுகள், ரயில் நிலையம் ஆகிய அனைத்துக் கட்டுமானங்களையும் பழைமை மாறாமல் புதுப்பிக்கலாம். புதுப்பித்து, அவற்றைத் தரமான புகைப்படைக் கலைஞர்களை வைத்துப் படம்பிடித்து www.visitdhanushkodi.com என்ற இணையதளத்தை உருவாக்கி, சிறிய வரலாற்றுக் குறிப்புகளுடன் பதிவேற்றலாம். மேலும், ஹிரோஷிமாவின் அணுகுண்டுக் கும்பத்துக்கு ஜப்பான் அரசு ‘யுனெஸ்கோ (UNESCO)’ அங்கீகாரம் பெற்றதைப்போல, நாமும் தனுஷ்கோடியின் தேவாலயத்துக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெறலாம்.

ஸ்கூபா டைவிங்
ஸ்கூபா டைவிங்
காயக்கிங்
காயக்கிங்
பாரா செயிலிங்
பாரா செயிலிங்

Off - Road வாகனச் சேவை!

அதிக சுற்றுலாப்பயணிகளும் ஆராய்ச்சியாளர்களும் தனுஷ்கோடிக்கு வர நேரும்போது, சரியான போக்குவரத்து வசதிகளும், பொழுதுபோக்கு வசதிகளும் இருக்கவேண்டியது முக்கியம். 2017-ம் ஆண்டு தனுஷ்கோடிக்குப் பேருந்து சேவை தொடங்கப்பட்டுவிட்டாலும், இன்னும் போதுமான பேருந்துகள் இல்லை. இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். குறிப்பாக, சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை ஈர்க்க Off - Road வாகனச் சேவையைத் தொடங்கலாம். Off Road வாகனம் என்றால், மணற்பரப்பில் ஓட்டுவதற்காகவே பெரிய டயர்களுடன் வடிவமைக்கப்படும் வாகனம். இந்த வாகனத்தை ராமேஸ்வரம் டு தனுஷ்கோடி கடற்கரை மணற்பரப்புகளில் இயக்கலாம். ஒரு வாகனம் 6 - 7 லட்சம் ரூபாய் வரை வரும். ஒரு நாளில் 10-லிருந்து 15 டிரிப் அடிக்கலாம். ஒரு டிரிப்புக்கு 3,000 ரூபாய் என்று கட்டணம் நிர்ணயித்தால், ஒரு நாளைக்கு 50,000 வரை வருமானம் ஈட்டலாம். இதையே ஐந்து வண்டிகளை மொத்தமாக வாங்கிப்போட்டு இயக்கினால், அதுவொரு சிறிய Off - Road வாகனச் சேவை நிறுவனமாக மாறிவிடும். எப்படியும் மாதத்துக்கு 2-லிருந்து 3 லட்சம் ரூபாய் வரை, அந்த நிறுவனம் லாபம் பார்க்கும்.

கீழக்கரை ஜும்மா பள்ளிவாசல்
கீழக்கரை ஜும்மா பள்ளிவாசல்
கனவு - 4 - ராமநாதபுரம் - வளமும் வாய்ப்பும்
தனுஷ்கோடி
தனுஷ்கோடி
கனவு - 4 - ராமநாதபுரம் - வளமும் வாய்ப்பும்

‘அரியமான்’ கடற்கரையும் நீர்ப் பொழுதுபோக்கு விளையாட்டுகளும்!

ராமநாதபுரம் நகர்ப்புறத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவு பயணித்தால், அரியமான் கடற்கரைக்குச் செல்லலாம். இந்தக் கடற்கரை, சீரான அலைகளுக்கு மிகவும் சிறப்பு பெற்றது. இங்கே தனியார் பங்களிப்புடன் பாரா செயிலிங் (Parasailing), சர்ஃபிங் (Surfing), காயக்கிங் (Kayaking) படகு சவாரி, ஸ்கூபா டைவிங் (Scuba Diving) போன்ற நீர்ப் பொழுதுபோக்கு விளையாட்டுகளைத் தொடங்கலாம். ஏற்கெனவே, தமிழ்நாடு சுற்றுலாத்துறை சில அடிப்படைப் பணிகளைத் தொடங்கியிருக்கிறது. ஒரு முன்னோட்ட வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார்கள். அதற்காக என் மனமார்ந்த பாராட்டுகள். ஆனால், இந்த விளையாட்டுகளுக்குத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் விதிமுறைகளையும் கொண்டுவரவேண்டியது அவசியம். முறையான பயிற்சியாளர்கள், கடற்கரைக் காவலர்கள் (Beach Guards) என எல்லோருமே தேவை. அரசு விரைந்து செயல்படுத்தும் என்று நம்புகிறேன்.

இத்துடன் ‘கனவு’ தொடரில், ராமநாதபுரம் மாவட்ட அத்தியாயம் முடிந்தது நண்பர்களே!

இதில் குறிப்பிட்டிருக்கும் வளங்கள் எல்லாமே, ஒரு மாதகால அளவுக்குள் கள ஆய்வுசெய்து நான் கண்டறிந்தவை. இதற்கு மேற்பட்டும் நிறைய வளங்கள் ராமநாதபுரத்தில் இருக்கலாம். ஏனெனில், வளங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட எல்லை என்று எதுவுமில்லை. அப்படி விடுபட்டவை இருந்தால் நீங்கள் தாராளமாக எனக்கு எழுதலாம். நான் அடுத்த அத்தியாயத்தில் அவற்றை இணைத்து, பொதுச் சமூகத்துக்கும் அரசுக்கும் கொண்டுசேர்ப்பேன்.

முக்கியமாக, இந்த ஆய்வுப் பயணத்தில் ராமநாதபுரத்தின் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சிப் பிரதிநிதிகள், தொழில்துறைப் பிரமுகர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், தன்னார் வலர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் எனக்கு உதவினார்கள். அவர்கள் இல்லையென்றால், இந்தப் பணி இன்னும் அதிக காலம் எடுத்திருக்கும். அவர்களுக்கு என் சிறப்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடைசியாக, ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். தமிழ்நாட்டிலிருந்து வளைகுடா நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் தொடக்கநிலை வேலைகளுக்குச் செல்வோரில், ராமநாதபுரம் மாவட்டத்தினரே முன்னணி வகிக்கிறார்கள். இனியும் அந்தநிலை தொடரக் கூடாது என்று நான் விரும்புகிறேன். ராமநாதபுரம் எங்கும் நான் இப்போது பட்டியலிட்டுக் காட்டியிருக்கும் வளங்களைப் பயன்படுத்தி, அவர்கள் முன்னெழுந்து வர வேண்டும். சென்னைக்கும் கோயம்புத்தூருக்கும் நிகராகத் தொழில் வளர்ச்சியில் பலம்பெற்று நிற்க வேண்டும்.

பிறகு பாருங்கள்… திரைப்படத்தில் அல்ல, எங்கும் யாரும் ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாகக் காட்டவோ, சொல்லவோ துணிய மாட்டார்கள்!

(இன்னும் காண்போம்)

நம் அடுத்த கனவு திருவண்ணாமலை!