கட்டுரைகள்
Published:Updated:

திருமணமாகி மூன்று மாதங்கள், தள்ளிப்போகும் கணவர்; என்ன செய்ய வேண்டும் நான்?

பெண் டைரி
பிரீமியம் ஸ்டோரி
News
பெண் டைரி

பெண் டைரி I ஒரு வாசகியின் கடிதம்

எனக்கு சமீபத்தில்தான் திருமணம் முடிந்தது. கணவர் ஒரே ஊர், தூரத்து சொந்தம். சுயதொழில் செய்கிறார். நான் ஓர் அலுவலகத்தில் பணிபுரிகிறேன். அரேஞ்சுடு மேரேஜ். என்றாலும், பெண் பார்க்க வந்தபோதே, இருவரும் பேசி, இந்தத் திருமணத்தில் இருவருக்கும் சம்மதம் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டோம்.

திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகியும் எங்களுக்குள் தாம்பத்ய உறவு நடக்கவில்லை. கணவர் விலகிச் செல்கிறார். ஆரம்பத்தில், ‘தொழில்ல இப்போ கொஞ்சம் நஷ்டம். அந்த ஸ்ட்ரெஸ்ல இருக்கேன். கொஞ்ச நாள் வெயிட் பண்ணு ப்ளீஸ். என்னை கொஞ்சம் மென்டலி சரிபண்ணிக்கிறேன்’ என்றார். மற்றபடி என்னுடன் இயல்பாகப் பேசுகிறார், பழகுகிறார். எனவே, நான் அவரது முடிவைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, ஆனால், மூன்று மாதங்கள் கடந்தும், ‘எனக்குக் கொஞ்சம் டைம் வேணும், புரிஞ்சுக்கோ...’ என்று அவர் சொல்ல, எனக்குக் குழப்பங்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன.

திருமணமாகி மூன்று மாதங்கள், தள்ளிப்போகும் கணவர்; 
என்ன செய்ய வேண்டும் நான்?

நான் மெச்சூர்டான பெண். திருமணம் ஆனாலே தாம்பத்யம் நடந்துவிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. சொல்லப் போனால், என் கணவர் ஆரம்பத்தில் இப்படி ஒரு முடிவைச் சொன்னபோது, `அந்தக் காலகட்டம் நாங்கள் பேசி ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வாய்ப்பாக அமையட்டும், அவர் கொஞ்சம் ஸ்ட்ரெஸ் ஃப்ரீ ஆகட்டும்’ என்று பாசிட்டிவ்வாகத்தான் எடுத்துக்கொண்டேன். அவரது இந்த முடிவு பற்றி என் வீட்டிலோ, அவர் வீட்டிலோ யாரிடமும் பகிர்ந்துகொள்ளக்கூட இல்லை.

ஆனால், மூன்று மாதங்கள் கடந்தும் அவர் சொன்னதையே சொல்லும்போது, என் மனதில் கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. அவர் யாரையாவது காதலித்து, பெற்றோர் வற்புறுத்தலால் என்னைத் திருமணம் செய்துகொண்டாரா... அல்லது என்னை அவருக்குப் பிடிக்கவில்லையா... அல்லது தொழில் நஷ்டம் ஏற்படுத்திய மன அழுத்தத்தால் அவர் மனநல சிகிச்சையின் தேவையில் இருக்கிறாரா... அல்லது செக்‌ஷுவல் ரிலேஷன்ஷிப்பில் அவருக்கு உடலளவில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா... இப்படி எனக்குள் கேள்விகள் தோன்றுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.

இதைக் கணவரிடமே கேட்டுவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், அவர் காயப்பட்டு, தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டுவிடுமோ என்றும் யோசனையாக இருந்தது. இன்னொரு பக்கம், அவர் ஏதேனும் பிரச்னையில் இருந்து, இதைக் கேட்பதன் மூலம் அதிலிருந்து அவர் விடுபட நம்மால் முடிந்தால் உதவலாமே என்றும் தோன்றியது.

திருமணமாகி மூன்று மாதங்கள், தள்ளிப்போகும் கணவர்; 
என்ன செய்ய வேண்டும் நான்?

இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்திருந்த அவர் நண்பர்கள், ‘இவன் எங்க கேங்ல நம்பர் 1 ரொமான்டிக் ஹீரோ. ஸ்கூல், காலேஜ்னு இவனை க்ரஷ்னு சொல்ற பொண்ணுங்க டபுள் டிஜிட்ல இருக்கும்...’ என்றெல்லாம் சொல்லி அவரைக் கிண்டல் செய்தார்கள். ஆனால், அவரின் நண்பர்கள் சொன்னதுபோல, ஒரு ரொமான்டிக் ஆளாக அவர் என்னிடம் தன்னை இதுவரை வெளிப்படுத்திக் கொண்டதே இல்லை. திருமணமான இந்த மூன்று மாதங்களில் ஒரு தோழியைப்போல, உறவுக்காரப் பெண்போலத்தான் என்னிடம் நடந்துகொள்கிறார்.

இப்போது என் மற்ற சந்தேகங்களெல்லாம் மறைந்து, ஒருவேளை என்னை அவருக்குப் பிடிக்கவில்லையோ, பெற்றோருக்காகத் திருமணம் செய்துகொண்டாரோ என்ற கேள்வி மட்டும் பூதாகரமாக நிற்கிறது. அவருக்குத் தாழ்வு மனப்பான்மை வந்துவிடக் கூடாது என நினைத்தது போய், எனக்குத் தாழ்வு மனப்பான்மை வந்துவிட்டதைப்போல உணர்கிறேன்.

எங்கள் இடைவெளிக்குக் காரணம் என்ன... என் குழப்பத்துக்குத் தீர்வு என்ன?

(வாசகிக்கான உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் தெரிவிக்கலாம்.)