
ஆரம்பத்தில் என்னைக் கலைஞனாகக்கூட ஒப்புக்கொள்ளாத சிலர் என்னை அடையாளப்படுத்த ‘தலித் ராப்பர்’ என கேலியாக அழைக்க ஆரம்பித்தனர்.
“நான் தெசியா பிலா, தெற்கு ஒடிசாக்காரன். கோராபுட்டில் இருந்து வர்றேன். ஒடிசாவின் மேட்டுக்குடிச் சமூகத்துக்கு, நாங்க நாகரிகம் இல்லாதவங்க, காட்டுவாசிங்க, மாவோயிஸ்டு பிரச்னையோட மையம் அவ்ளோதான்! அவங்க மேப்பைத் தாண்டி வரச் சொல்லு! கானா பாஜா, சோய்த் போரோப், மாண்டியா பேஜ், தேம்ஸா, மச்சுகுந்த், இந்திராவதி, தியோமலி, கோலாப் எல்லாம் எங்களுக்கென்ன தெரிஞ்சுகிட்டு புரிஞ்சுக்கச் சொல்லு! தெசியா பிலா, ஏரியா காலி! நான் இப்ப போராளி!”
‘ராப்’ எனப்படும் சொல்லிசைப் பாடலின் உக்கிர வரிகள் இவை. ஒடிய மொழியில் கவிதை போலவும், கோபத்தில் வெடிக்கும் வார்த்தைக்குவியல் போலவும் இருந்தாலும் ரிதம் எனப்படும் தாளத்துக்குள் இருப்பதால் இதைக் கேட்கக் கேட்க இந்த இசை நம்மையும் கட்டிப்போடுகிறது.
எங்கெல்லாம் ஒடுக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படுகிறதோ அங்கெல்லாம் கலையின் மூலம் எதிர்ப்பு ஊற்றெடுக்கும் என்பதற்கு சாட்சிதான் வட இந்திய கிராமங்களில் கிளம்பியிருக்கும் புதிய இசை வடிவமான இந்த ‘ராப்’ இசை! இதைப்பாடும் அனைவரும் சூடான இளம் ரத்தங்கள்... நிஜ ‘கல்லி பாய்ஸ்!’
‘தலித் ராப்பர்ஸ்’ என்று தங்களை அழைத்துக்கொள்ளும் இவர்களின் சொல்லிசைப்பாடல்கள் இப்போது யூடியூப் கைங்கர்யத்தால் உலகமெங்கும் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது!

சுமீத் சமோஸ் என்ற 28 வயது இளைஞர்தான் இந்த ‘தலித் ராப்பர்ஸ்’ என்ற சொல்லின் ஆரம்பப்புள்ளி. டெந்துலிபதர் என்ற ஒடிசாவின் பின்தங்கிய கோராபுட் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்து இளைஞர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முதுகலை மாணவர். ஆங்கிலம், இந்தி மற்றும் ஒடிய மொழிகளில் பாடும் இவர் ஹிப்ஹாப், ராப் இசைப் பாடகராக வளர்ந்த கதை வேதனை மிகுந்தது. “சிறுவயதில் சாலையில் நடந்துசென்றபோது ஒருமுறை கிரிமினல் என சந்தேகக் கேஸில் என்னைக் காவல் நிலையம் அழைத்துச் சென்றது போலீஸ். காரணம், ஒடுக்கப் பட்ட மக்கள் வாழும் ஊரைச் சேர்ந்த நான் கெட்டவனாக இருப்பேன் என்ற பொதுப் புத்திதான்.
