லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

உலகம் என் பார்வையில்... கடுகளவு அறிவிருந்தாலும் அப்படிச் செய்திருக்க மாட்டார்கள்!

உலகம் என் பார்வையில்...
பிரீமியம் ஸ்டோரி
News
உலகம் என் பார்வையில்...

சிறப்புப் பரிசு புடவை

உங்கள் உணர்வுடன் ஏதோ ஒரு வகையில் நெருக்கமாகிவிட்ட ஓர் அனுபவத்தைப் பற்றித் திருத்தமாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதுங்கள் என்று அறிவித்திருந்தோம். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்புப் பரிசு புடவை பெறுகிறது, இந்த அனுபவப் பகிர்வு...

அன்று ஜனவரி 27. முந்தைய நாள் குடியரசு தினம் என்பதால், வாரத்தின் இடையே கிடைத்த விடுமுறையை அனுபவித்த சந்தோஷத்தில் மறுநாள் அரை மணி நேரம் முன்னதாகவே அலுவலகத்துக்குக் கிளம்பி விட்டேன். என் வீடு இருப்பது கோடம்பாக்கம், லிபர்ட்டி அருகே. அங்கிருந்து ஒரே நேர் ரோட்டில் நடந்து வந்தால் மீனாட்சி கல்லூரி பேருந்து நிறுத்தம் வந்து விடும். அங்கிருந்து அண்ணா சாலை, பழைய ஆனந்த் தியேட்டர் அருகில் இருக்கிற அலுவலகத்துக்கு வருவதற்கு இரண்டு பேருந்துகள் கிடைக்கும்.

காலை நேரத்தில் அந்தப் பேருந்துகள் நிரம்பி வழியும் என்பதால், நான் ஒருநாளும் அந்தப் பேருந்துகளில் ஏறியதில்லை. அதற்கு பதில், வடபழனி டு எல்.ஐ.சி வரும் ஷேர் ஆட்டோவில் ஏறுவேன். அல்லது ஐஸ் ஹவுஸ் செல்லும் ஷேர் ஆட்டோவில் ஏறி ஆயிரம் விளக்கு பேருந்து நிறுத்தம் அருகேயிருக்கும் சுரங்கப்பாதை அருகே இறங்கி, நடந்தே அலுவலகம் வந்து விடுவேன்.

உலகம் என் பார்வையில்... கடுகளவு அறிவிருந்தாலும் 
அப்படிச் செய்திருக்க மாட்டார்கள்!

ஜனவரி 27 அன்றும் வழக்கம்போல ஷேர் ஆட்டோவுக்காக காத்திருந்தேன். எல்.ஐ.சி வரை செல்லும் இரண்டு ஷேர் ஆட்டோக்கள் நிரம்பி வழிந்தபடி என்னைக் கடந்து செல்ல, அவசரத்துக்கு உதவும் ஐஸ் ஹவுஸ் செல்லும் ஷேர் ஆட்டோவாவது வந்துவிடாதா என்று காத்திருக்க ஆரம்பித்தேன். எதிர்பார்த்ததை போலவே அடுத்த சில நிமிடங்களில் ஐஸ் ஹவுஸ் செல்லும் ஷேர் ஆட்டோ வந்தது. ஆனால், நிரம்பி வழிந்தபடி... அரை மணி நேரம் முன்னதாக கிளம்பிய சந்தோஷ மெல்லாம் வடிந்துபோய் நின்றுகொண்டிருந்த நேரத்தில் எல்.ஐ.சி வரை செல்லும் ஷேர் ஆட்டோ ஒன்று வர, அதில் எனக்கு இடமும் இருக்க, ‘அப்பாடா’ என்றபடி ஏறி உட்கார்ந்தேன். இறங்கும்போது பணம் கொடுத்தால் போதுமென்பதால், ஹெட் செட்டை காதில் மாட்டி செல்போனில் எனக்குப் பிடித்தமான பாடல்களை கேட்க ஆரம்பித்தேன். இது என் னுடைய தினசரி வழக்கம். ஆட்டோ விலிருந்து இறங்கிய பிறகும், அலுவலகத்துக் குள் நுழையும் வரைக்கும் எனக்குப் பிடித்த ஏதோவொரு பாடலை ஹெட் செட் மூல மாகக் கேட்டபடியேதான் இருப்பேன்.

