லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

சொர்க்கமே என்றாலும்... உணவுகளின் பெயர்களைச் சொல்லும்போதே நாவூறும் நெல்லை!

சொர்க்கமே என்றாலும்...
பிரீமியம் ஸ்டோரி
News
சொர்க்கமே என்றாலும்...

சிறப்புப் பரிசு தவா

ஊர்ப்பெருமை பேசுவதில் நமக்கு ஒரு தனி சுகம் உண்டு. உங்கள் ஊரைப் பற்றிய ‘அட’ போட வைக்கும் சிறப்பு விஷயங்களை சுவாரஸ்யமாக போட்டோ மற்றும் வீடியோக்களுடன் தொகுத்து எழுதி அனுப்பலாம். உங்கள் ஊர்ப்பெருமை தேர்வு பெற்றால் ரொக்கப் பரிசு ரூ.300. சிறப்பான ஊர்ப்பெருமைக்கு தவா பரிசு என்று அறிவித்திருந்தோம். அவற்றில் சிறப்புப் பரிசு தவா பெறும் ஊர்ப்பெருமை இதோ...

‘என்னடே சும்மா இருக்கியா?’, ‘வீட்ல சும்மா இருக்கா வளா?’, ‘உன் சேக்காளி எப்படிடே இருக்கான்?’, ‘பெறவு அண்ணாச்சியைப் பாக்க வாரேம்ல'...

‘குழல் இனிது, யாழ் இனிது என்பார் திருநெல்வேலி மொழி கேளாதோர்!’ என்று மாற்றிச் சொல்லும் அளவுக்கு, நெல்லைத் தமிழின் நயமும் வார்த்தைகளும் இனிது இனிது, பேசப்பேச இனிது!

வற்றாத தாமிரபரணி ஆறும், வருடம் முழுவதும் பச்சைப் பசேலென்று காட்சிதரும் வயல்வெளிகளும் கண்ணுக்கு விருந்தளிப்பதால், கிராமியம் சார்ந்த திரைப் படங்கள் பெரும்பாலும் திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளை மையப்படுத்தி எடுக்கப்படுகின்றன. தென்காசி தென்றல் மேனியைத் தழுவும்போது, குற்றால சாரல் உடலை நனைக்கும்போது, தாமிரபரணியில் குளித்து எழும்போது கிடைக்கும் பரவசமும் சிலிர்ப்பும், எங்கள் ஊர் நெல் வயல்கள் பக்கமாகச் செல்லும்போதும் கிடைக்கும்.

“ஏட்டி! இன்னிக்குத் தண்ணி வரலட்டி. ஓர் எட்டு ஆத்துக்குப் போய் துணி அலசிடலாம் வாங்கட்டி. அப்படியே அந்த உளுந்து சோத்தையும், நார்த்தங்கா பச்சடியையும் கட்டி எடுத்துக்கோங்க” எனும் என் ஆச்சி யின் அழைப்புக்கு நாங்கள் துள்ளி குதித்துக் கிளம்பு வோம். கதைபேசிக்கொண்டே தாமிரபரணிக்குச் செல் வோம். ஆற்றில் பொடுசுகள் பயமின்றி சிறு குன்றின்மீதேறி குதித்து நீச்சலடிக்க, துடியான இளைஞர்கள் சிலர் சுழலான பகுதிகளுக்குச் சென்று வீரத்தைக் காட்டுவதாக, அங்குள்ள மூத்தவர்களின் ஏச்சுகளுக்கு ஆளாவார்கள். ஆற்றில் என் அம்மா கண்மூடி படுத்தபடி உடலை மிதக்க விட்டு லாகவமாக நீந்துவதைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கும். இதுபோன்ற இனிமையான நினைவுகளுடன், அல்வாவைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியுமா?

தினமும் மாலை ஆறு மணி அளவில் இருட்டுக்கடை அல்வா கடை திறக்கப்படும். ஒரு குண்டு பல்ப் வெளிச்சத் தில்தான் உற்பத்தி நடக்கும். ஆனால், கடை திறக்கப்படும் முன்பே வாடிக்கையாளர்கள் கூட்டம் வரிசைகட்டி நிற்கும். கைபொறுக்கும் சூட்டில் அல்வாவை ஒரே வாயில் சாப் பிட, அதில் சேர்க்கப்பட்ட நெய்யும் இனிப்பும் அப்படியே தொண்டையில் இறங்கி, மெள்ள கரையும்போது ‘அட அட’ என உச்சுக்கொட்டுவோம். அல்வாவின் சுவைக்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படும் தாமிரபரணி நதி யில், என் சிறுவயதில் குடும்பத்தினருடன் சேர்ந்து ஆட்டம் போட்டது மனதைவிட்டு நீங்காத பசுமையான நினைவுகள்.

‘வருஷம் முழுக்க ஓடி ஓடி உழைச்சு களைச்சு போச்சுப்பா. சில தினங்கள் லீவ் போட்டுட்டு குற்றாலம் போய் குளியல் போட்டுட்டு வரலாம்’ என்று பல ஊர்க் காரர்களும் படையெடுக்கும் குளுகுளு குற்றாலம் எங்கள் திருநெல்வேலி மாவட்டத்தின் பெருமை சொல்லும் முக்கியமான சுற்றுலாத்தலம். தூத்துக்குடி அந்தோணியையும், ராமநாதபுரம் ஹுசைனையும், திருச்சி ராமலிங்கத்தையும் ‘தோஸ்து படா தோஸ்து’ என அருவியில் ஒன்றாய் ஆட்டம் போட வைக்கும் வல்லமை குற்றாலத்துக்கு உண்டு.

