தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அன்னை ஓர் ஆலயம்!

சுவர்ணலதா
பிரீமியம் ஸ்டோரி
News
சுவர்ணலதா

பெருமை

என் அம்மா பெயர் சுவர்ணலதா. விழுப்புரம் காந்தி பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தபோது, அம்மா தன் அழகான கையெழுத்துக்காக அறிஞர் அண்ணாவிடம் வெள்ளிப்பதக்கம் பெற்றவர்.

நர்ஸ் ஆக வேண்டும் என்ன நினைத்தவர். ஆனால், படிப்பில் ஆர்வம்கொண்ட அம்மாவுக்குத் திருமணம் செய்து அனுப்பி வைத்தனர்.

அன்னை ஓர் ஆலயம்!

விவசாயக் குடும்பத்துக்கே உரிய இன்னல் களை நாங்களும் சந்தித்தே வளர்ந்தோம். அம்மா நாலரை மணிக்கெல்லாம் எழுந்து குளித்து கோலமிட்டு திருப்பாவை பாடவிடுவார். ஐந்து முறை எனக்குச் சொல்லிக்கொடுத்து மறுபடி சொல்லச் சொல்லுவார். சுத்தத்துக்குப் பெயர் பெற்றவர். கோபம் வராது. எனக்கு பாரதியையும் திருக்குறளையும் அறிமுகம் செய்துவைத்தவர்.

`கல்வி இல்லாத பெண் களர்நிலம். நீ படிப்பை மட்டும் விட்டுவிடாதே' என்று அவர் வலியுறுத்தியதால்தான், நான் அரசுப் பள்ளி ஆசிரியராகி, 2013-ம் ஆண்டு நல்லாசிரியர் விருதும் பெற்றேன். அப்போதெல்லாம் எங்கள் அம்மா இருந்த இடத்தில் போன் வசதி அவ்வளவாக இல்லை. நேரில் பார்த்தபோதுதான் விருது விஷயம் சொல்ல முடிந்தது. மிகவும் மகிழ்ந்தார்.

சுவர்ணலதா
சுவர்ணலதா

எனக்கு நல்லாசிரியர் கிடைத்தபோது நேரில் பார்க்க முடியாத அம்மாவை, அதே போன்ற ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்துப் போயிருந்தேன். கல்வியாளர் சங்கமமும் எம்.ஏ.எம் கல்லூரியும் நடத்திய `அசத்தல் ஆசிரியர்' விருது விழாவில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மத்தியில் என் பெயர் அறிவிக்கப்பட்டு என் அம்மாவையும் மேடைக்கு அழைத்தபோது நெகிழ்ந்து போனார். ஓர் அன்னையர் தினத்தன்று நடந்த அந்த விழாவுக்குப் பிறகு ‘உன்னைப் பெற்றபோது தடுமாறினேன்... இன்று பெருமைப்படுகிறேன்' என்றார், 75 வயதிலும் வாசிக்கிற பழக்கம்கொண்ட என் அம்மா.

அன்னை ஓர் ஆலயம்!

`மகள் தாய்க்காற்றும் உதவி அவையத்துப் பெருமைப்படுத்தல்' என்கிற புதிய குறள் எனக்குப் பொருந்தும். என் அம்மாவை இதைவிடவேறு எப்படி பெருமைப்படுத்த முடியும்!

- அர.அனுசுயாதேவி, வளவனூர்.