சினிமா
Published:Updated:

இவர்கள் பிரச்னைகளை எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

ரேஷன் கடை ஊழியர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ரேஷன் கடை ஊழியர்கள்

மத்திய, மாநில அரசுகள் தரும் மானியங்கள்தான் கூட்டுறவுச் சங்கங்களின் ஜீவாதாரம். ஆனால் இந்த மானியங்கள் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை.

பேரிடர் நிவாரணம் முதல் பொங்கல் பரிசு வரை அனைத்தும் ரேஷன் கடை மூலம்தான் மக்கள் கைக்குச் செல்கின்றன. இந்த அளவுக்கு மக்களுக்கு நெருக்கமாக இருந்து சேவையாற்றும் ரேஷன் கடை ஊழியர்களின் நிலை மிகவும் பரிதாபமாக இருப்பதுதான் பெரும் சோகம்.

தமிழகத்தில் 2,13,95,264 ரேஷன் கார்டுகள் உள்ளன. 4,000-க்கும் மேற்பட்ட கூட்டுறவு அமைப்புகள் மூலம் 33,366 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு சங்கத்துக்கும் தனித்தனித் தலைவர்கள்... நிர்வாகங்கள்... லாப நட்டங்களும் தனித்தனி. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 1,455 ரேஷன் கடைகளை நேரடியாக நடத்துகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் 423 ரேஷன் கடைகளை நடத்துகிறார்கள்.

இவர்கள் பிரச்னைகளை எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

20,448 விற்பனையாளர்களும், 3,345 கட்டுநர்களும் ரேஷன் கடைகளில் வேலை செய்கிறார்கள். நுகர்பொருள் வாணிபக்கழக ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான சம்பளம். குறைந்தபட்சம் விற்பனையாளர் 20,000 ரூபாயும் கட்டுநர் 19,000 ரூபாயும் மாத சம்பளமாகப் பெறுவார்கள். கூட்டுறவு ரேஷன் கடை ஊழியர்கள்தான் வஞ்சிக்கப்படுகிறார்கள். பணியில் சேர்ந்த முதலாண்டில் விற்பனையாளர் மாதம் 6,250 ரூபாயும், கட்டுநர் 5,500 ரூபாயும் பெறுவார்கள். ஓராண்டுக்குப் பிறகு சேல்ஸ்மேனுக்கு 15,300, கட்டுநருக்கு 10,700. இந்தச் சம்பளத்தை 21,000-மாக உயர்த்தித்தாருங்கள் என்று தொழிற்சங்கங்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றன. எந்தப் பயனும் இல்லை.

மத்திய, மாநில அரசுகள் தரும் மானியங்கள்தான் கூட்டுறவுச் சங்கங்களின் ஜீவாதாரம். ஆனால் இந்த மானியங்கள் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. அதனால் பெரும்பாலான கூட்டுறவுச் சங்கங்கள் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன. பல நேரங்களில் ஊழியர்களுக்குச் சம்பளம்கூட சரியான நேரத்துக்குக் கிடைப்பதில்லை. சில சங்கங்கள், நிதியாதாரத்தைப் பெருக்குவதற்காக மளிகைப் பொருள்களைக் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் வைத்து விற்கச் சொல்கின்றன. ஊழியர்கள் வேறு வழியின்றி ரேஷன் வாங்க வரும் மக்களிடம் அதைக் கட்டாயப்படுத்தி விற்பார்கள்.

இவர்கள் பிரச்னைகளை எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

முன்பெல்லாம் 500 ரேஷன் கார்டுகளுக்கு மேல் இருந்தால் விற்பனையாளர் ஒருவரும் கட்டுனர் ஒருவரும் நியமிக்கப்படுவார்கள். இப்போதோ 1,300-1,400 ரேஷன் கார்டுகள் உள்ள கடைகளுக்குக்கூட சேல்ஸ்மேன் மட்டுமே நியமிக்கப்படுகிறார்.

