சமூகம்
அரசியல்
Published:Updated:

மனிதர் வாழ தகுதியற்ற பூமியா ராணிப்பேட்டை?

கழிவுநீர் கலந்து காணப்படும்  ஆற்றுநீர்
பிரீமியம் ஸ்டோரி
News
கழிவுநீர் கலந்து காணப்படும் ஆற்றுநீர்

பாலாறும் பொன்னையாறும் சங்கமிக்கும் பகுதியில் அமைந்துள்ள ராணிப்பேட்டை, வளமான விவசாய பூமி.

‘‘இந்தியாவிலேயே மிகவும் மாசடைந்த தொழில் நகரங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் ராணிப்பேட்டை வந்துவிட்டது! இதே நிலை நீடித்தால், இன்னும் சில ஆண்டுகளில் மனிதர்கள் வாழத் தகுதியற்ற நகரமாக ராணிப்பேட்டை மாறிவிடும்’’ என்று எச்சரிக்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.

ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை

பாலாறும் பொன்னையாறும் சங்கமிக்கும் பகுதியில் அமைந்துள்ள ராணிப்பேட்டை, வளமான விவசாய பூமி. 1967-ம் ஆண்டில் ‘சிப்காட்’ அமைப்பதற்காக ராணிப்பேட்டை பகுதியில் காரை, மணியம்பட்டு, நரசிங்கபுரம், வாணாபாடி, முகுந்தராயபுரம் ஆகிய கிராமங்களில் 710 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தியது தமிழக அரசு. தொடர்ந்து, பல்வேறு ரசாயன தொழிற்சாலைகளும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் தொடங்கப்பட்டன. இந்த நிறுவனங்கள் எந்தவிதமான கட்டுப்பாடுமின்றி கழிவுகளை நிலத்திலும் நீர்நிலைகளிலும் விடுவதால், ராணிப்பேட்டை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருகிறது. சுமார் 50 ஆண்டுகளாக இந்த அவலம் தொடர்கிறது.

கோபி சத்தியராஜன், அருள்ராமன்
கோபி சத்தியராஜன், அருள்ராமன்

சிப்காட் பகுதியில் முதலில் தொடங்கப்பட்ட நிறுவனம், ‘திருமலை கெமிக்கல்ஸ்’. இந்த நிறுவனம் காரை ஏரி, புளியங்கண்ணு ஏரி மற்றும் பாலாறு போன்ற நீர்நிலைகளில் கழிவுநீரைத் திறந்துவிடுவது, செயற்கைக்கோள் புகைப்படம்மூலம் உறுதிசெய்யப்பட்டது. அதனால், 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த நிறுவனம்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, 18,06,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, ‘ராணிப் பேட்டையை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் குறித்து ஆய்வுசெய்ய வேண்டும்’ என மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

அதன்படி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில், ‘சிப்காட் வளாகத்தில் திருமலை கெமிக் கல்ஸ் நிறுவனம், மல்லாடி ட்ரக்ஸ் நிறுவனத்தின் இரண்டு தொழிற்சாலைகள், அல்ட்ரா மரைன் பிக்மென்ட்ஸ் நிறுவனம், தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கான இரண்டு மத்திய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவை சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்திவருகின்றன’ என்று பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது. அந்த ஆறு நிறுவனங்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 23 சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கும் சேர்த்து மொத்தம் 75 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சூழல் மாசுபாடு பாதிப்புகளைக் கண்டறிய ஒரு நிபுணர் குழுவை அமைத்து, இழப்பீடு பெறுவதற்கான நடவடிக்கை களையும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் எடுத்துவருகிறது.

