ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அனுபவங்கள் ஆயிரம்!

என் வீட்டுத் தோட்டத்தில்!

என் தோழி தக்காளி, கத்திரிக்காய், பச்சை மிளகாய் என சமையலுக்கு நறுக்கும் காய்களின் கழிவுகளை அவ்வப்போது விதைகளுடன் கொல்லைப்புறத்தில் போட்டு வந்தாள். பல விதைகள் முளைக்க ஆரம் பித்தன. ஓய்வு கிடைக்கும்போது அவற்றுக்கு தண்ணீர் விடுவதைத் தாண்டி, தோழி பெரிதாக அதற்கு மெனக்கெடவில்லை. இந்த நிலையில், திடீரென்று ஒரு நாள் அவள் வீட்டுக்கு எதிர்பாராமல் விருந்தினர்கள் வந்துவிட, கொல்லைப்புறத்தில் காய்த்திருந்த தக்காளி, கத்திரி, வெண்டை, கீரை என அந்தக் காய்கறிகளைக் கொண்டே சமையலை சமாளித்துவிட்டாள். `எனில், தோட்டத்தை முறையாகப் பராமரித்தால் வீட்டின் தினசரி சமையலுக்கு அது எவ்வளவு தரும்?’ என்று இப்போது சீரியஸாக தோட்டத்தைப் பராமரிக்க ஆரம்பித்துவிட்டாள்.

- எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி

அனுபவங்கள் ஆயிரம்!

இதுல இத்தனை விஷயம் இருக்கா?

தோழி ஒருத்தி எங்களிடமும் உறவினர்களிடமும் பேசும்போது தவறாமல், ‘உங்க வீட்ல இன்னிக்கு என்ன சமையல்?’ என்று கேட்பாள். நம்மில் சிலருக்குக் கூட அந்தப் பழக்கம் இருக்கலாம். சமீபத்தில் அவள் மகனுக்குத் திருமணம் நிச்சயமானது. அவள் கணவர் அவளிடம், `` `நீ மருமகள் மெச்சிய மாமியாராக இருக்க ஒரு வழி சொல்லட்டா?’ என்று கேட்க, அவளும் `சரி’ என்றிருக்கிறாள். `மகனுக்குக் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம், நீ எல்லார்கிட்டயும் கேட்குற மாதிரி உன் மருமககிட்டயோ, மகன்கிட்டயோ, ‘இன்னிக்கு என்ன சமையல்?’னு விசாரிக்காதே. வேலை அவசரத்துல அவங்களுக்கு என்ன சமைக்க முடியுமோ, சமைக்க நேரமிருக்குமோ தெரியாது. பிரெட் சாப்பிட்டோ, வெளியில் சாப்பிட்டோ சமாளிப்பாங்க. நீ சமையல் பற்றிக் கேட்டா அவங்களுக்கு தர்மசங்கடமாகும். நேரங்களில் பொய் சொல்லவும் நேரிடும். மேலும், நம் சம்பந்தி அங்க போயிருக்கும் நாள்களில் நீ இந்தக் கேள்வியைக் கேட்டா, அப்போ அவங்க என்ன சமைக்கிறாங்கனு நீ கண்காணிப்பது போல ஆகிடும்'’ என்று அழகாக எடுத்துக்கூறியுள்ளார். ``இதுல இத்தனை விஷயம் இருக்குறது தெரியாம நான் எல்லார்கிட்டயும் கேட்டுக்கிட்டு இருந்துட்டேன்.

இனி யார்கிட்டயும் கேட்க மாட்டேன்'' என்று சொல்லி யிருக்கிறாள் தோழி. இதனால் சொல்ல வருவது என்னவென்றால்..!

- உமா, சென்னை-92

பணத்தை எண்ணும்போது...

என் தோழியுடன் ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோருக்குச் சென்றிருந்தேன். பொருள்கள் வாங்கிவிட்டு அவள் ஆயிரம் ரூபாய் கொடுத்தாள். கடைக்காரர் மீதி சில்லறையை கொடுக்க, அந்த நோட்டுகளை வாங்கி பின்புறமாகத் திருப்பி எண்ணத் தொடங்கி னாள். நான் ஏன் என்று கேட்க, ’பெரும்பாலும் கிழிந்த ரூபாய் நோட்டுக்கு ஒட்டுப் போடுபவர்கள் பின்புறமாகத் தான் செய்திருப்பார்கள், கவனித்து உடனே மாற்றிவிடலாம்’ என்றாள். இப்போது நானும் அதைப் பின்பற்றுகிறேன்!

- ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம்

பேனா தந்த பாடம்!

ஒரு வங்கிக்குப் பணப் பரிவர்த்தனை செய்யச் சென்றபோது, பேனா எடுத்துச் செல்ல மறந்து விட்டேன். அங்கே படிவம் நிரப்பிக்கொண்டிருந்த முதியவரிடம் பேனாவை வாங்கியவள், அதை மறதியில் எடுத்து வந்துவிட்டேன். மாலை வேளையில் என் கைப்பேசிக்கு ஓர் அழைப்பு. அந்த முதியவர் வங்கியில் என் போன் நம்பரை வாங்கி என்னை அழைத்திருந்தார். பேனா பற்றி அவர் கனிவுடனே கேட்டாலும், எனக்கு மிகுந்த அவமானமாகிவிட்டது. தினம்தோறும் மறதி, கவனக்குறைவு, அலட்சியம் என எத்தனையோ விலையுயர்ந்த பொருள்களை தொலைக்கும் என்னை, அவரது பொறுப்புணர்ச்சி ஆச்சர்யப்பட வைத்தது. அவரது முகவரி கேட்டு அவரது பேனாவுடன் ஒரு புதுப் பேனாவையும் சேர்த்துக் கொடுத்தபோது, மிகுந்த மரியாதையுடன் மறுத்துவிட்டார். அவரது பண்பும் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதுடன், எங்கு சென்றாலும் வேண்டிய ஆவணங்கள் / உபகரணங்களை சரி பார்த்து எடுத்துச் செல்லும் பழக்கமும் வந்துவிட்டது.

- எஸ்.உஷா, மதுரை-17

அனுபவங்கள் ஆயிரம்!

பயத்தைப் போக்க...

பூங்காவில் ஊஞ்சல், சறுக்கு, இன்னும் பல விளையாட்டு களை மகிழ்ச்சியோடு சிறுவர்கள் விளையாடிக்கொண் டிருந்தார்கள். அப்போது ஒரு குழந்தை, `அம்மா ஊஞ் சல்ல ஆட பயமா இருக்கு...’ என்க, `பாரு அம்மா உட் கார்ந்து விளையாடிக்காட்டுறேன்’ என்று, குழந்தைகளுக் கான அந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆடத் தொடங்கினார். அவர் எடை அதிகம். சங்கிலி அறுந்துவிட்டது. கீழே விழுந்து பலமான அடி, சிராய்ப்பு. இதுபோன்ற சூழலில் குழந்தைகளிடம், ‘பயம் இல்லாமல் உட்கார், நான் பக்கத்திலேயே இருக்கேன்’ என்று சொல்லி அவர் களுக்கு பயத்தைப் போக்கலாம். இப்படி வேண்டாம்!

- ஜி.விஜயலட்சுமி, கும்பகோணம்

உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com