``பொதுவா, ரேஷன் கடை ஊழியர்கள்னா வெளியில ஒரு இளக்காரமான பார்வையிருக்கு. எடை குறைவா போடுவாங்க, வாங்காத பொருளுக்கு பில் போடுவாங்கன்னெல்லாம் சொல்வாங்க. உண்மையைச் சொல்லணும்னா, கொத்தடிமை மாதிரிதான் ஊழியர்கள் வேலை செய்றாங்க. பெரும்பாலான கடைகள்ல ஒரு சேல்ஸ்மேன் அல்லது கட்டுநர் மட்டும்தான் இருப்பார். தினமும் மக்கள் நீண்ட வரிசையில நிப்பாங்க. ஸ்மார்ட் கார்டை வாங்கி ஸ்கேன் பண்ணி பொருள்களுக்கு பில் போடணும். அவரே எழுந்துபோய் பொருள்களை அளந்துபோடணும். ஒருத்தருக்கு பொருள் போட்டு அனுப்ப குறைஞ்சது 15 நிமிடம் ஆகும். பத்து நிமிஷத்துக்கு மேல காத்திருந்தா மக்கள் டென்ஷனாகிடுவாங்க. இப்போ நிவாரணம் வேற தரவேண்டியிருக்கு. ஊழியர்கள், ஓரளவுக்கு வேலை தெரிஞ்ச யாராவது ஒருத்தரை உதவிக்கு வச்சுக்குவாங்க. ஆனா, நிர்வாகம் அவங்களுக்குச் சம்பளம் தராது. தமிழகத்துல இருக்கிற பெரும்பாலான ரேஷன் கடைகளை இப்படியான தற்காலிக ஊழியர்களை வச்சுத்தான் நடத்திக்கிட்டிருக்காங்க. அவங்களுக்கான சம்பளத்தை விற்பனையாளர் தன் கையில இருந்துதான் கொடுக்கணும்.

தமிழ்நாட்டுல எந்த ரேஷன் கடையைப் பார்த்தாலும் குடோன் மாதிரிதான் இருக்கும். விசாலமான ஜன்னல்கூட இருக்காது. தண்ணி, கழிவறை வசதிகள் இருக்காது. பல கடைகளுக்கு மின்வசதிகூட இல்லை. வேலை செய்ற பெண்கள் ரொம்பவே அவஸ்தைப்படுறாங்க. பெண்கள் விற்பனையாளரா இருக்கிற கடைகள்ல ஒத்தையாளா மூட்டைகளை இறக்கிப் பிரிச்சு பொருள் கொடுக்கிறது ரொம்பவே சிரமம். இதுபத்தியெல்லாம் அதிகாரிகள் கவனத்துலயே எடுத்துக்க மாட்டாங்க'' என்கிறார், தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன தலைவர் கிருஷ்ணமூர்த்தி.

இவர்கள் பிரச்னைகளை எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

ரேஷன் கடைகளுக்கான அரிசி, பிற பொருள்கள் எப்போது வருமென்று சொல்லமுடியாது. இரவுகூடக் கொண்டுவந்து இறக்குவார்கள். ``பொங்கலுக்குப் பச்சரிசி, வெல்லம், முந்திரின்னு சிறப்புப் பொருள்கள் தருவாங்க. முன்னெல்லாம் குடோன்லயே பிரிச்சு வரும். இப்போ தனித்தனி மூட்டையாத்தான் வருது. நாங்கதான் எல்லாத்தையும் சேர்த்து எத்தனை கார்டு இருக்கோ, அத்தனை பைகள் ரெடி பண்ணணும். கரும்பு வெட்டுற வேலையைக்கூட செஞ்சிருக்கோம். அதில்லாம பேரிடர் நிவாரணங்கள் வர்றப்போ, டோக்கன் எடுத்துக்கிட்டுப் போய் வீடு வீடா கொடுக்கணும். உண்மையிலேயே ஏண்டா இந்த வேலைக்கு வந்தோம்னு இருக்கு'' என்கிறார் சென்னையின் மையப்பகுதியொன்றில் பணியாற்றும் ரேஷன் ஊழியர் ஒருவர்.

அரிசியோ, சர்க்கரையோ, ரேஷன் கடையில் வாங்கும் பொருள் நிச்சயம் எடைகுறைவாகவே இருக்கிறது. சில நேரங்களில் அரிசி, பாமாயில் வாங்காமலே வாங்கியதாக எஸ்.எம்.எஸ் வருகிறது. இதையெல்லாம் சரிசெய்யவே முடியாதா?

