ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் ஆயிரம்!

வெளியூர் செல்லும்போது ஹோட்டலில் தங்க நேர்ந்தால், அறைக்குள் நுழைந்ததும் அனைத்து மின் விளக்குகளையும் அணைத்துவிட்டு, அறை முழுவதையும் செல்போனில் வீடியோ எடுங்கள்.

அனுபவங்கள் ஆயிரம்!

சிறப்புப் பரிசு தவா

ஹோட்டலில் தங்கும்போது!

வெளியூர் செல்லும்போது ஹோட்டலில் தங்க நேர்ந்தால், அறைக்குள் நுழைந்ததும் அனைத்து மின் விளக்குகளையும் அணைத்துவிட்டு, அறை முழுவதையும் செல்போனில் வீடியோ எடுங்கள். பின்னர் அதை ப்ளே செய்து பாருங்கள். எந்த இடத்தி லாவது சிவப்பு அல்லது வெள்ளை நிற ஒளி வந்தால், அங்கு மறைத்து வைக்கப்பட்ட (Hidden) கேமரா இருக்கிறது என்று அர்த்தம். அதேபோல, செல்போனில் யாரிடமாவது பேசியபடியே அறை முழுவதும் மெதுவாக நடந்து செல்லுங்கள். திடீரென இரைச்சல் சத்தம் கேட்டால், அருகே ரகசிய கேமரா போன்ற எலெக்ட்ரானிக் பொருள்கள் இருக்கிறது என்று உணர்ந்துகொள்ளலாம். நான் பின்பற்றும் பழக்கத்தைப் பகிர்கிறேன் தோழிகளுக்கும்.

- எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.

****

அனுபவங்கள் ஆயிரம்!

பரிசு ரூ.300

துணிவே துணை!

அன்று பாண்டியன் எக்ஸ்பிரஸில் மதுரை திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது அடுத்தடுத்த இருக்கைகளில் சில ஆண்கள் மது பாட்டில்கள், நொறுக்குத் தீனி, புகை என்று இருந்தனர். என் கணவரிடம் சொல்லி அவர்களைக் கண்டிக்கச் சொன்னேன். அவர் பார்த்துவிட்டு வந்து, ‘அவங்க எல்லாம் பெரிய ஆபீசர் மாதிரி தெரியுறாங்க, எதுக்கு வம்பு’ என்றார். சட்டென அவர்களிடம் எழுந்து சென்ற நான், ‘சார்... இது டிரெயின். பெண்கள், குழந்தைகள் நிறைய இருக்கோம்.

இங்க இருந்து வர்ற புகையால பலரும் திணறுறோம்...’ என்று கோபமோ, ஆவேசமோ இல்லாமல் இயல்பாகப் பேசினேன். அவர்களில் சீனியர் ஒருவர், ‘ஸாரி மேடம்... எல்லாத்தையும் எடுத்து வெச்சிடுறோம்...’ என்றதுடன், புகை பிடித்துக் கொண்டி ருந்தவர்களை அணைக்கச் சொன்னார். ‘நாங்களும் பொறுப்பான குடிமகன்கள்தான் மேடம்’ என்று மற்றொருவர் சொல்ல, ஒரு சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்து வந்தேன். என் கணவர் என்னைப் பார்த்த பார்வையில் அவ்வளவு ஆச்சர்யம்.

- டி.ஹெச்.லோகாவதி, மதுரை-12

பரிசு ரூ.300

திருமணப் பத்திரிகையுடன் ஒரு குறிப்பு!

