
ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

குட்டீஸை குஷி பண்ணுங்க!
தீபாவளி பண்டிகைக்கு ஊரில் உள்ள பாட்டி, தாத்தா வீட்டுக்கு வரும் குட்டீஸ்கள் நிறைய. அப்போது, பூஜை அறை, டைனிங் டேபிள், ஹால் என ஒவ்வோர் இடத்திலும் ஒரு டப்பா வைத்து, ஒரு டப்பாவில் பேனா, பென்சில்கள், ஒரு டப்பாவில் பந்து போன்ற விளையாட்டுப் பொருள்கள், ஒரு டப்பாவில் ஹேர்பேண்ட், க்ளிப் போன்ற அலங்காரப் பொருள்கள் என்று போட்டு வைத்து விடுங்கள். பூஜை அறையில் கடவுள் பாடல் பாடினால் அங்கிருக் கும் டப்பாவில் இருந்து ஒரு பேனா, மிச்சம் வைக்காமல் சாப் பிட்டால் டைனிங் டேபிளில் இருக்கும் டப்பாவில் இருந்து ஒரு விளையாட்டுப் பொருள், ஹாலில் பாடல், ஆடல், பேச்சு என அவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தும்போதெல்லாம் கைதட்டி அங்கிருக்கும் டப்பாவில் இருந்து ஒரு பரிசுப்பொருள் என்று எடுத்துக்கொடுங்கள். வீடும், குழந்தைகளின் மனமும் மகிழ்வில் குலுங்கும். மேலும், ‘அடுத்து பொங்கல் எப்போ வரும், தாத்தா, பாட்டி வீட்டுக்குப் போகணும்...’ என்று ஊர் திரும்பியதில் இருந்தே காத்திருக்க ஆரம்பித்துவிடுவார்கள்!
- என்.கோமதி, நெல்லை-7
புது வீடு, பூத்துக் குலுங்கும் செடிகள்!
சமீபத்தில் புதிதாக வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்திருந்த தோழி வீட்டுக்குச் சென்றிருந்தோம். வீட்டின் முன்புறம் குறுஞ்செடிகள், மரங்கள், ஜாதிமல்லி கொடிகள் எனப் பூத்துக் குலுங்கின. ``வீட்டுக்கு நீங்கள் இப்போதுதானே குடி வந்தீர்கள்?'’ என்றேன் ஆச்சர்யத்துடன். ``வீடு கட்ட ஆரம்பித்ததுமே முன்பக்கம் தோட்டம் போட இருந்த இடத்தில் மரக் கன்றுகள், பூச்செடிகள் வைத்து பராமரிக்க ஆரம்பித்தோம். ஓர் ஆண்டில் வீட்டு வேலை முடிந்த நேரம், அவையெல்லாம் நன்றாக வளர்ந்துவிட்டன’' என்றார். பாராட்டி விட்டு வந்தோம். பின்பற்றலாம்!
- ஜி.நிர்மலா கிருஷ்ணன், கிருஷ்ணகிரி

