ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அனுபவங்கள் ஆயிரம்!

பாசிட்டிவ் வார்த்தைகளின் பலன்!

நான் ஒரு நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றியபோது அங்கே பணிபுரிந்த அட்டண்டர் பெண், ‘நான் டிகிரி படிச்சிருந்தா நல்ல வேலைக்குப் போயிருப்பேன், பன்னிரண்டாம் வகுப்புகூட முடிக்காம இப்படி ஆபீஸ்ல காபி, டீ போடுற வேலை பார்க்கிறேன்’ என்று புலம்பிக்கொண்டே இருப்பார். ஒருநாள் அவரிடம் 15 நிமிடங்கள் செலவழித்துப் பேசிய நான் இறுதியாக, ‘நீ மட்டும் நினைச்சா இப்பவும் நீ படிக்கலாம்’ என்றேன். அவரை சமாதானம் செய்ய நான் கூறிய வார்த்தைகளுக்கு அவ்வளவு வீரியம் இருக்கும் என்று அப்போது நான் உணரவில்லை. சில வருடங்கள் கழித்து அவரை ஒரு திருமண விழாவில் சந்தித்தபோது, ‘நீங்க சொன்னது என் மனசுல அலையடிச்சுட்டே இருந்தது மேடம். பன்னிரண்டாவது முடிச்சு, பி.ஏ. பி.எட் முடிச்சு, இப்போ ஒரு தனியார் பள்ளியில ஆசிரியரா வேலை பார்க்கிறேன்’ என்றார் உற்சாகமாக. நேர் மறை வார்த்தைகளின் அதிர்வுகளை நிறைவுடன் உணர்ந்தேன்.

- சங்கீதா சுரேஷ், தர்மபுரி

*****

அனுபவங்கள் ஆயிரம்!

தமிழ் தவழும் இல்லம்!

என் தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, தமிழில் நல்ல நல்ல வாழ்க்கை மொழிகள் ஃபிரேம் செய்யப்பட்டு ஆங்காங்கே மாட்டப்பட்டிருந்தன. மேலும், தன் பிள்ளைகளை முடிந்தவரை ஆங்கிலக் கலப்பில்லாத தமிழில் பேசப் பழக்கியிருந்தார். மிக முக்கியமாக, வீட்டில் உள்ளவர்களிடமோ, வீட்டுக்கு வரும் நண்பர்கள், உறவினர்களிடமோ ஆங்கிலத்தில் பேசாமல் தமிழிலேயே பேச வேண்டும் என்று தன் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தி யிருப்பதாகவும் கூறினாள். பிள்ளைகள் ஆங்கிலத் தில் பேசினால்தான் பெருமை என்று நினைக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில் தோழியின் செயல் மரியாதையை ஏற்படுத்தியது.

- மு.நிர்மலாதேவி, திண்டுக்கல்

****

அனுபவங்கள் ஆயிரம்!

வாழ்க்கை அப்படித்தான்!

சமீபத்தில் எங்கள் பகுதியில் ஒரு வீடு விற்பனை செய்யப்பட்டது. வீட்டை விற்றவர், ‘நிறைய கடன் இருக்கு. வீட்டை விற்றுக் கடனை அடைச்சுட்டு ஒரு வாடகை வீட்டில் போய் நிம்மதியா இருக்கலாம்னுதான் இதை விற்கிறோம்’ என்றார். வீட்டை வாங்கியவர், ‘பேங்க்ல கடன் வாங்கித்தான் வீட்டை வாங்குறோம். இனி பட்டினியா கிடந்தாலும் சொந்த வீட்ல நிம்மதியா இருக்கலாம்’ என்றார். ஒருவருக்கு வீட்டை விற்றாவது கடனை அடைப்பதில் நிம்மதி என்றால், மற்றொருவருக்கு கடன் வாங்கியாவது சொந்த வீடு வாங்குவதில் நிம்மதி. இக்கரைக்கு அக்கரை பச்சை காட்டும் இந்த வாழ்க்கை அப்படித் தான்!

- ஆர்.சிவரஞ்சனா, தஞ்சாவூர்

****

அனுபவங்கள் ஆயிரம்!

டாஸ்மாக்குடன் போராடும் பிள்ளைகள்!

நான் டூவீலரில் சென்றுகொண்டிருந்தபோது லிஃப்ட் கேட்ட ஒரு சிறுவனை ஏற்றிக்கொண்டேன். ‘அக்கா 20 நிமிஷத்துல போயிடலாமாக்கா’ என்ற வனிடம், ‘அப்படி என்னடா அவசர வேலை?’ என்றேன். ‘எங்கப்பா மார்க்கெட்ல மீன் விக்கிறாரு. 20 நிமிஷத்துல வியாபாரம் முடிஞ்சுடும், அப்புறம் காசை எடுத்துட்டு டாஸ்மாக் போயிடுவாரு. அதுக் குள்ள நான் அங்க போயிட்டா, என் முகத்தைப் பார்த்துட்டார்னா குடிக்கப் போக மாட்டாரு... என் மேல அவருக்கு ரொம்ப பாசம். ரெண்டு பேருமா பணத்தோட வீடுபோய் சேர்ந்துடுவோம்’ என்றபோது நெஞ்சம் கனத்துப்போனது. எத்தனை எத்தனை ஏழை மக்களின் உழைப்பை, அவர்கள் வீட்டு பொருளாதாரத்தை, மகிழ்வை, நிம்மதியைப் பறித்துக்கொண்டிருக்கிறது இந்த டாஸ்மாக்?!

- ஆர்.கங்கா, அறந்தாங்கி

உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு! சிறந்த அனுபவத்துக்குச் சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com