கட்டுரைகள்
Published:Updated:

பிளாக்மெயில் செய்யும் அலுவலக நண்பர்; புகார் செய்வதா, பணத்தை விடுவதா?!

பெண் டைரி
பிரீமியம் ஸ்டோரி
News
பெண் டைரி

பெண் டைரி I ஒரு வாசகியின் கடிதம்

நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். என் கணவர் வெளிநாட்டில் பணிபுரிகிறார். எங்களுக்குப் பள்ளி செல்லும் வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். மாமனாரும் மாமியாரும் எனக்குத் துணையாக எங்கள் வீட்டில் இருக்கிறார்கள். கட்டுப்பாடான குடும்பம்.

அலுவலகத்தில் எனக்கு நெருக்கமான தோழிகள், நண்பர்கள் என்று யாரும் இல்லை. எல்லோருடனும் நன்றாகப் பேசுவேன், சிரிப்பேன். ஆனால் அனைவரிடமும் அளவான பேச்சுதான். இந்நிலையில், எங்கள் அலுவலகத்தில் புதிதாக ஒருவர் சேர்ந்தார். என் சொந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தபோது, இருவரும் ஊர்க்கதைகள் பேச ஆரம்பித்து, அது நட்பாக வளர்ந்தது. அலுவலகத்தில் மற்ற அனைவரையும்விட அவரிடம் நான் கொஞ்சம் அதிகம் பேசினேன், சிரித்தேன். என்றாலும் அது ஆரோக்கியமான நட்பு.

என் வீட்டில் உள்ளவர்கள், வீட்டின் இயல்பு, பணி சம்பந்தப்பட்ட உரையாடல்கள் என்று நான் பகிர, அவரும் அவர் வீடு, குடும்பம், வேலை பற்றியெல்லாம் பகிர்ந்தார். அவர் மனைவி இல்லத்தரசி, ஒரு மகன் பள்ளியில் படிக்கிறான். இருவருக்குக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது, இருவரும் 30களில் இருப்பவர்கள் என்பதால் பகிர்ந்துகொள்ளும் விஷயங்களை இன்னொருவர் புரிந்துகொள்வது சாத்தியப்பட்டது.

பிளாக்மெயில் செய்யும் அலுவலக நண்பர்; புகார் செய்வதா, பணத்தை விடுவதா?!

இந்நிலையில், ஒரு வருடத்துக்கு முன்னர் அவர் அம்மாவுக்கு எதிர்பாராத அறுவை சிகிச்சை என்றும், இரண்டு லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும் கூறிப் புலம்பினார். யாராவது வட்டிக்குக் கடன் கொடுத்தால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு இரண்டு மாதங்களில் ஊரில் உள்ள நிலத்தை விற்றுக் கடனை அடைத்துவிடுவதாகக் கூறினார். அவருக்கு உதவ நினைத்து, என் சேமிப்பில் இருந்து ஒரு லட்சம் ரூபாயை அவருக்குக் கொடுத்தேன்.

கொடுத்த பணத்தை நான்கு மாதங்கள் வரை நான் கேட்கவில்லை. அதைப் பற்றி அவரும் எதுவும் கூறவில்லை. பின்னர் நான் அதைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தபோது, ஊரில் நிலத்தை விற்பதில் சிக்கல் என்றார். ஆனால், அடுத்தடுத்த மாதங்களில் நான் பணம் கேட்டபோது, என்னுடன் அவர் பேசும் விதமே மாறியது. பேசுவதையே தவிர்க்க ஆரம்பித்தார். நான் விடாமல் என் பணத்தைக் கேட்க, என்னிடம் கோபப்பட ஆரம்பித்தார். ‘‘நான் என்ன ஏமாத்திட்டா போகப்போறேன், இருந்தா கொடுக்க மாட்டேனா?’’ என்று எரிச்சலாகப் பேசினார். பதிலுக்கு நானும் கோபமாகப் பேசினேன்.

பிளாக்மெயில் செய்யும் அலுவலக நண்பர்; புகார் செய்வதா, பணத்தை விடுவதா?!

நான் அவரிடம் பணம் கொடுத்தபோது, என் கணவர் உட்பட வீட்டில் யாருக்கும் அதுபற்றித் தெரியாது என்றும், எனவே எவ்வளவு சீக்கிரம் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியுமோ கொடுத்து விடும்படியும் கேட்டுக்கொண்டேன். இப்போது அவர் அதையே எனக்கு எதிராகத் திருப்புகிறார், திமிராகப் பேசுகிறார். ‘‘பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாது. என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க. உங்க வீட்டுக்காரருக்குக்கூடத் தெரியாமதானே எனக்குக் கொடுத்தீங்க? இப்போ அவர்கிட்ட போய் என்னன்னு சொல்வீங்க? அவர் என்னைக் கூப்பிட்டுக் கேட்டா, உங்களைப் பத்தித் தப்பா சொல்லுவேன். அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன்னு எங்க நீங்க புகார் செஞ்சாலும், ‘அவங்க ஏன் எனக்குப் பணம் கொடுக்கணும், அவங்களுக்கும் எனக்கும் என்ன தொடர்புன்னு முதல்ல அவங்ககிட்ட கேளுங்க’ன்னு உங்க கேரக்டரை டேமேஜ் பண்ணுவேன். உங்க வாழ்க்கையே அவ்ளோதான்’’ என்று மிரட்டும் விதமாகப் பேசியபோது அதிர்ந்துவிட்டேன்.

‘உன்மீதுதான் தப்பு இல்லையே, கணவரிடம் உண்மையைச் சொல்லி காவல் நிலையம் செல்’ என்று என் மனம் நினைத்தாலும், அவன் சொல்லுவதுபோல ஒருவேளை என் வாழ்க்கையே இதனால் சிக்கலாகிவிடுமோ, இந்த ஒரு லட்சம் ரூபாயை விட்டுத் தொலைவோமா என்றும் தோன்றுகிறது. என்ன செய்வது நான்?

(வாசகிக்கான உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் தெரிவிக்கலாம்.)