கில்லாடித்தனமான ஏமாற்று; எச்சரிக்கை அவசியம்!
சமீபத்தில் ராமநாதபுரத்துக்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். அங்கே நல்ல உணவகம் எங்கே என்று கேட்டபோது, எங்கள் வேன் டிரைவர் ஓர் ‘உயர்தர சைவ உணவக’த்துக்கு வண்டியை விட்டார். நல்ல கூட்டம். இடம்பிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. டிரைவர் மட்டும் தனியாக இடம்பிடித்தார். சாப்பிட்ட பில்லைக் கொடுத்துவிட்டுக் கிளம்பிய நாங்கள், ரயில் நிலையத்தில் காத்திருந் தோம். பில்களை வாங்கிப் பத்திரப்படுத்துவதை வழக்கமாகக் கொண்ட என் கணவர், அவற்றை பார்த்துக்கொண்டிருந்தார். ‘அட, டிரைவர் ரெண்டு சாப்பாடு சாப்பிட்டிருக்காரே’ என்று கொஞ்சம் சிரித்தபடியே சொன்னவர், டிரைவருக்கு போன் போட்டு ‘எத்தனை சாப்பாடு சாப்பிட்டீர்கள்?’ என்று கேட்க, ‘ஒரு சாப்பாடு’ என்று பதில் சொன்ன டிரைவர், விஷயத்தைக் கேட்டுவிட்டு, ‘எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க’ என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.
அந்த ஹோட்டலின் பில்லில், போன் நம்பர் எதுவும் இல்லை. பிறகு, இணையத்தில் தேடிக் கண்டுபிடித்து போன் போட்டு விஷயத் தைச் சொன்னதும், செக் செய்கிறேன் என்று சொன்னவர்கள், பிறகு போன்செய்து, `ஆமாம் சார், தப்பா போட்டுட்டாங்க. இப்ப என்ன செய்யலாம்' என்று கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளாமல் சொல்ல, என் கணவர், ‘இன்னும் அரை மணி நேரத்துக்குள் ஒரு சாப்பாட்டுக் கான பணத்தை ஜிஎஸ்டி-யுடன் சேர்த்து போன்பே மூலமாக எனக்கு அனுப்ப வேண்டும்’ என்று கோபமாகச் சொல்லி போனை வைத்து விட்டார். பத்தே நிமிடத்தில் 120 ரூபாய் வந்து சேர்ந்ததுடன், மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்கள் (அதனால் கடையின் பெயரைக் குறிப்பிடவில்லை). சின்ன கடைகளின் மீதுதான் நமக்குச் சந்தேகம் வரும்... பேரம் பேசுவோம்... ஏமாற்றிவிடுவார்கள் என்று உஷாராக இருப்போம். ஆனால், படாடோபமான கடைகளும் இப்படி ஏமாற்றக் கூடும். கவனம் தேவை!
- எம்.டி.யு.மகேஸ்வரி, சென்னை-92
வரவேற்பில் பூவுடன் இதுவும் ப்ளீஸ்!
என் தோழி வீட்டுத் திருமணத்துக்கு சென்றிருந்தபோது, வரவேற்பில் சந்தனம், குங்குமம், ரோஜா பூ, கல்கண்டு வைக்கப்பட்டிருந்தன. ரோஜாவுடன் ஹேர்பின்னும் கொடுத்திருந்தால் விரும்பிய பெண்கள் தலையில் வைத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால், அந்த ரோஜாவை கையில் எடுத்துக்கொண்ட பலரும், சிறிது நேரத்தில் தங்களையும் அறியாமல் அவற்றைக் கீழே போடும் நிலை ஏற்பட்டது. கூட்டத்தில் பூ மிதிபட்டது சங்கடமாக இருந்தது. எனவே, விசேஷ வீட்டினர் வரவேற்பில் மல்லிகை, முல்லை எனத் தொடுத்த பூக்களை அல்லது ரோஜாவை ஹேர்பின்களுடன் வைக்கலாமே!
- ஜி.விஜயலட்சுமி, கும்பகோணம்

சர்வீஸ் கொடுக்கும்போது..!
என் தையல் மெஷின் முன்னணி நிறுவனத்தின் தரமான தயாரிப்பு. அதன் காஸ்கட் பிய்ந்துவிட, அருகிலிருந்த மெஷின் மெக்கானிக்கை வரவழைத்தேன். வந்தவர், `ஓவராயில் செய்யுங்க, மெஷின் இன்னும் சூப்பரா தைக்கும்’ என்றார். சரி நல்லதுதானே என மெஷினை ஓவரா யிலுக்கு அனுப்பினேன். மெஷின் திரும்பி வந்தபோது சிறிது காலம் நன்றாக இருந்தது. பின்னர், புதிது புதிதாக நிறைய பிரச்னைகள் வர ஆரம்பித்தன. இம்முறை, தெரிந்த நண்பர் ஒருவரிடம் சர்வீஸுக்குக் கேட்க, அவர், `நல்ல பிராண்டு என்பதால் மெஷினின் ஒரிஜினல் பாகங்களைக் கழற்றி எடுத்து விட்டு, பதிலாகப் பல டியூப்ளிகேட் பாகங் களை ஃபிக்ஸ் செய்துள்ளனர். எனவே, அறிமுகமில்லாத, நம்பிக்கை இல்லாத வர்களிடம் சர்வீஸுக்குக் கொடுக்கக் கூடாது’ என்றார். இந்தப் பாடத்தை கற்றுக் கொள்ள நான் கொடுத்த விலை அதிகம் என்று நொந்துகொண்டேன்.
- ஸ்ரீ மல்லிகா குரு, சென்னை-33
உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!
அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com