
ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

வெளியே செல்லும்போது...
சமீபத்தில், திருவண்ணாமலைக்குத் தோழிகளுடன் சென்றிருந்தேன். அப்போது, சோப் எடுத்து வராத தோழி ஒருத்தி, ‘யாராச்சும் சோப் கொடுங்க’ என்று கேட்க, கொடுக்கப்போன என்னை மறித்து, ‘இரு நான் தர்றேன்...’ என்று தன் லிக்விட் சோப்பை கொடுத்தாள் இன்னொரு தோழி. ‘இந்த மாதிரி பலரோட சேர்ந்து போகும்போது, சோப்பை பகிர்ந்து பயன்படுத்த வேண்டி வரலாம். அதனால சரும அலர்ஜி ஏற்பட வாய்ப்பிருக்கு. மேலும், அந்த சோப் மீதமிருந்தாலும் வீட்டுக்கு எடுத் துட்டுப் போய் பயன்படுத்த முடியாது. அதனாலதான், இந்தப் பிரச்னைகள் எல்லாம் இல்லாத லிக்விட் சோப் எடுத்து வந்தேன்’ என்றாள். அதிலிருந்து, நான் எங்கேனும் வெளியே சென்றாலும் லிக்விட் சோப்தான் எடுத்துச் சொல்கிறேன்.
- சி.கலைசெல்வி, நாகர்கோவில்

மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லையா இந்த உலகம்?
தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், சூப்பர் மார் கெட்டுகள், ஜவுளிக் கடைகள், அரசு சேவை அலுவல கங்கள் எனப் பல இடங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீல் சேர் செல்லும் வகையிலான சாய்வு வழி (Ramp) இருப்பதில்லை. அன்று ஒரு சூப்பர் மார்க்கெட் வாசலில் ஒரு மாற்றுத்திறனாளி, தனது மூன்று சக்கர வண்டியில் வெளியில் அமைந் திருந்தபடி என்னிடம் லிஸ்ட் ஒன்றை தந்து, `இதை மட்டும் கடைப்பையன்கிட்ட கொடுத்து, வெளிய எனக்குக் கொடுக்கச் சொல்லி விபரம் சொல்றீங்களா ப்ளீஸ்?’ என்று கேட்டார். எனக்கு சட்டென சங்கடமாகி விட்டது. ‘பீச்சுக்கு போக எல்லாம் இப்போ எங்களுக் காக வழி அமைக்குறாங்க. ஆனா, கடை முதல் கோயில் வரை நாங்க அன்றாடம் செல்ல வேண்டிய கட்டடங்களை எங்களுக்குத் தகுந்த மாதிரி அமைச்சுக் கொடுத்தா நல்லாயிருக்கும்’ என்றார் எதிர்பார்ப்புடன். நிறைவேறுமா?
- கி.சரஸ்வதி, ஈரோடு

அழைப்பது நம் கடமை!
என் தோழி, தன் மகன் திருமணத்துக்குப் பத்திரிகை வைக்க வீட்டுக்கு வந்திருந்தாள். அப்போது, எங்கள் இன்னொரு தோழியின் கணவர் ஓர் அறுவை சிகிச்சைக் காக ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருந்தார். ‘இந்த நேரத்துல எப்படி அவளுக்கு பத்திரிகை வைக்கிறது, வேண்டாம்’ என்றாள். `பத்திரிகை வைக்கிறது நம் கடமை. வர்றது, வராதது சம்பந்தப்பட்டவங்க சௌகர்யம், விருப்பம். இல்லைன்னா, நாளைக்கு நீ அழைக்கலை யேனு அவ வருந்தலாம்’ என்றேன். தோழியும் ஆமோதிக்க, இருவரும் மருத்துவமனைக்கே சென்று அழைப்பிதழை கொடுத்தோம். ‘நலம் விசாரிக்க வர்றவங்க எல்லாரும் நோயைப் பற்றியே பேசி பேசினு ஒரு மாதிரி சோர்வா இருந்தேன். இப்படி கல்யாணம்னு சந்தோஷ செய்தியோட வந்திருக்குற உங்க ரெண்டு பேரையும் பார்த்ததுமே எனக்கும் சந்தோஷமாகிடுச்சு. கல்யாணம் நல்லபடியா முடியட்டும்... டிஸ்சார்ஜ் ஆனதும் ஒரு நாள் வந்து வீட்டுல பார்க்குறோம்’ என்றாள் மனம் நிறைந்து. நாங்களும் நெகிழ்ந்து திரும்பினோம்.
- விஜயலக்ஷ்மி, மதுரை-9

கையில் தொகை கிடைத்தால் வட்டி ஆசை வந்துவிடுகிறதா?!
என் உறவினர் ஒருவர் பணி நிறைவு பெற்றபோது, ஓய்வூதியத் தொகை கிடைத்தது. அப்போது அவரிடம் தூரத்து உறவுக்காரப் பெண் ஒருவர், தான் கம்ப்யூட்டர் சென்டர் மற்றும் ஜெராக்ஸ் கடை வைக்கப் பணம் தேவைப்படுவதாகவும், 10% வட்டி தருவதாகவும் கூறி ஒன்றரை லட்சம் ரூபாய் கேட்டிருக்கிறார். வங்கி வட்டி எங்கே, 10% வட்டி எங்கே என்று நினைத்த அவரும், இந்தப் பெண்ணால் தொழிலை தொடங்க முடியுமா, அனுபவம் இருக்கிறதா, ஒருவேளை தவறினால் பணத்தைத் திருப்பித் தர இயலுமா என்றெல்லாம் எதைப் பற்றியும் யோசிக்காமல், வட்டிக்குப் பேராசைப் பட்டு பணத்தைக் கொடுத்திருக்கிறார். இரண்டு மாதங்கள் மட்டுமே வட்டி வந்திருக்கிறது. அதன் பிறகு எந்தத் தகவலும் இல்லை. அந்தப் பெண் வேறு ஒருவரிடம் கடையை ஒப்படைத்துவிட்டு, `இப்போ என்னால வட்டி கொடுக்க முடியாது, அசலை கொஞ்சம் கொஞ்சமா கொடுக்குறேன்’ என்று அதையும் இழுபறியில் வைத்துவிட்டார். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கடன் கொடுப்பவர்களுக்கு நிதானம் வேண்டும்.
- உமாதேவி, திருவண்ணாமலை
உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!
அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com