இவர்கள் பிரச்னைகளை எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

``இது தனிநபர்களுடைய பிரச்னையில்லை. சிஸ்டத்துல இருக்கிற பிரச்னை. அதை சரி செய்யாம இந்தப் பிரச்னையைத் தீர்க்கமுடியாது. குடோன்ல இருந்து ஏத்தி இறக்கி வரும்போதே பொருள்கள் நாலஞ்சு கிலோ குறைவாத்தான் இருக்கும். எலித்தொல்லை இல்லாத ரேஷன் கடையே இல்லை. அதுங்க நாசம் பண்றது வேற... இதையெல்லாம் தாண்டி ரேஷன் கடை ஊழியருக்கு இருக்கிற எக்ஸ்ட்ரா செலவுகள்... ஒத்தை ஆளால பார்க்கமுடியாம உதவிக்கு யாரையாவது வச்சுக்கிட்டா அவங்களுக்கு நிர்வாகம் சம்பளம் கொடுக்காது. நாங்கதான் கொடுக்கணும். மாசத்துல பத்து நாளைக்கு வச்சிருந்தாக்கூட 2,500 ரூபாயாவது தரணும்.

ஒரு மாதத்துக்கு நாலுமுறையாவது லோடு வரும். லோடு இறக்கும்போது லோடுமேன்களுக்கு மாமூல் கொடுக்கணும். இல்லேன்னா, நேரம் கெட்ட நேரத்துல கொண்டுவந்து இறக்குவாங்க. குத்தூசியால ஏத்தும்போது நாலு குத்து, இறக்கும்போது நாலு குத்து குத்தி மூட்டையில பத்துக் கிலோவைச் சிதற விட்டுருவாங்க. எந்த சேதாரக் கழிவையும் நிர்வாகம் ஏத்துக்காது. வீணாகுற பொருள்களுக்கு மட்டுமே ஒரு தொகை கட்ட வேண்டியிருக்கும். இதுதவிர ஒவ்வொரு மாதமும் அதிகாரிகளுக்குப் பணம் போயாகணும். இல்லேன்னா எல்லாத்துலயும் குத்தம் கண்டுபிடிச்சு நிம்மதியா வேலை பார்க்கவிட மாட்டாங்க'' என்கிறார், பெயர் வெளியிட விரும்பாத ஒரு ரேஷன் ஊழியர்.

``ரேஷன் கடைகளை அரசு முறைப்படுத்த வேண்டியது ரொம்பவே முக்கியம். முதல்ல, உணவுத்துறை அல்லது கூட்டுறவுத்துறை... ஏதேனும் ஒரு துறையின் கீழ ரேஷன் கடைகளைக் கொண்டுவரணும். ஒவ்வொரு ரேஷன் கடையிலும் விற்பனையாளர், கட்டுநர்னு ரெண்டு பேரை நியமிக்கணும். ஊழியர்களுக்குக் கடைநிலை அரசு ஊழியரின் சம்பளத்தையாவது உறுதிசெய்யணும். இன்னைக்கு சூப்பர் மார்க்கெட்டுகள்ல 50 கிராம், 100 கிராம் பொருள்களைக்கூட பாக்கெட் பண்ணித் தர்றாங்க. ஒவ்வொரு குடும்பத்துக்குமான அரிசி, சர்க்கரை, பருப்பை ஏன் அரசால் பேக் செய்து தரமுடியாது? பேக்கிங்ல ஒரு பக்கம் நிறுவனங்களோட விளம்பரங்களைப் போட்டு அதுல தனி வருமானம்கூடப் பார்க்கலாம். பேக் பண்ணி பொருள் வந்துட்டா, எடைகுறைவுங்கிற பேச்சுக்கே வேலையில்லை. ஊழியர்களின் பணிச்சுமையும் குறையும்.

 கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி

பெருந்தொற்றுக் காலத்தில இடைவெளியே இல்லாம ரேஷன்கடை ஊழியர்கள் வேலை செய்றாங்க. அவர்களை முன்களப் பணியாளர்களாகவும் அறிவிக்கலே. இதுவரை நான்குபேர் இறந்திருக்காங்க. அவங்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படலே. புது அரசு இதிலெல்லாம் கவனம் செலுத்தணும்'' என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

டாஸ்மாக்கில் தடுப்பு கட்டி வரிசையை ஒழுங்குபடுத்த முனைந்தவர்களுக்கு ரேஷன் கடை நினைவுக்கே வரவில்லை என்பது சோகம்தான். புதிதாகப் பொறுப் பேற்றுள்ள அரசுக்கும் அதிகாரிகளுக்கும் ரேஷன் கடை நிர்வாகத்தை முற்றிலும் மறுசீரமைப்பு செய்யவேண்டிய பொறுப்பு இருக்கிறது.