ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

உலகம் என் பார்வையில்... “உளுந்து தரமாக உள்ளது... விலைக்கு பேரம் பேசுகிறீர்களே?”

உளுந்து
பிரீமியம் ஸ்டோரி
News
உளுந்து

சிறப்புப் பரிசு குக்கர்

உங்கள் உணர்வுடன் ஏதோ ஒரு வகையில் நெருக்கமாகிவிட்ட ஒரு செய்தியைப் பற்றித் திருத்தமாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதுங்கள் என்று 22.11.2022 இதழில் அறிவித்திருந்தோம். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்புப் பரிசு குக்கர் பெறுகிறது இந்த உணர்வு...

எனது குடும்பம் விவசாயத்தைப் பின்புல மாகக் கொண்டது. தந்தையின் மறைவுக் குப் பிறகு குடும்ப சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு முழுநேர விவசாயியாக மாறியிருக்கிறேன். பாசமாக என்னைப் பார்த்துக் கொள்ளும் என் அம்மா, படிக்கும் தம்பி, தங்கைகள் ஆகியோருடன் நான் செய்யும் விவசாயத்தில் விளையும் பயிர்களையும் என் பிள்ளை களாகவே கருதுகிறேன்.

எங்கள் பகுதியானது வானம் பார்த்த பூமி. தண்ணீர் குறைவான பகுதி என்பதால் அதற்குத் தகுந்தாற்போல்தான் பயிரிடும் முறையும் இருக்கும். ஒருமுறை உளுந்து பயிரிட்டு அறுவடைசெய்து விற்பனைக்காக வைத்திருந்தோம். நானும் என் சகோதரரும் அதனை விற்பனை செய்வதற்காக ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு எடுத்துச் சென்றிருந்தோம். நாங்கள் கொண்டு சென்ற உளுந்து தரமாக உள்ளதாக அங்கு வந்த பிற விவசாயிகள்கூட பேசிக்கொண்டிருந்தார்கள்.

உலகம் என் பார்வையில்... “உளுந்து தரமாக உள்ளது... விலைக்கு பேரம் பேசுகிறீர்களே?”

அங்கு பொதுமக்களும் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்க வருவது வழக்கம். அப்படி வந்த சிலர் என்னிடம், “நீங்கள் கொண்டு வந்திருக்கும் உளுந்து தரமானதாக உள்ளது. அதை எங்களது வீட்டுப் பயன்பாட்டுக்காக வாங்க நினைக்கிறோம். அதற்கான பணத்தை நாங்கள் தருகிறோம்” என்றார்கள். முந்தைய நாளின் அதிகபட்ச விற்பனை விலையான ஒரு கிலோ 71 ரூபாய் என்ற விலையில் தருவதாகவும் தெரிவித்தனர்.

நானும் என் சகோதரருடன் கலந்து ஆலோசித்து அவர்களுக்கே விற்பனை செய்வதாக ஒப்புக்கொண்டோம். அந்த நேரத்தில் அங்கிருந்த சிலர், “எதற்கு அதிக விலை கொடுத்து வாங்குகிறீர்கள்” என அவர் களிடம் கூறவே, அவர்களும் விலையை மேலும் குறைத்துத் தரச் சொல்லி கேட்டார்கள்.

அப்போது அங்கிருந்த பெரியவர் ஒருவர், “உளுந்து தரமானதாக உள்ளது. விலையும் மார்க்கெட் விலையைவிட மலிவாக உள்ளது. ஏன் இன்னும் விலையைக் குறைத்துப் பேரம் பேசுகிறீர்கள்? நகர்ப்புறத்தில் இதன் மதிப்பு மிக அதிகம். அதைப் புரிந்துகொண்டு சரியான விலையைக் கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள்” என்றார்.

அவர்களோ முடிவு எடுத்தபாடு இல்லை. எங்களுக்கும் என்ன செய்வதென்று தெரிய வில்லை.

இறுதியாக, அந்தப் பெரியவரே, “ஒரு கிலோ உளுந்து 75 ரூபாய் என நானே இதை முழுவதுமாக வாங்கிக்கொள்கிறேன்” என்றார். அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சர்யம்.

“ஏதேதோ பொருள்களை எல்லாம் அதிக விலை கொடுத்து வாங்குகிறோம். நாம் உண்ணும் தரமான உணவுப் பொருளுக்கு தகுந்த விலை கொடுக்க யோசிக்கிறோம். சரியான விலை கொடுத்து வாங்கினால் இந்த விவசாயப் பெண்ணும் சந்தோஷம் அடைவார். இதை விளைவிக்க எவ்வளவு உழைப்பைக் கொடுத்திருப்பார்? அவர்களின் சந்தோஷமும் முக்கியம் அல்லவா?” என்றார்.

உளுந்தை வாங்கிக்கொண்டு விடைபெறும் போது, “என் சுயநலமும் இதில் உள்ளதும்மா. நகர்ப்புறத்தில் வசிக்கும் என் மகள் மற்றும் மகனுக்காகத்தான் இதை வாங்கிப் போகிறேன். தரமான பொருளை சரியான விலையில் வாங்கிக்கொடுக்கும் மகிழ்ச்சி எனக்கு. ஆரோக்கியமான உணவை சாப்பிடுகிறோம் என்ற மனநிறைவு அவர்களுக்கு” என்றவர், “எந்தச் சூழலிலும் விவசாயத்தைக் கைவிடா தீர்கள்” என்றார்.

அந்த நொடி நான் செய்யும் விவசாயம் எவ்வளவு பொறுப்பான பணி என்பதை உணரத் தொடங்கியிருந்தேன்.

- க.ஜெயலஷ்மி, திருவெண்ணெய்நல்லூர்

வாசகர்களே.... நீங்களும் எழுதி அனுப்பலாம்...

அனுப்ப வேண்டிய முகவரி:

உலகம் என் பார்வையில்...

அவள் விகடன், 757, அண்ணா சாலை,

சென்னை - 600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com