
ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

பேக்கரிக்கு பாராட்டுகள்!
எங்கள் குடியிருப்பு பகுதியை ஒட்டிய மெயின் ரோட்டில் பேக்கரி ஒன்று உள்ளது. அங்கே காகிதப் பைகள் பயன்படுத்தும் அவர்கள், எங்கள் ஏரியா முதியோர்களுக்கு வேலை வாய்ப்பு தருகின்றனர். எப்படி என்கிறீர்களா? பேப்பர், பசை போன்றவற்றை எல்லாம் எங்கள் ஏரியாவில் உள்ள முதியவர்களிடம் கொடுத்து, அவற்றை கவராக செய்து தரச்சொல்லி வீட்டிலேயே வந்து வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு உரிய கூலியைக் கொடுத்துவிடுகின்றனர். முதியோரின் பொழுதுகள் பயனுள்ளதாகக் கழிவது, இந்த வயதிலும் தங்களால் ஒரு சிறு தொகையை சம்பாதிக்க முடிவது குறித்து அவர்கள் பாசிட்டிவ்வாக உணர்வது என்று... பாராட்டுக் குரிய முயற்சி இது!
- தே.பட்டு அம்மாள், கோவை-36

ஆரோக்கியம் நம் கையில்!
எனக்கு டி.வி, சீரியல்கள் அதிகமாகப் பார்க்கும் பழக்கம் உண்டு. அதிக நேரம் டிவி பார்க்க வேண்டும் என்பதற்காக வீட்டில் வேலை செய்வதைக் குறைத்துக்கொள்வேன். தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள் களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்வேன். துணிமணிகளை வாஷிங்மெஷினில் துவைத்துக் கொள் வேன். இதுவே என் அன்றாட வழக்கமாக இருந்தது. உடல் உழைப்பு இல்லாததால் என் உடல் பருமனாக மாறியிருந்தது. இரவு தூக்கமும் சரியாக வராது. இதை யெல்லாம் தெரிந்திருந்தாலும் கண்டு கொள்ளாமல் அதே வகையில் வாழ்க்கையை நடத்தி வந்தேன். இந்த நிலை யில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேபிள் டிவி சமீபத்தில் சில தினங்கள் முடங்கியது.
முதல்நாள் டிவி பார்க்காமல் பைத்தியம் பிடித்தது போல் இருந்தது. அந்த நாளைக் கடத்தவே மிகவும் சிரமப்பட்டேன். ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாகக் கழிந்தது. இரண்டாவது நாள் பொழுதைக் கழிப்பதற்காக வேலை செய்யலாம் என்று நினைத்தேன். நானே கடைக்குச் சென்று தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்களை வாங்கினேன். கடைக்குச் சென்று வந்தது நடைப்பயிற்சியாக மாறியது. டிபனுக்கு தேவையான மாவை கிரைண்டரில் ஆட்டிக்கொண்டேன். ஆரோக்கியமும் சுத்தமும் தரமும் நிறைந்த மாவு கிடைத் தது. துணிகளை வாஷிங்மெஷினில் போடாமல் கைகளில் துவைத்தேன். அடுத்தடுத்த நாள்களில் வீட்டு பீரோவை சுத்தம்செய்து தேவையற்ற துணிகளைக் கழித் தேன். பரணில் போட்டிருந்த பயன்படுத்தாத பாத்திரங் களை எடுத்து எடைக்குப் போட்டேன்.
அடுத்தடுத்த நாள்களில் வீட்டை சுத்தம் செய்வது, புதுப்புது ரெசிப்பி செய்து பார்ப்பது எனப் பல வேலை களில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். நான்கு நாள்கள் போனதே தெரியவில்லை. புது அனுபவமாக மட்டுமன்றி, மனதுக்கும் நிறைவாக இருந்தது. என்னுள் சுறுசுறுப்பு ஏற்பட்டதையும் உணர்ந்தேன்.
ஐந்தாம் நாள் கேபிள் இணைப்பு வந்ததும் டிவி பார்ப்பதில் நாட்டம் ஏற்படவில்லை. நான்கு நாள்கள் நேரத்தைப் பயனுள்ள முறையில் கழித்திருக்கிறேன். அதையே நாள்தோறும் பின்பற்றினால் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை உணர்ந்தேன். இப்போதும் டிவி, சீரியல் பார்ப்பதை விடவில்லை. அந்தப் பழக்கத்தில் சின்ன மாற்றம் செய்துகொண்டேன். வீட்டு வேலைகளுக்கிடையே என்னை ரிலாக்ஸ் செய்து கொள்வதற்கு ஒன்றிரண்டு சீரியல், நிகழ்ச்சிகளை மட்டும் பார்க்கிறேன். இதனால் வீட்டு வேலையும் தடங்கலின்றி நடைபெறுகிறது, என் ஆரோக்கியமும் திரும்பியிருக்கிறது.
எ.சுகுணா, சேலம்-3

ரெசிப்பி கேட்காத குறைதான்!
1974-75 காலகட்டம். நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்க, என் அக்காவின் திருமணம் நடைபெற்றது. மாப்பிள்ளை அழைப்புக்கு சமையல் செய்தவர் செய்த இனிப்பு கல் போல் ஆகிவிட்டது. எளிமையிலும் எதையும் நேர்த்தியாகச் செய்யும் அப்பாவுக்கு அதைப் பரிமாற மனம் ஒப்பவில்லை. வேறு இனிப்பு செய்யச் சொல்லி விட்டார். அம்மா, இரண்டு அலுமினிய வாளிகள் நிறைய இருந்த அந்த ஸ்வீட்டை பரணில் பத்திரப்படுத்தினார். திருமணம் முடிந்து பெண்ணை வழியனுப்பி வைத்துவிட்டு வந்த பின்னர், அம்மா என்னை உட்காரவே விடவில்லை. பரணில் இருந்து அந்த வாளிகளை இறக்கவைத்தார். அப்போது ஏது மிக்ஸி? அத்தனை ஸ்வீட்களையும் உரலில் போட்டு மாங்கு மாங்கென்று இடித்துத் தூளாக்கினோம் இருவரும். அத்துடன் தேங்காய்ப்பால், சர்க்கரை கலந்து, பெரிய வாணலியில் கொட்டி, துடுப்புப் போட்டு சூடுபடுத்தி இளக வைத்து மீண்டும் கிளறி... ஹப்பா... இடுப்பு ஒடிந்துவிட்டது. எனினும் சுவை அபாரமோ அபாரம். மறுநாள் மறுவீட்டு அழைப்புக்கு வந்த சம்பந்தி குடும்பம், எங்கள் குடும்பம் எனக் கிட்டத்தட்ட 50 பேருக்கு மேல் திகட்டத் திகட்ட சாப்பிட்டு, அக்கா வீட்டுக்கு தூக்கு நிறைய கொடுத்தும் அனுப்பினோம். ஒரே பாராட்டு மழைதான். அம்மாவிடம் அன்று கற்ற பாடம்தான்... மாற்று வழியை யோசிக்க என்னைப் பழக்கப்படுத்தியது.
- மீனாக்ஷி மோஹன், ஹைதராபாத்
உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!
அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com