ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

உலகம் என் பார்வையில்... பெண் அல்ல... அஷ்டாவதானி!

சிறப்புப் பரிசு குக்கர்
பிரீமியம் ஸ்டோரி
News
சிறப்புப் பரிசு குக்கர்

வாய்ப்புகள் நம்மை நோக்கி வரும் என்று காத்திருப்பதைவிட கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திய அந்தப் பெண்ணின் சமயோசிதம் ஆச்சர்யப்பட வைத்தது.

உங்கள் உணர்வுடன் ஏதோ ஒரு வகையில் நெருக்கமாகிவிட்ட ஒரு அனுபவத்தைப் பற்றித் திருத்தமாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதுங்கள் என்று அறிவித்திருந்தோம். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்புப் பரிசு குக்கர் பெறுகிறது இந்த அனுபவப் பகிர்வு...

எங்கள் வீட்டுக்கு தினமும் பால் போடுவதற்கு ஒரு பெண் வருவார். அந்தப் பெண் ஓர் ஆசானாக மாறிய அனுபவப் பகிர்வுதான் இது.

அந்தப் பெண்ணின் தள்ளுவண்டியின் இரு கைப்பிடியிலும் மூன்று பெரிய பைகள் தொங்கிக்கொண்டு இருக்கும். ஒவ்வொரு பைக்குள்ளும் சிறிய சிறிய கவரில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி மூன்று கலந்த ஒரு சிறிய கட்டு இருக்கும். ஒவ்வொன்றின் விலையும் 5 ரூபாய்தான். பால் பாக்கெட் போடுவதுடன் கேட்பவர்களுக்கு இவற்றையும் விற்பனை செய்கிறார்.

அவரிடம் இந்த வியாபாரத்தைப் பற்றி கேட்டபோது, “காலை நேரத்துல அவசரம் அவசரமா சமைக்கிறவங்களுக்கு உபயோக மாக இருக்கும். தினமும் ஃபிரெஷ்ஷா கொடுக்கிறதால விருப்பப்பட்டு நிறைய பேர் வாங்குறாங்க” என்றவர் அடுத்து சொன்னது தான் எனக்கான, நமக்கான பாடம். “முதலீடு செஞ்சு கடை வைக்க வசதியும் இல்லை. பால் பாக்கெட் போடும்போது இந்த வியாபாரத் தையும் சேர்த்துப் பார்த்துடுறேன். அதனால ஒருநாளைக்கு குறைஞ்சது 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வியாபாரம். இதுக்கு முதலீடும் குறைவு. காலையில 9 மணியில இருந்து 6 மணி வரை கார்மென்ட் கம்பெனியில வேல பாக்குறேன். என்னோட இரண்டு குழந்தை களையும் வளர்க்கிறதுக்கும் குடிகார கணவரை சமாளிப்பதற்கும் அந்த வருமானம் உதவுது. நான் வேலை பார்க்குற கார்மென்ட் கம்பெனி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பக்கத்துலதான் இருக்கும். மார்கெட்ல சாயங்காலமானா குறைவான விலையில பச்சைமிளகாய், இஞ்சி, கறி வேப்பிலை, புதினா, மல்லித்தழை எல்லாம் கிடைக்கும். அதை வாங்கி வீட்லயே பிரிச்சு கவர்ல போட்டு வெச்சிடுவேன். பால் பாக் கெட் போடுறதுகூட இந்த வியா பாரத்தையும் சேர்த்துப் பார்த்துடுறேன். அதனால் மாசம் கூடுதல் வருமானம் கிடைக்குது. இதுக்காக தனியா நேரம் செலவழிக்கவும் தேவையில்லை” என்றார்.

வாய்ப்புகள் நம்மை நோக்கி வரும் என்று காத்திருப்பதைவிட கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திய அந்தப் பெண்ணின் சமயோசிதம் ஆச்சர்யப்பட வைத்தது. ஒரே நேரத்தில் இரண்டு வியாபாரம், நேர மேலாண்மை, தனி நபராக குடும்பத்தை வழி நடத்துவது எனப் பல ஆச்சர்யங்களின் அடை யாளமாகத் தெரிந்தார் அந்தப் பெண்.

இவளல்லவோ அஷ்டாவதானி!

- லஷ்மி ஸ்ரீநிவாசன், சென்னை-24

வாசகர்களே.... நீங்களும் எழுதி அனுப்பலாம்...

அனுப்ப வேண்டிய முகவரி:

உலகம் என் பார்வையில்...

அவள் விகடன், 757, அண்ணா சாலை,

சென்னை - 600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com