படிப்புதான் இனி எல்லாம் என நான் டெல்லிக்குப் படிக்க வந்தபிறகு ரோஹித் வெமுலாவின் தற்கொலை என்னை வெகுவாக பாதித்தது. வெமுலா நீதிக்கான மாணவர் போராட்டத்தை ஜே.என்.யூவில் நான்தான் ஒருங்கிணைத்தேன். அப்போது வெறும் பேச்சாலும் கோபத்தாலும் என் கருத்துகளைப் பதிவு செய்யச் சிரமப்பட்டேன். எனக்கு மேற்கத்திய ஹிப் ஹாப் இசை வடிவம் ரொம்பப் பிடிக்கும். இந்தியாவில் ‘கார், குடி, பெண்கள்’ என இளைஞர்களின் கொண்டாட்டத்துக்காக மட்டும் அவ்வடிவம் சிதைக்கப்பட்டிருந்தது. எனக்குத் தெரிந்த ஹிப் ஹாப், ராப் பாணியில் என் கருத்தைப் பாடலாகப் பாட ஆரம்பிக்க என் நண்பர்கள் ரசிக்கவும், கவனிக்கவும் செய்தனர். ‘லடாய் சீக் லே’ என்ற போராட்ட அறைகூவலுக்கான பாடல் 2018-ல் பலரை ஈர்த்தது. என் கலை இப்படிச் சொல்லிசையாக வர ஆரம்பிக்க வர ஆரம்பிக்க அதையே இப்போது எனது ஆயுதமாக மாற்றிக்கொண்டேன்!” என்று சொல்லும் சுமீத் முதன்முதலில் ‘தலித் ராப்ப’ராகத் தான் மாறியதைச் சொல்கிறார்.
“ஆரம்பத்தில் என்னைக் கலைஞனாகக்கூட ஒப்புக்கொள்ளாத சிலர் என்னை அடையாளப்படுத்த ‘தலித் ராப்பர்’ என கேலியாக அழைக்க ஆரம்பித்தனர். ‘சரி , எனக்கு அந்த அடையாளமே இருக்கட்டும். அதை வைத்தே நான் உயர்கிறேன் பார்!’ எனக்காட்ட அதையே என் அடைமொழியாக்கிக்கொண்டேன். சாதியைத் தாண்டி, புலம்பெயர் தொழிலாளர்களின் வலி, போட்டித் தேர்வுகளில் சமநிலை இல்லாமை, மாநில உரிமை பறிப்பு என எல்லாவற்றையும் தலித் ராப்பர்ஸ் பாட ஆரம்பித்திருக்கிறோம்.”

பஞ்சாப் ஜலந்தரைச் சேர்ந்த 20 வயது கின்னி மஹி என்ற பெண் அம்பேத்கரின் மகள் என்று தன்னை அழைத்துக்கொள்கிறார். இவரின் ‘குரான் தி தீவானி’ ஆல்பமும், ‘டேஞ்சர் சமர்’ பாடலும் யூடியூபில் ஏக பிரபலம்! இப்போது ஐரோப்பியக் கண்டத்தில் தொடர்ச்சியாக இசை நிகழ்ச்சிகள் செய்கிறார்.
“ஏழு வயதில் என் பெற்றோர் என்னை மேடையேற்றினார்கள். சமூக நீதி என்ற தலைப்பில் பாட்டுப் பாடினேன். பஞ்சாப்பின் நாட்டுப்புற இசை வடிவத்தில் பாட ஆரம்பித்து ராப் இசை வரை வளர்ந்திருக்கிறேன். பெண்களுக்காக அம்பேத்கர் நிறைய குரல் கொடுத்திருக்கிறார். அம்பேத் கரை சாதித் தலைவராக மட்டும் அடையாளப் படுத்துவதுதான் இந்நூற் றாண்டின் பெரிய அவலம் என்பேன். எனக்கு அம்பேத்கரை ரொம்பப் பிடிக்கக் காரணமே என் தந்தை அவரைப் பற்றிச் சொல்லிச்சொல்லி வளர்த்தது தான். பாபா சாகேப் போல நிறைய படிக்க வேண்டும். டாக்டர் பட்டம் வாங்க வேண்டும் என்பதுதான் என் கனவு. கோதுமை பூமியான பஞ்சாப் இப்போது கஞ்சா பூமியாகி நிற்கிறது. என் இசை, போதைப் பழக்கத்துக்கு எதிராகவும், உடல் ரீதியாக ஒடுக்கப்படும் பெண்களின் விடுதலைக்காகவும் இப்போது பாட ஆரம்பித்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகம் என்பது சாதி மட்டும் அல்ல, பெண்களும்தான்!” என்கிறார் கின்னி மஹி.

