ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அனுபவங்கள் ஆயிரம்!

டூர் பேக்கிங்!

சமீபத்தில் திருச்சியில் இருந்து கோவாவுக்கு ஆறு நாள் டூர் சென்றோம். எங்களுடன் வந்திருந்த ஒரு பெண் அவருடைய சூட்கேஸில் ஆறு கவர்களை வைத்திருந்தார். ஒவ்வொரு நாளும் குளித்த பின்னர், அணிந்த ஆடை களை கவருக்குள் வைத்து சூட்கேஸில் அடியில் வைத்து விட்டார். பயன்படுத்தாத ஆடைகள் மேலே இருந்தன. ஆனால் நானோ, உடுத்திய ஆடை, உடுத்தாத ஆடை என அனைத்தையும் சூட்கேஸுக்குள் ஒன்றாக வைத்த துடன், குளிக்கச் செல்லும்போது ஆடை குவியலில் இருந்து தேவையானவற்றை தேடி எடுப்பதும் திண்டாட்ட மாக இருந்தது. எனவே, தோழியின் டூர் பேக்கிங்கை பின்பற்றப் பழகிக்கொண்டேன்.

- எம்.ஏ.அமுதா, அரவக்குறிச்சிப்பட்டி

அனுபவங்கள் ஆயிரம்!

ப்ளீஸ் டாக்டர்!

என் மகளுடன் வீட்டருகே இருந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். டாக்டர் மொபைலில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தார். நான் சொன்னதை காதில் வாங்கினாலும், அவர் கண்கள் மொபைல் திரையில் இருந்து விலகவே இல்லை. மருந்துச் சீட்டு எழுதிக்கொடுத்துவிட்டு, மீண்டும் மேட்ச் பார்க்க ஆரம்பித்துவிட்ட அவரிடம் கேள்வி கேட்கவும் தோன்றவில்லை. நாம் சொன்னதை இவர் புரிந்துகொண்டுதான் மருந்து எழுதினாரா என்ற சந்தேகத்துடன் நான் மெடிக்கல் ஷாப் நோக்கி நகர, என் மகள் பிடிவாதமாக, அந்த மருந்தை வாங்க வேண்டாம் என மருந்துச் சீட்டை கசக்கி குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டாள். `டாக்டர் ஃபீஸ் 150 ரூபாய் நஷ்டம்’ என்றேன் நான். ‘அதோடு போச்சுனு நினைச்சிக்குவோம். நாம் சொன்னதை காதுலேயே வாங்காம அவர் எழுதின மருந்தை சாப்பிட்டு ஏதாச்சும் பிரச்னைனா என்ன செய்றது? இனி இவர்கிட்ட போகவே கூடாது’ என்றாள். பின் வேறொரு டாக்டரிடம்  சென்றோம். கால்பந்து வீராங்கனை பிரியாவை மருத்துவத் தவற்றுக்கு இழந்தபிறகு, இந்த அச்சம் அவசியமே என்றுதான் படுகிறது. அலட்சியமாய் நடந்துகொள்ளும் சில மருத்துவர் களைத் தவிர்க்க நாம் தயங்கக்கூடாது.

-ஸ்ரீ.மல்லிகா குரு, சென்னை-33

அனுபவங்கள் ஆயிரம்!

அப்டேட் ஆகுவோம்!

காதுகுத்துக்கு உறவினர் ஒருவர் பத்திரிகையை தபாலில் அனுப்பியிருந்தார். அந்த நாள், பத்திரிகையை எடுத்துக் கொண்டு விசேஷத்துக்குக் கிளம்பினேன். ஆனால், அதில் அவசர தொடர்புக்கான மொபைல் எண், விசேஷம் நடக்கும் இடத்துக்கான பேருந்து வழித்தடம் ஆகிய குறிப்புகள் இல்லை. எனவே இடையில் வழி தெரியாமல் நின்ற நான், இடம் கண்டுபிடித்துச் செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இப்போது பல பத்திரிகை களிலும், தொடர்பு எண், பஸ் ரூட் குறிப்பிடுவதுடன், சம்பந்தப்பட்டவர்கள் வாட்ஸ்அப்பில் லொக்கேஷன் வரை ஷேர் செய்துவிடுவது மிகவும் வசதியாக உள்ளது. மற்றவர்களும் இந்தப் பழக்கத்துக்கு அப்டேட் ஆவோம்!

- இந்திராணி தங்கவேல், சென்னை-126

அப்பாவுக்கு நன்றி!

என் அப்பாவிடம் நான் கற்றுக்கொண்ட விஷயம் இது. புத்தாண்டு மாத காலண்டர் வந்ததும், நான் ஆண்டு முழுவதும் செய்ய வேண்டிய முக்கிய வேலைகளை, மாதம் வாரியாக அதில் குறித்து மாட்டிவிடுவேன். உதார ணமாக... இருசக்கர வாகன இன்ஷூரன்ஸ், எல்.ஐ.சி. பணம் செலுத்தும் நாள், வருமானவரி செலுத்த வேண்டிய நாள், இயந்திரங்கள் சர்வீஸ் என அனைத் தையும் அதில் குறித்துவைத்துக்கொள்வேன். இந்தப் பழக்கம் இன்று வரை எனக்கு உதவியாக உள்ளது.

- வி.ஸ்வேதா விஸ்வநாதன், திருச்சி-12

அனுபவங்கள் ஆயிரம்!

மலைன்னா சும்மாவா?!

சமீபத்தில் குடும்பத்துடன் கொடைக்கானல் சுற்றுலா சென்றிருந்தபோது, மலைப்பகுதியில் நெடுநேரம் கார் ஓட்டியதால் சிறிது நேரம் ஓய்வு எடுக்க பார்க்கிங்குக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் வண்டியை நிறுத்தினோம். அப்போது அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஜோடி, நின்றிருந்த எங்கள் கார் மீது மோதி, காரை பதம் பார்த்து, அவர்களும் கீழே விழுந் தனர். நல்லவேளை... ஹெல்மெட் அணிந்திருந்த தால் சிறு காயங்களுடன் தப்பினர். சமதளத்தில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள், பயிற்சி இல்லாமல் மலைப்பகுதிக்கு வண்டியில் வரக்கூடாது. பிரேக்கை நன்கு சரி பார்த்தே எடுத்து வர வேண்டும். பாடல்களை சத்தமாக வைத்துக்கொண்டு மற்றொரு வாகனத்தை ஓவர்டேக் செய்வது கூடாது. விலங்குகள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் அவற்றுக்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது. அதிவேகமாக வண்டி ஓட்டக் கூடாது. வண்டியில் அதிக எடையுடைய பையை எடுத்துச் செல்லக் கூடாது. மேலும், எங்கள் மீது இடித்த ஜோடி சற்று எடை அதிகம். அவர்களது இருசக்கர வாகனம் மலை மீது அவர்களை ஏற்றத் திணறியது. சரிவில் பிரேக் அடித்தும் அவர்களது வண்டியின் சக்கரம் சறுக்கிக்கொண்டே சில அடி தூரம் சென்றது. சுற்றுலா சாகசப்பிரியர்களே... அடிப்படை விஷயங்களைக்கூட தெரிந்து கொள்ளாமல் உயிருடன் விளையாடாதீர்கள்! மலைப்பகுதியில் கரணம் தப்பினால் மரணம் தானே?

- இரா.அமிர்தவர்ஷினி, புதுச்சேரி-1

உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com