இதுகுறித்துப் பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர் கோபி சத்தியராஜன், ‘‘மேற்கண்ட நிறுவனங்களால் எட்டு கிராமங்களில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல ஏரிகளில் நீரின் நிறம் சிவப்பாக மாறி விட்டது. நிலத்தடிநீரைக் குடிப்பவர்களுக்கு தோல் அரிப்பு, சுவாசப் பிரச்னை, புற்றுநோய் போன்றவை ஏற்படுகின்றன. நிலமும் நீரும் மாசுபட்டதால் காரை, புளியங்கண்ணு, தண்டலம், வாணாபாடி, நரசிங்கபுரம், செட்டித்தாங்கல், மாந்தாங்கல் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயம் கேள்விக்குறி யாகிவிட்டது.

காந்தி, திவ்யதர்ஷினி
காந்தி, திவ்யதர்ஷினி

பாலாறும் பொன்னையாறும் இணையும் நவ்லாக், தெங்கால் ஆகிய பகுதிகளிலிருந்து பல தொழிற்சாலைகள் வரையறையின்றி தண்ணீரை உறிஞ்சி எடுக்கின்றன. கழிவுநீரைச் சுத்திகரித்துப் பயன்படுத்த வேண்டும் என்ற விதியை எந்த நிறுவனமும் கடைப்பிடிப்பதில்லை. சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்களை நிரந்தரமாக மூட வேண்டும். அபராதம் விதிப்பதால் பலன் இல்லை’’ என்றார்.

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் ‘மூன்றெழுத்து’ அருள்ராமன், ‘‘ராணிப்பேட்டையில் சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தும் நிறுவனங்களிடம் அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும் மாதாமாதம் கட்சி நிதி வாங்கிவிடுகிறார்கள். இந்தப் பகுதி, 70 சதவிகித அளவு அபாயகரமான பகுதி என அறிவிக்கப்பட்டிருப்பதால், இங்கு இனி தொழில் தொடங்க அனுமதி அளிக்கவே கூடாது’’ என்றார்.

ராணிப்பேட்டை தொகுதி தி.மு.கழக எம்.எல்.ஏ-வான காந்தி, ‘‘இந்தப் பிரச்னைகுறித்து சட்ட மன்றத்தில் பலமுறை பேசியிருக்கிறேன். அதிகாரிகள் சரியில் லாததால்தான் தவறுகள் நிகழ்கின்றன’’ என்றார்.

புகாருக்குள்ளான மல்லாடி ட்ரக்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் ரவீந்திரனிடம் பேசினோம். ‘‘இந்தியாவே மாசுபட்டுதான் கிடக்கிறது. டெல்லி, சென்னையிலிருந்து மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் எங்களை கண்காணித்துக்கொண்டு இருக்கின்றனர். அப்படியிருக்கும்போது எப்படி தவறு செய்ய முடியும்? பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற புகார் உண்மைக்குப் புறம்பானது. இதுபோன்ற மாசடைந்த நகரில் உள்ள நிறுவனங்களுக்கு அபராதம் விதித்திருக்கும் பசுமைத் தீர்ப்பாயத்தின் நடவடிக்கையையும் நாங்கள் விமர்சிக்கத் தயாராக இல்லை’’ என்றார்.

கழிவுநீர் கலந்து காணப்படும்  ஆற்றுநீர்
கழிவுநீர் கலந்து காணப்படும் ஆற்றுநீர்

திருமலை கெமிக்கல்ஸ் நிறுவன அதிகாரிகளை தொடர்புகொண்டு புகார் குறித்துக் கேட்டதற்கு, பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

புதிதாக உருவாகியிருக்கும் ராணிப் பேட்டை மாவட்டத்தின் கலெக்டராகப் பொறுப்பேற்றிருக்கும் திவ்யதர்ஷினி யிடம் பேசியபோது, ‘‘இதற்கு முன் நடந்ததை விட்டுவிடுங்கள். வருங்காலத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யார் வேண்டுமானாலும் தைரியமாக என்னிடம் புகார் அளிக்கலாம்’’ என்றார்.

புது மாவட்டம், புது ஆட்சியர், புதிய உற்சாகம். நம்பிக்கையோடுப் பேசுகிறார், ‘நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று!

காத்திருப்போம், நம்பிக்கையோடு!