லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்! - கொஞ்சம் கவனிக்காமல் இருந்திருந்தால்...

சிக்கனத்துக்கு சிறந்த வழி!
பிரீமியம் ஸ்டோரி
News
சிக்கனத்துக்கு சிறந்த வழி!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

ஓலா டிரைவரின் ஸ்க்ரீன் ஷாட் மோசடி!

சில தினங்களுக்கு முன்பு, ஒரு நிகழ்வுக்காக ஓலா மூல மாக கார் புக் செய்து உறவினர்களுடன் பயணம் செய் தோம். பயணத்தின் முடிவில் ட்ரிப் க்ளோஸ் ஆகவில்லை. டிரைவரோ, “எனக்கு ட்ரிப் க்ளோஸ் ஆயிடுச்சும்மா... 590 ரூபாய்... பாருங்க’’ என்று தன்னுடைய மொபைல் போனில் வந்திருந்த தகவலைக் காண்பித்தார். ஆரம்பத்தில் என்னுடைய மொபைலில் காண்பித்த தொகை 380 ரூபாய்தான். சந்தேகம் வரவே, டிரைவரிடம் “எனக்கு ட்ரிப் க்ளோஸ் என்றே வரவில்லை... தொகையும் அதிகமாக இருக்கிறதே’’ என்றேன். ஆனால் அவர், இந்த தொகைதான் ஆபீஸ்லேயிருந்து அனுப்பியிருக்காங்க. இதைதான் தரணும்” என்றார் பிடிவாதமாக.

அனுபவங்கள் ஆயிரம்! - கொஞ்சம் கவனிக்காமல் இருந்திருந்தால்...

உடன் வந்தவர்களோ மிகுந்த களைப்பில் இருந்ததால், ‘’கேட்பதைக் கொடுத்துவிட்டு வா’’ என்று என்னிடம் சொன் னார்கள். எதேச்சையாக, அவர் காட்டிய மொபைல் ஸ்கிரீ னில் ‘PAID’ என என் கண்ணில் பட்டது. உறவினர்களை வீட்டுக்குள் அனுப்பிவிட்டு, டிரைவரிடம் மொபைலைக் காட்டச் சொன்னேன். வாம்மா மின்னல் மாதிரி “பாரும்மா...” என்று அவசரமாக காட்டி திருப்பிக்கொண்டார். இந்த முறை நன்றாகவே கவனித்தேன். அது ஏற்கனவே யாரோ 590 ரூபாய்க்கு செலுத்திய தொகை. ‘PAID’ என்றிருந்தது. அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்துவைத்துக் கொண்டு என்னிடம் காண்பித்து ஏமாற்றப்பார்த்தார். அத்துடன், ட்ரிப்பையும் அவர் குளோஸ் செய்யாமலே இருந்ததால், எனக்கு எவ்வளவு தொகை என்கிற தகவல் வரவில்லை.

நான் உறுதியாக அவரிடம் சொன்னேன். ‘`நீங்க சரியா ட்ரிப்பை குளோஸ் செய்யுங்கள். எனக்கும் தகவல் வந் தால் மட்டுமே நான் பணம் தருவேன்” என்றேன் கறாராக. அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை. “மொபைல்ல ஏதோ ப்ராப்ளம், சரி... புக் பண்ணும்போது என்ன தொகை வந்ததோ அதையே கொடுங்க...” என்று சொல்லி, 380 ரூபாயை வாங்கிக்கொண்டு கிளம்பினார். அந்த கார் தெரு திரும்பும்போது எனக்கு ட்ரிப் க்ளோஸ் செய்த தகவல் வந்தது... 380 ரூபாய் என்று! கொஞ்சம் கவனிக் காமல் இருந்திருந்தாலும், அவசரத்தில் நன்றாக ஏமாந்திருப்போம்... நான் உஷாராக இருந்ததால் 210 ரூபாய் பறி போகவில்லை!

- எம்.காயத்ரி, சென்னை-21

அனுபவங்கள் ஆயிரம்! - கொஞ்சம் கவனிக்காமல் இருந்திருந்தால்...

சிக்கனத்துக்கு சிறந்த வழி!

