
மாற்றம் நல்லது
என் அக்காவின் மகள் சுஜாதா விசுவநாத்.பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவள். அவள் மாமியார் திடீரென்று மாரடைப்பில் இறந்து போனார்.
அவள் வசித்தது கோவையில். மாமியார் இறந்ததோ சென்னையில். அவளும் அவள் கணவரும் கிளம்பி சென்னை சென்று சேரும் போது இரவு ஏழு மணியாகிவிட்டது.
மூணு மணி நேரத்துக்கு மேல் இறந்த வரின் உடலை வீட்டில் வைக்கக் கூடாது என்கிற கொரோனா ரூல்ஸ் காரணமாக... பிணவறையிலேயே உடலை வைத்திருந்து அடுத்த நாள் கொடுப்பதாகச் சொல்லி யிருந்தார்கள். அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு உடலை வாங்கி, செய்ய வேண்டிய நடைமுறைகளைச் செய்து அடக்கம் செய்திருக்கிறார்கள்.

நான் வசிப்பது மேட்டூரில். நம்மால் போக முடியவில்லையே என்று ஒரே நெருடல். அவள் வீட்டு துக்கத்துக்குப் போகவில்லையென்றால் ‘எனக்கு ஒரு மரியாதையும் கொடுக்கலை... என் வீட்டுக்காரருக்கும் மரியாதை கொடுக்கலை’ என்று சண்டைக்கு வருவாள். இது அவள் மாமியார் இறப்பு வேறு. என்ன சொல்வாளோ என்று பயந்துகொண்டே இருந்தேன்.
காரியம் எல்லாம் முடிந்ததும் அவளே எனக்குப் போன் செய்து, ‘`சித்தி நீங்க வரலைன்னு வருத்தப்படலை. கொரோனாவால நிறைய பேர் வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. நீங்க வந்து, வழியில ஏதாவது சிக்கல்னா அது எங்களுக்குக் கஷ்டமா இருந்திருக்கும்” என்றாள்.

மாப்பிள்ளையும் அதையேதான் சொன்னார். எனக்குள் இருந்த வருத்தம் மறைந்து நிம்மதியடைந்தேன். கொரோனா அவளுக்குள் நேர்மறை எண்ணத்தை ஏற்படுத்தி யிருப்பதை நினைக்கும்போது கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.
- கலைவாணி, மேட்டூர் அணை