மும்பையில் வசிக்கும் என் தோழி, தன் மகனின் திருமண அழைப்பிதழை அனுப்பியிருந்தாள். கூடவே, ‘மணமக்களுக்கு நீங்கள் அன்பளிப்பு ஏதேனும் அளிக்க விரும்பினால், அதை முடிந்தால் முதியோர் இல்லத்துக்கு அனுப்பிவிடுங்கள்’ என்ற குறிப்பும்,

சில முதியோர் இல்ல விவரங்களும் இருந்தன. கோவிட் காரணமாக நாங்கள் திருமணத்துக்குச் செல்லவில்லை என்றாலும், அவர்கள் குறிப்பிட்ட பட்டியலில் இருந்து ஒரு முதியோர் இல்லத்துக்கு மணமக்களின் பெயர்களை எழுதி எங்கள் அன்பளிப் புத் தொகையை அனுப்பினோம். சில நாள்களில் மண மக்களை மனதார வாழ்த்தியும், பணம் அனுப்பியதற்கு நன்றி கூறியும் அந்த இல்லத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. தோழியின் நேயம் என்னை நெகிழ வைத்தது.

- பானு பெரியதம்பி, சேலம்-30

அனுபவங்கள் ஆயிரம்!

பரிசு ரூ.300

பயணங்களின்போது செல்போன் வேண்டாமே!

கும்பகோணத்தில் இருந்து தஞ்சைக்கு பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தபோது ஜன்னலோரம் அமர்ந் திருந்த நான், மொபைலில் தேர்வுப் பாடத்தைப் பார்த்த படி இருந்தேன். அருகிலிருந்த பெண் என்னிடம் ஜன்னலைத் திறக்கச் சொல்ல, எதிர்பாராதவிதமாக செல்போன் வெளியில் விழுந்துவிட்டது. நான் சத்தம் போட, சில மீட்டர் தள்ளிச்சென்று நின்ற பேருந்தில் இருந்து என்னை இறக்கிவிட்டு, ‘போய் தேடி எடுத் துட்டு அடுத்த பஸ்ல வாம்மா’ என்று சென்றுவிட்டார் நடத்துநர். கிட்டத்தட்ட 10 நிமிடங்களானது மொபை லைத் தேடிக் கண்டெடுக்க. அன்றிலிருந்து, தவிர்க்க முடியாமல் பஸ்ஸில் செல்போனை எடுத்தாலும் வேலை முடிந்ததும் உடனடியாகப் பத்திரப்படுத்தி விட்டுத்தான் அடுத்த வேலை என்பதில் தீர்மானமாகி விட்டேன்.

- எஸ்.நித்தியலட்சுமி, கும்பகோணம்.

அனுபவங்கள் ஆயிரம்!

பரிசு ரூ.300

ஆணென்ன பெண்ணென்ன... பாம்பென்ன!

ஒரு நாள் இரவு, மாடி வீட்டு அக்கா படிக்கட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஓர் அறைக்குள் பாம்பு செல்வதைப் பார்த்துவிட்டு, எங்களிடம் சொன்னார். நான் அறைக்குள் செல்ல முற்பட்டபோது, ‘பொம்பளப் புள்ள, பயந்துருவ வேண்டாம்’ என்று தடுத்தார்கள். அங்கிருந்த ஆண்கள்

சிலர் உள்ளே சென்று கம்பால் தட்டிப் பார்த்தும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவழியாக அனுமதி பெற்று நான் சென்றபோது, சிலிண்டரின் அடியில் பாம்பு தஞ்சம் அடைந்திருந்ததைக் கண்டுபிடித்தேன். அருகிலிருந்த மற்றொரு சிலிண்டரை அதனருகில் நெருக்கி வைத்து பாம்பை நகரவிடாமல் செய்தேன். பின்னர் பாம்பு பிடிப்பவர்கள் வந்து அதைப் பிடித்துச் சென்றனர். இதிலிருந்து என்ன தெரிகிறது? ஆண், பெண் வேறுபாடெல்லாம் இல்லை... தைரியமும் தன்னம்பிக்கையுமே தேவை!

- @மகாலட்சுமி.சீ

உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்...

பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

சிறந்த அனுபவத்துக்குச் சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி:

அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com