என் தோழியின் குடும்ப வருமானமும் என் குடும்ப வருமானமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். ஆனால் நான் அடிக்கடி கடன் பிரச்னையில் அல்லாடுகிறேன். தோழி அப்படியில்லை. அதற்குக் காரணம் புரியாமல் குழம்பினேன். ஒருநாள் தோழியிடமே கேட்டேன். அவள், `தேவையானதையெல்லாம் வாங்காதே, தவிர்க்க முடியா ததை மட்டும் வாங்கு என்று காந்தியடிகள் சொன்னதை பின்பற்றுகிறேன். நான் செலவு செய்து ஒரு பொருளை வாங்கும் முன் அது தேவையானதா, தவிர்க்க முடியாததா என்று யோசித்து, தவிர்க்க முடியாதவற்றை மட்டுமே வாங்குகிறேன்’ என்றாள். அதை நானும் பின்பற்ற ஆரம் பித்த பின்னர், பணப்பற்றாக்குறை, கடன் பிரச்னை யெல்லாம் நீங்கிவிட்டன.

- பே.ராமலட்சுமி, ராஜபாளையம்

மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம்!

எங்கள் தெருவில் வழக்கமாக பல வகை கீரைகளை எடுத்து வந்து விற்பனை செய்யும் பெண்மணி, ஒரு மாதமாக வரவில்லை. ஒருநாள் மாலை கடைத் தெருவில் அவரை பார்த்தபோது, தள்ளுவண்டியில் கீரை வடை, கீரை அடை, கீரை போண்டா, கீரை பக்கோடா, கீரை சூப் எனப் பரபரப்பாக வியாபாரம் செய்து கொண்டிருந்தார். நான் அவரிடம் விசாரிக்க, `கீரை சரியா வியாபாரம் ஆகாம மிச்சம் ஆகி நஷ்டமாச்சும்மா. அப்புறம்தான் யோசிச்சு, ரூட்டை மாத்திட்டேன். என் ஃப்ரெஷ்ஷான கீரைகளை பத்தி என் வாடிக்கையாளர்கள் பலருக்கும் தெரியும்ங்கிறதால, இந்த உணவுப் பொருட்கள்லயும் அந்த ஆரோக்கியம் இருக்கும்னு நம்பி வாங்குறாங்க. புது கஸ்டமர்களும் கிடைச்சிருக்காங்க. கூடுதல் வரு மானம் கிடைக்குது’ என்றார் உற்சாகத்துடன். மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம்!

- அனுஸ்ரீ, சேலம்-4

அனுபவங்கள் ஆயிரம்! - கொஞ்சம் கவனிக்காமல் இருந்திருந்தால்...

இந்தப் பிரச்னை உங்களுக்கும் வரலாம்!

இரவு நேரம் நெடுந்தூர பேருந்து பயணம். ‘கொஞ்ச நேரம் பஸ் நிக்கும், அடுத்து மதுரையிலதான்’ என்று கண்டக்டர் சத்தம் கேட்க, தூக்கம் கலைந்து, பக்கத்து சீட்டில் இருந்த அம்மாவிடம் பையை கவனிக்கச் சொல்லி விட்டு அவசரமாய் இறங்கினேன். கழிவறை சென்றுவிட்டு வந்தபோது, நின்றிருந்த 8, 10 பேருந்துகளில் நான் எதிலிருந்து இறங்கினேன் என்று தெரியாமல் விழித்தேன். எல்லாவற்றின் நெற்றியிலும் ‘நாகர்கோயில்’ என்று எழுதி யிருக்க, அதில் ஒவ்வொன்றாக கிளம்ப ஆரம்பிக்க, கதி கலங்கியது. ஒரு பஸ்ஸில் ஏறிப் பார்த்தேன்.

அது நான் வந்த பேருந்து இல்லை. அழுகையும் பதற்றமு மாக இருந்தது. சட்டென, பஸ் ஏற்றிவிட்டபோது என் கணவர் எனது பர்ஸுக்குள் ஒரு துண்டு காகிதத்தை வைத்தது நினைவுக்குவர, அதை எடுத்தேன். அதில் பேருந்தின் எண், மறுபக்கம் என் கணவர், தம்பியின் செல் நம்பர்களையும் எழுதியிருந்தார். அதைப் பார்த்து நான் பேருந்தை கண்டுபிடித்து ஏற, எனக்காக பஸ் காத்திருந்ததைச் சொன்னார்கள். பேருந்து பயணத்தின் போது பேருந்து எண்ணை குறிக்கத் தவறாதீர்கள்!

- வெண்ணிலா, செம்மேடு, கோவை

உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com