ஒடிசாவின் காள ஹண்டியின் லேட்டஸ்ட் சென்சேஷன் துலேஷ்வர் தண்டி என்ற துலே! பி.எஸ்.சி பட்டதாரியான துலே பிழைப்புக்காக சட்டீஸ்கரின் ராய்ப்பூர் மாவட்டத்தில் ஒரு ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்திருக்கிறார். இந்தியாவில் முதல் லாக்டௌன் வந்தபோது வேலையில்லாமல் சொந்த ஊருக்கு மாநிலம் விட்டு மாநிலம் நடந்து வந்தவர்களில் இவரும் ஒருவர். வரும்வழியில் பசியால் தான்பட்ட வேதனைகளைத் தொகுத்து எழுதி அதைச் சொல்லிசைப்பாடலாக, இசை ஏதுமின்றிப் பாடி ஆண்ட்ராய்டு போனில் வீடியோவாக்கியிருக்கிறார். அதை ஃபேஸ்புக்கில் வெளியிட பாலிவுட் இசையுலகம் வரை ரீச் ஆனது. ‘கல்லி பாய்’ புகழ் பாடகர் டோப் ஷர்மா, விஷால் தத்லானி, விவியன் டிவைன் என இந்தியாவின் இசைப் பிரபலங்கள் துலேவைத் தேட ஆரம்பித்தனர். நடிகைகள் பிரியங்கா சோப்ரா, ஸ்வரா பாஸ்கர் மற்றும் ரிச்சா சத்தா துலேவின் வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்து எழுத, துலேவின் மண்குடிசையை தேசிய டிவி சேனல்கள் போகஸ் செய்தன. “நான் இவ்வளவு பாப்புலராவேன் என நினைக்கவில்லை. பாலிவுட் வாய்ப்பு நிறைய வருகிறது. ஆனால், எனக்கு ராப் என்ற பெயரில் பெண்களைக் கேலி செய்யும் பாடல்களைப் பாட விருப்பமில்லை. என் மண் குடிசை சிமென்ட் வீடாக மாற வேண்டாம். அதனால் ராப் பாடகராக மட்டுமே தொடர விரும்புகிறேன்!” என்கிறார் துலே.

இந்த தலித் ராப்பர்களில் குட்டிப்பையன் டெல்லியைச் சேர்ந்த இன்னொரு சுமீத். 14 வயதுப்பாடகரான இந்தப் பொடியனை டெல்லி வசந்த் விஹார் அருகிலிருக்கும் குடிசைப்பகுதியில் ‘காக்கூ’ என்று செல்லமாக அழைக்கிறார்கள். வறுமை ஒழிப்பு, அரச பயங்கரவாதம் எனப் பாடுபொருள்கள் காத்திரமானவை.
“எனக்கு இக்கா சிங் என்ற பிரபல பாடகரைப்போல ஆகவேண்டும் என ஆசை. ராப் இசையைக் கேட்டு நானே வரிகள் எழுதிப் பாட ஆரம்பித்தேன். முதலில் மனதில் வந்தது நிர்பயா சம்பவம். அப்படியே அன்றாடம் செய்திகளில் கேள்விப்படும், கேள்வி கேட்க ஆசைப்படும் விஷயங்களைக் கோபத்தோடு பாட ஆரம்பித்தேன். இப்போது தனியாக யூடியூப் சேனல் வைத்திருக்கிறேன். விரைவில் ஒரு முழுநேரப் பாடகனாக மாறி மக்கள் பணி செய்ய வேண்டும். ஏழைகளுக்கு இசைக்கல்லூரி கட்டவேண்டும். அதுதான் என் கனவு!” என்று சொல்கிறார் சுமீத் காக்கூ!
வரும் காலம் வசந்த காலம்!