ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

சொர்க்கமே என்றாலும்… பெண்கள் விரும்பும் சேலைகளும் கொலுசுகளும் எங்கள் ஊரின் பெருமைமிகு அடையாளங்கள்...

மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவு
பிரீமியம் ஸ்டோரி
News
மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவு

சிறப்புப் பரிசு தவா

ஊர்ப்பெருமை பேசுவதில் நமக்கு ஒரு தனி சுகம் உண்டு. உங்கள் ஊரைப் பற்றிய ‘அட’ போட வைக்கும் சிறப்பு விஷயங்களை சுவாரஸ்யமாக போட்டோ மற்றும் வீடியோக்களுடன் தொகுத்து எழுதி அனுப்பலாம். உங்கள் ஊர்ப்பெருமை தேர்வு பெற்றால் ரொக்கப் பரிசு ரூ.300. சிறப்பான ஊர்ப்பெருமைக்கு தவா பரிசு என்று அறிவித்திருந்தோம். அவற்றில் சிறப்புப் பரிசு தவா பெறும் ஊர்ப்பெருமை இதோ...

மாங்கனி நகரான சேலம்தான் சொந்த ஊர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அந்தக் காலத்தில் நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டதால் ஸ்ரீசைலம் என்று அழைக்கப் பட்டு, பின்னர் ‘சேலம்’ என்ற பெயர் மருவிய தாக வரலாறுகள் கூறுகின்றன. தொழில் வளத்திலும் ஆன்மிக சிறப்பிலும் தனித்துவம் பெற்ற எங்கள் ஊர், மனமகிழும் சுற்றுலாவுக்கும் பிரசித்தம். ஏழைகளின் ஊட்டியான குளுகுளு ஏற்காடு மலையை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. சிறு வயதில் அப்பாவின் கைப்பிடித்து ஏற்காடு சென்று வந்த அனுபவத்தை மறக்க முடியாது.

இன்று அனைவரின் வாழ்விலும் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்ட சினிமா, சேலத்தில் தான் பல தொழில்நுட்பங்களுடன் வளர்ச்சி அடைந்து, கிளை பரப்பியது. கலைஞர் கருணாநிதி, நடிகர்கள் சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல புகழ்பெற்ற கலைஞர்களின் பாதம்பட்ட பூமி எங்களுடையது. இன்னும்கூட பெருமையின் சின்னத்தை மாற்ற மனம் வராமல் விட்டு வைத்திருக்கும் புகழ்பெற்ற மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவு இதற்குச் சான்று. பட்ஜெட் குறைவான படங்களின் படப்பிடிப்புகளுக்கு உதவியாக இருக்கிறது எங்கள் சேலத்தின் பசுமையான பகுதிகளான ஏற்காடு, மேட்டூர், பூலாம்பட்டி போன்ற கிராமங்கள்.

மனசார வரவேற்பதிலும் வயிறார விருந்து உபசாரம் செய்து மகிழ்வதிலும் எங்கள் ஜனங்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. ருசியான சாப்பாட்டைத் தேடிப் போய் சாப்பிடுகிற உணவு பிரியர்களுக்காகவே, அறுசுவையான உணவுகளைச் சுவை பார்க்க, பல்வேறு பிரத்யேக உணவுகள் இங்கு கிடைக் கின்றன. உதாரணத்துக்கு, சேலம் தட்டுவடை ஸ்பெஷல் கேள்விப்பட்டு இருப்பீர்கள். மாம்பழ சீஸனில் சேலம் வந்தால், கண்டிப்பாக மாம்பழம் வாங்கிச் செல்ல பலரும் மறக்க மாட்டார்கள். பெண்கள் விரும்புகிற கைத்தறியிலிருந்து குறைவான விலை முதல் உயர்தரப் பட்டுப்புடவை வரை சேலம் மாவட்ட ஜவுளிகளுக்கு உலகம் முழுவதும் தனி மதிப்பு உண்டு.

மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவு
மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவு

சேலத்து வெள்ளிக் கொலுசை சொல்லாமல் இருக்க முடியுமா… கொலுசு உற்பத்திக்குப் புகழ்பெற்ற சேலத்தில் இருந்து விதவிதமான டிசைன்களில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குக் கொலுசுகள் ஏற்றுமதியாகின்றன. சேலத்திலிருக்கும் இரும் பாலை நிறுவனம் தேசிய அளவில் முக்கியத் துவம் பெற்றது. ஏனெனில், இங்கிருந்துதான் துருப்பிடிக்காத ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் நாடு முழுவதும் விற்பனைக்குச் செல்கின்றன.

அப்பாவின் வேலை நிமித்தமாக என் இளம் வயதில் எங்கள் குடும்பம் வெளியூரில் வசித்ததால், பண்டிகை காலத்தில் குடும்பத் தோடு சேலம் வந்து பாட்டி வீட்டில் ஆஜராகி விடுவோம். ஊர் எல்லைக்குள் நுழையும் போதே, மரவள்ளிக்கிழங்கின் மணம் மூக்கைத் துளைக்கும்.

முன்பிருந்த சென்ட்ரல் திரையரங்கில் வாராவாரம் அப்பாவுடன் சென்று ‘கிரேஸி பாய்ஸ் அண்டு கேர்ள்ஸ்’ ஆங்கிலப் படம் பார்த்தது, நேஷனல் ஹோட்டலில் தங்கி யிருந்த சிவாஜி கணேசன் சாரைப் பார்க்கத் தவம் கிடந்தது, எஸ்.ஆர்.வி தியேட்டரில் காலையில் 50 பைசா டிக்கெட்டுக்காக பாட்டியுடன் உச்சி வெயிலில் நின்று, டிக்கெட் கிடைக்காமல் ஈவ்னிங் ஷோவில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ பார்த்தது, பள்ளியில் அழைத்துச் சென்ற சிறுவர் படங்களைப் பத்து பைசா முறுக்கைக் கடித்தபடி பார்த்தது, துப்பறியும் தமிழ்வாணன் சங்கர்லால் மாயாஜால புத்தகங்களைக் காசு கொடுத்துப் படித்து, அதில் மூழ்கி 10 வயதிலேயே நான் கதை மற்றும் கவிதைகள் எழுதத் தொடங் கியது...

இப்படி எங்கள் ஊருக்கும் எனக்குமான பந்தத்தையும் மலரும் நினைவுகளையும் அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆன்மிகத்திலும் பிரசித்தி பெற்றது சேலம். புராதனச் சிறப்புமிக்க சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில், ராஜகணபதி கோயில், சுகவனேஸ்வரர் கோயில், கோட்டை அழகிரிநாதர் பெருமாள் கோயில், ஊத்துமலை முருகன் கோயில், ஔவையார் வந்து சென்ற சிறப்புப் பெற்ற உத்தம சோழபுரம், 1,008 சிவாலயம் என்று திருத்தலப் பெருமைகளையும் சொல்லிக்கொண்டே போகலாம்.

பண்டிகைக் காலத்தில் நடைபெறும் பட்டி மன்றங்கள் கலைநிகழ்ச்சிகளைக் காண சுற்றுவட்டார கிராம மக்கள், சேலத்துக்குப் படையெடுத்து விருந்தினர்களாக வருவார்கள். கூத்து, கரகம், பரதம், விளையாட்டு போன்ற எல்லா விஷயங்களிலும் எங்கள் ஊருக்குத் தனிப் பெருமை உண்டு. எழுத எழுத மூச்சு முட்டவைக்கும் செய்திகளும் பெருமைகளும் நிறைந்த இந்தச் சொர்க்க பூமியில்தான் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நினைப்பேன்.

- சுபா தியாகராஜன், சேலம்

வாசகர்களே.... நீங்களும் எழுதி அனுப்பலாம்...

அனுப்ப வேண்டிய முகவரி:சொர்க்கமே என்றாலும்...

அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com