கட்டுரைகள்
Published:Updated:

தொல்லை தரும் சீனியர்: கடந்து செல்வதா, முகத்திரையைக் கிழிப்பதா?

பெண் டைரி
பிரீமியம் ஸ்டோரி
News
பெண் டைரி

பெண் டைரி I ஒரு வாசகியின் கடிதம்

நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண். கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு இங்கு வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். இது ஒரு கார்மென்ட் தொழிற்சாலை. எனக்கு அக்கவுன்ட் பிரிவில் வேலை. பணி, அலுவலகச் சூழல் என எல்லாம் எனக்குத் திருப்தியாக, ஆக்கபூர்வமாக உள்ளது. நிறைய கற்றுக்கொள்கிறேன். எங்கள் டீமில் ஜூனியரான என்னை அனைவரும் அரவணைத்துச் செல்கிறார்கள். ஆனால், இந்த எல்லா நிம்மதி, மகிழ்ச்சியையும் அவ்வப்போது சீட்டுக்கட்டு போல கலைத்துப் போட்டுவிடுகிறது சீனியர் ஒருவரின் தொல்லை.

நிர்வாகத்தையும் பணியாளர்களையும் இணைக்கும் பொறுப்பில் இருப்பவர் அந்த சீனியர். அவரை அலுவலகத்தில் முதன்முதலில் எனக்கு அறிமுகப்படுத்தியபோது, ‘ஆரம்பத்துல இருந்து நம்ம கம்பெனியில இருக்கிறவர்’ என்றதால், அவர்மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டது. ஊழியர்களின் சம்பளம் தொடர்பான என் அலுவல் சார்ந்த பணிகளுக்காக அவ்வப்போது அவரிடம் செல்ல வேண்டும். அப்போதெல்லாம், மிகவும் கண்டிப்புடன் பேசுவார். நாம் சமர்ப்பிக்க வேண்டியவை ஏதேனும் தாமதமாகிவிட்டால் திட்டுவார். ‘ரொம்ப ஸ்ட்ரிக்டான ஆபீசர் போல’ என நினைத்துக்கொண்டு, ‘ஸாரி சார்’ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவேன்.

தொல்லை தரும் சீனியர்: கடந்து செல்வதா, முகத்திரையைக் கிழிப்பதா?

இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்னர், என்னை வரச்சொல்லி அழைத்திருந்தார். வழக்கம்போல, ‘இந்த டீட்டெயில்ஸ் நீங்க இன்னும் அப்டேட் பண்ணல’ என்று கூறித் திட்டினார். மறுநாள் செய்துவிடுவதாக உறுதியளித்துத் திரும்பினேன். அன்று இரவு அவர் எண்ணில் இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார். ‘ஸாரிம்மா... உன்னை ரொம்ப திட்டிட்டேன். தப்பா நினைச்சுக்காத...’ என்று. அவர் பெரியவர் என்பதால் தவறாக நினைக்கத் தோன்றவில்லை, அவரது பெருந்தன்மை என்றே நினைத்தேன். ‘அச்சோ, இட்ஸ் ஓகே சார், நாளை சப்மிட் பண்ணிடுறேன்’ என்று ரிப்ளை அனுப்பினேன்.

மறுநாள், நான் அப்டேட் செய்ய வேண்டிய விவரத்துக்காக அவரைப் பார்க்கச் சென்றபோது, மீண்டும் சிடுசிடுப்புடன் பேசினார். நான் வேலையை முடித்துவிட்டுத் திரும்பினேன். அன்று மாலை தன் சீட்டுக்கு என்னை மீண்டும் அழைத்தவர், ‘ஸாரிடா... உன்கிட்ட கண்டிப்பா நடந்துக்கிட்டேன். தப்பா நினைச்சுக்காத...’ என்று மெதுவான குரலில் பேசினார். நான் அதிர்ந்துவிட்டேன்.

அலுவல் நேரத்தில் ஏதாவது காரணம் சொல்லி என்னை அழைப்பது, சிடுசிடுப்பது, பின்னர் மறுநாளோ, இரண்டு நாள்கள் கழித்தோ மீண்டும் அழைத்து, அலுவல் சம்பந்தமாக ஏதாவது பேசிவிட்டு, சட்டெனக் குரலைத் தாழ்த்தி, ‘உன்னைப் பார்க்கணும்னு தான் சாக்கு சொல்லி வரச் சொன்னேன்’, ‘என்ன வெயிட் போட்டுட்ட?’, ‘இந்த டிரஸ் உனக்கு செமையா இருக்கு’ என்று பேசுவது என, அவர் தொல்லை தொடர ஆரம்பித்தது. உடன் பணிபுரியும் சீனியர் அக்காவிடம் இதுகுறித்துப் பகிர்ந்தேன்.

தொல்லை தரும் சீனியர்: கடந்து செல்வதா, முகத்திரையைக் கிழிப்பதா?

‘உன்கிட்டவும் வேலையைக் காட்டிட் டாரா? அவர் அப்படித்தான். யூனிட்ல எப்பவும் யாரையாச்சும் கத்தித் திட்டிட்டே இருப்பாரு. ரொம்ப ஸ்ட்ரிக்டான இமேஜை தன்மேல உருவாக்கி வெச்சிருக்காரு. ஆனா, பொண்ணுங்ககிட்ட மட்டும் இப்படி வழிவாரு. சில பெண்கள் மேனேஜ் மென்ட்கிட்ட புகார்கூடச் சொல்லிட்டாங்க. அவங்க ஆதாரம் கேட்பாங்க. பொண்ணுங்க திரும்பி வந்துடுவாங்க. ரொம்ப வருஷமா அவர் இங்க இருக்கிறதாலயும், அவர்கிட்ட நிறைய பொறுப்புகளை ஒப்படைச் சிருக்கிறதாலயும் மேனேஜ்மென்ட் அவர் மேல நடவடிக்கை எடுக்காது’ என்றார் அந்த அக்கா. ‘அக்கா... அவரை எக்ஸ்போஸ் பண்ண ஆதாரம் சேகரிப்போம். மெசேஜ் ஸ்கிரீன்ஷாட், கால் ரெக்கார்டிங்னு பொண்ணுங்ககிட்ட கேட்டுப் பார்ப்போம்’ என்று சீனியரிடம் சொன்னபோது, ‘அதுல அவர் ரொம்பத் தெளிவு. அதனாலதான் மெசேஜ், போன்னு எதுவும் பண்ணமாட்டார். நேர்ல மட்டும்தான் தொல்லை பண்ணுவார்’ என்றார்.

இரண்டு மாதங்களாக, சீனியரின் தொல்லையை சகித்துக்கொண்டிருக்கிறேன். இதற்கு என்னதான் தீர்வு? மற்றவர்களைப் போல நானும் அவரைக் கண்டுகொள்ளாமல் கடப்பதா? அல்லது, முகத்திரையைக் கிழிப்பதா?

(வாசகிக்கான உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் தெரிவிக்கலாம்.)