அலங்காநல்லூரில் கடந்த 2021-ல் நடந்த ஜல்லிக்கட்டில் முதலிடம் பெற்ற கண்ணனுக்கு கார் பரிசை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வழங்கினார்.
இதற்காக அலங்காநல்லூர் வந்திருந்த ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஜல்லிக்கட்டில் சிறந்த வீரர்களுக்கு கார் பரிசு வழங்குகிற பெருமை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியாரைச் சேரும். நீதிமன்றத்தில் வழக்கு இருந்த காரணத்தினால் 2021- ல் வெற்றி பெற்ற வீரருக்கு பரிசு வழங்க தாமதமாகிவிட்டது.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, எடப்பாடியார் ஆணைக்கிணங்க தற்போது அந்த வீரரிடம் பரிசு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
ஜல்லிக்கட்டுப் போட்டியை ஊக்கப்படுத்த அம்மாவின் ஆட்சியில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. பறிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்த பெருமையும் அம்மாவின் அரசுக்கு உண்டு.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க அரசு திட்டமிட்டிருக்கிறதன் மூலம் உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை ஓர் அரங்கத்துக்குள் அடக்கிவிடுவார்களோ என்கிற அச்சம் இப்பகுதி மக்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
அது மட்டுமல்ல, ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்போகிற இடம் வனப்பகுதியை ஒட்டிய இடமாகவும், நீர்நிலையாகவும் இருக்கிறது, அதில் எப்படி மைதானம் அமைக்க முடியும். `வனப்பகுதி பாதிக்காமல் எடுக்கிறோம்’ என்று அரசுத் தரப்பில் சொல்கிறார்கள். ஆனால், அது சாத்தியமில்லை என்பதுதான் யதார்த்தம்.
ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்போருக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறினார்கள். ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை.
தமிழ்நாட்டின் நான்கு பகுதிகளில் ஒலிம்பிக் அகாடமிகள் திறக்கப்படும், எல்லா விளையாட்டுகளிலும் சாதிக்கக்கூடிய வீரர்களுக்கு சிறப்பு உயர்நிலைப் பயிற்சி, போட்டிகளுக்கு சென்றுவர பயணச்செலவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்துதரப்படும் என்றும் சென்னையில் பிரமாண்ட விளையாட்டு நகரம் அமைத்து அனைத்து வகை போட்டிகளுக்கும் உயர்தர பயிற்சி அளிக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள்.

அரசு வேலைவாய்ப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு முழுமையாகச் செயல்படுத்தும்போது பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் சேர்த்துக்கொள்ளப்படும் என்றும், விளையாட்டில் பதக்கங்கள் பெற்றவர்களுக்குப் பரிசுகளும் அரசு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்றும் பல வாக்குறுதிகள் அளித்தார்கள். இது போன்ற தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.