எனக்குத் தெரிந்த ஒருவர், அம்பா சமுத்திரத்தில் சிறிய அளவில் ஜவுளி வியாபாரம் செய்பவர். தொழிலில் லாபம் கம்மிதான். ‘இங்கனயே இருக்கிறதுக்கு மெட்ராஸ் போய் சம்பாதிக்கலாம்ல?’ என்று யாராவது கேட்டால், ‘இல்லை அண்ணாச்சி... கம்மியா சம்பாதிச்சாலும் இங்கனகுள்ளேயே இருந் துட்டு, புள்ளைங்களைப் பக்கத்திலேருக்கிற பள்ளிக் கூடத்துல படிக்க வச்சு, வீட்டுக்குப் போம்போது என் செல்லங்களுக்கு சீனி முட்டாய் வாங்கிட்டு போய் கொடுத்து சந்தோஷப்படலாம். நினைச்ச நேரத்துல நம்ம ஆறுமுகத்துகிட்ட பதனி வாங்கி குடிச்சிட்டு, அப்படியே கிளம்பி போய் பாபநாசத்துல ஒரு குளியலைப் போட் டுட்டு, மணக்க மணக்க தவசுபிள்ளை கடையில சூடா இடியாப்பம், சொதி வாங்கி சாப்பிட்டுட்டு , மணிமுத்தாறு அணையில செத்த நேரம் அமைதியா உக்காரும்போது சந்தன வாசம் தென்றலா நாசியை வருடுற சுகம் இருக்கே, எவ்ளோ காசு கொடுத்தாலும் வேற ஊர்ல கிடைக்குமால்ல... மனசு பாரமா இருக்கப்போல்லாம் நம்ம காந்திமதியம்மா முன்னாடி கண்மூடி நின்னு உருகினா, கிடைக்கிற நிம்மதி எவ்ளோ பணத்தைக் கொடுத்தாலும் வேற எங்கல்ல கிடைக்கும்?’ என்று மூச்சு விடாமல் நெல்லையின் பெருமையை அடுக்குவார்.

சொர்க்கமே என்றாலும்... உணவுகளின் பெயர்களைச் சொல்லும்போதே நாவூறும் நெல்லை!

சுதந்திரப் போராட்டத்துக்குப் புகழ்பெற்ற எங்கள் பாளையங்கோட்டை ‘தென்னகத்தின் ஆக்ஸ்ஃபோர்டு’ என்றழைக்கப்படுகிறது. இங்குள்ள ஏராளமான கல்வி நிறுவனங்களால் எண்ணற்ற பட்டதாரிகள் உருவா கிறார்கள். ‘எதுத்து பேசாதீரும்! தென்னகத்தின் ஆக்ஸ் போர்ட்னு நம்மூருக்குத் தனிப்பெருமையே இருக்கு. நீங்க என்னடானா பொம்பளை புள்ளை படிச்சது போதும்னு சொல்லுதிக. ஒழுங்கா புள்ளைய நல்ல காலேஜ்ல சேர்த்து விடுல்ல...’ என அனுபவமுள்ள மூத்த அண்ணாச்சிகள் தம்பி மற்றும் மகன்மார்களை உரிமையில் அதட்டுவார்கள்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் வெகு பிரசித்தம். 85 அடி உயர தேர் அசைந்து ஆடி வரும்போதும், ‘தடி போடப் போகிறார்கள். எல்லோரும் ஏக மனதாக வடத்தைப் பிடித்துக்கொள்ளுங்கள். அடி அடி அடி...’ என்ற குரல் எழுந்ததும், பக்தர் களுக்குச் சிலிர்ப்பு உண்டாகும்.

சந்தி பிள்ளையார் கோயில் தெரு போளி, முக்குக்கடை முட்டைகோஸ் போண்டா, பார்டர் கடை பரோட்டா, கல்லிடைக்குறிச்சி அப்பளம், நாங்குநேரி உருளை குல்கந்து, அம்பாசமுத்திரம் ஏ ஒன் பரோட்டா, சொதி குழம்பு, கூட்டாஞ்சோறு, சுண்டகறி... ஆஹா ஆஹா... எங்கள் ஊரின் சிறப்பு உணவுகளின் பெயர் களைச் சொல்லும்போதே நாவூறும்.

இந்தியாவின் முதல் ஈரடுக்கு பாலம் (திருவள்ளுவர் பாலம்), புகழ்பெற்ற பத்தமடை பாய், தமிழகத்தின் இரண்டாவது பெரிய வனவிலங்கு சரணாலயமான களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், மாஞ்சோலை, கோதையாறு... ‘லிஸ்ட் ரொம்ப பெரிசா போகுது’ என்று சொல்லும் அளவுக்கு, எங்கள் ஊரின் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

வேலை, திருமணம், சம்பாத்தியம் என்று என் ஊரி லிருந்து வெவ்வேறு ஊர்களுக்குத் திசைமாறிப் பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டாலும், ஆண்டுதோறும் கோடை விடுமுறைக்குக் குடும்பத்தினருடன் சொந்த மண்ணில் காலடி எடுத்து வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அப்போது, பொதிகை மலைக்காற்று உடலைத் தழுவும்போதெல்லாம், ‘சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா...’ என்று ஆனந்தமாகப் பாடி பரவசமடைவேன்!

- சக்தி பாலா, பெங்களூரு

வாசகர்களே.... நீங்களும் எழுதி அனுப்பலாம்...

அனுப்ப வேண்டிய முகவரி:சொர்க்கமே என்றாலும்...

அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com