கட்டுரைகள்
Published:Updated:

நீளும் அலுவலக நேரம், வீட்டில் பெருகும் பிரச்னைகள்; சமாளிப்பது எப்படி?

பெண் டைரி
பிரீமியம் ஸ்டோரி
News
பெண் டைரி

பெண் டைரி I ஒரு வாசகியின் கடிதம்

நான் கல்லூரிப் படிப்பை முடித்ததிலிருந்து, ஒரு மருத்துவமனையில் அட்மின் பிரிவில் பணியாற்றி வந்தேன். ஒரு வருடத்துக்கு முன்பு எனக்குத் திருமணமானபோது, கணவர் வேறு ஊர் என்பதால் வேலையை விட்டேன். அவர் பெருநகரம் ஒன்றில் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

திருமணம் வரை என் கணவர், பெற்றோருடன் வசித்துவந்தார். திருமணத்துக்குப் பிறகுதான் தனிக்குடித்தனம் வந்தோம். எனவே, வீட்டு வாடகை, மளிகை என எல்லாச் செலவுகளையும் தனியாகக் கையாள்வது அவருக்குப் புதிதாகவும் சிரமமாகவும் இருந்தது. எனவே, நானும் பணிக்குச் செல்வது என ஆறு மாதங்களுக்கு முன்பு கணவரும் நானும் கலந்தாலோசித்து முடிவெடுத்தோம். ஒரு பெரிய மருத்துவமனையில் அட்மின் பிரிவில் எனக்கு வேலை கிடைத்தது.

நீளும் அலுவலக நேரம், வீட்டில் பெருகும் பிரச்னைகள்; சமாளிப்பது எப்படி?

நான் வேலை பார்க்கும் மருத்துவமனையில், சில நாள்கள் குறித்த நேரத்தில் வேலை முடியாது. மேலும், நோய்த்தொற்றுக் காலம் என்றால் வேலை அதிகமாக இருக்கும். அந்த நாள்களிலெல்லாம் நான் வீடு திரும்ப தாமதமாகும். அப்போதெல்லாம் என் கணவர் முகத்தைத் தூக்கிவைத்துக்கொள்ள ஆரம்பித்தார். நானும் ஆரம்பத்தில் பொறுமையாக, ‘சாரி, இன்னைக்கு வேலை முடியுற நேரத்துல ஒரு எமர்ஜென்ஸி கேஸ். அட்மிஷன் போட்டுட்டு வர வேண்டியதாகிடுச்சு’ என, தாமதமாக வர நேர்கிறபோதெல்லாம் அன்றைய பணிச்சூழல் பற்றி அவரிடம் பகிர்ந்தேன். ஆனால், அவர் அதையெல்லாம் காரணமாக நம்பவில்லை; நான் ஏதோ சாக்குச் சொல்வதுபோல நடந்துகொண்டார்.

எத்தனையோ நாள்கள் அவர் வேலை நேரம் தாண்டியும், பணியை முடித்துவிட்டு தாமதமாக வீடு திரும்பியிருக்கிறார், திரும்புகிறார். அப்போதெல்லாம் அவரிடம் இதுபோல நான் முகத்தைச் சுண்டவில்லை. அவருக்கு முடிக்கவேண்டிய வேலை அன்று இருந்திருக்கிறது, அதனால் தாமதம் என்பதைப் புரிந்துகொண்டேன். ஆனால், நான் தாமதமாக வர நேரும் நாள்களில் அவர் ஏன் அதைப் புரிந்துகொள்வதில்லை என்று எனக்கு வருத்தம் வர ஆரம்பித்தது. நாள்கள் செல்லச் செல்ல, நான் தாமதமாக வீடு திரும்பும் நாள்களிலெல்லாம் அவர் என்னிடம் சண்டைபோட ஆரம்பிக்க, என் வருத்தம் ஆதங்கமாக வளர ஆரம்பித்தது.

இப்போதும், அவர் அலுவலகத்திலிருந்து தாமதமாக வரும் நாள்கள், விடுமுறையிலும் முக்கிய புராஜெக்ட் என்று அலுவலகம் செல்லும் நாள்கள், ஞாயிற்றுக்கிழமையிலும் வீட்டில் லேப்டாப்பில் அலுவல் வேலை பார்க்கும் நாள்கள் உண்டு. ஓர் ஆண் அதைச் செய்தால், ‘அவன் ரொம்ப வொர்க்கஹாலிக்’ என்று அதைப் பெருமையாகப் பார்க்கின்றன உறவுகளும், குடும்பங்களும், சமூகமும். ஆனால், பெண்கள் சில நாள்களில் அலுவலகத்திலிருந்து திரும்ப நேரமானாலே அவளைக் குற்றவாளியாக்குகின்றன.

நீளும் அலுவலக நேரம், வீட்டில் பெருகும் பிரச்னைகள்; சமாளிப்பது எப்படி?

இரவு நான் வீடு திரும்ப ஒரு மணி நேரம் தாமதமாகலாம் என்று எண்ணும் நாள்களில், காலையிலேயே இரவுக்கும் சட்னி அரைத்து ஃபிரிட்ஜில் வைத்து, கூடுதலாக இட்லி செய்துவைப்பது அல்லது இரவு வரை ஃப்ரெஷ்ஷாக இருக்கும் தக்காளி தொக்கு, சப்பாத்தி செய்து ஹாட்பாக்ஸில் வைப்பது என்று மாற்று ஏற்பாடுகள் வரை செய்து வைத்தாலும், அந்த நாள்களையெல்லாம் கலவரமாக்குகிறார் கணவர். ‘இந்தப் பிரச்னையெல்லாம் வேணாம், நான் வேலைக்கே போகலை’ என்றால், அதற்கும் மறுக்கிறார். ‘10 - 6 மணிக்குள்ள முடியுற வேலையா பார்த்துப் போ’ என்கிறார்.

எல்லாத் துறைகளிலுமே வேலை நேரம் கூடிப்போய்க் கிடக்கும் இன்றைய சூழலை, போட்டிகள் நிறைந்த இன்றைய உலகை, புரிந்தும் புரியாததுபோல் நடந்துகொள்ளும் என் கணவரைச் சமாளிப்பது எப்படி?

(வாசகிக்கான உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் தெரிவிக்கலாம்.)