ஐஸ் ஹவுஸ் செல்லும் ஷேர் ஆட்டோவில் ஏறினால், ஆயிரம் விளக்கு சுரங்கப்பாதை அருகே இறங்கி, பாட்டுக் கேட்டபடியே ரிலாக்ஸாக பிளாட்பாரத்தில் நடப்பேன். அலுவலக வேலைகளில் பரபரப்பாக இயங்க ஆரம்பிப்பதற்கு முன்னால், மனதைக் கொஞ்சம் இலகுவாக வைத்துக்கொள்வதற் காகத்தான் இப்படி இசைக் கேட்பது. நான் மட்டுமல்ல, அந்த பிளாட்பாரத்தில் நடந்து செல்லும் பலரும் என்னைப்போல் காதுகளில் ஹெட் செட் மாட்டியபடிதான் நடப்பார்கள்.

ஜனவரி 27 அன்று, நான் ஏறிய ஷேர் ஆட்டோ பாம்குரோவ் ஹோட்டலை தாண்டி அண்ணாசாலைக்குள் நுழைந்த பிறகு, மெதுவாக நகர ஆரம்பித்தது. வழக்கம்போல போக்குவரத்து நெரிசலாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். கிரீம்ஸ் ரோட்டை எட்டிய பிறகு ஆட்டோ ஓர் இன்ச் கூட நகரவில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் கார், பைக், பஸ், ஆட்டோ என வரிசைக்கட்டி நின்றுகொண்டிருந்தன. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் ஆட்டோ ஒரே இடத்திலேயே நின்று கொண்டிருக்க, ஷேர் ஆட்டோ டிரைவர் தன்னுடைய சக டிரைவர் களுக்கு போன் செய்து ‘என்ன பிரச்னை’ என்று விசாரிக்க ஆரம்பித்தார்.

‘தவுசண்ட் லைட் சப்வேகிட்ட பழைய பில்டிங் ஒண்ணு விழுந்து போச்சாம். நிறைய பேர் மாட்டிக்கிட்டாங்களாம். ஒரு பொண்ணு செத்தே போச்சாம்’ என்று அவர் சொன்ன தகவலைக் கேட்டு ஆட்டோவிலிருந்தே அனைவரும் ஒரு நிமிடம் நடுநடுங்கி விட் டோம். காவல்துறையினர் வந்து, ஆம்புலன்ஸ் வந்து, இடிபாடுகளில் சிக்கிய வர்களை மீட்டு, போக்குவரத்தை ஒழுங்கு செய்ய கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகிவிட்டது.

ஷேர் ஆட்டோ ஆயிரம் விளக்கு சுரங்கப் பாதையைக் கடக்கையில் கண்ணில்பட்ட இடிபாடுகள் ஒரு நிமிடம் உயிர் வரை பதற வைத்துவிட்டது. அந்த இடம், பல வருடங்களாக நானும், என்னைப் போல் பலரும் ரிலாக்ஸாக பாட்டுக் கேட்டபடி நடக்கும் பிளாட்பார்ம். அன்றைக்கு ஐஸ் ஹவுஸ் செல்லும் ஷேர் ஆட்டோவில் நான் ஏறியிருந்தால்... வழக்கம்போல இந்த பிளாட் பார்மில் நடந்துபோயிருந்தால்... இடிபாடு களில் சிக்கியவர்களில் நானும் ஒருத்தியாக இருக்கலாம். ஏன், நசுங்கி இறந்தது நானாகவும் இருந்திருக்கலாம். அப்படி ஏதாவது நிகழ்ந் திருந்தால், என்னை நம்பியிருக்கும் என் குடும் பத்தின் நிலைமை... நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது.

இறந்த அந்தப் பெண் ‘பத்திரமா பிளாட் பார்ம்ல நடந்துபோறோம்’ என்றுதானே நம்பி நடந்திருப்பாள்..? ‘என் பொண்ணு சாயங் காலம் வீட்டுக்கு வந்திடுவா’ என்று தானே அவளுடைய குடும்பம் நம்பியிருக்கும்..? அண்ணா சாலையில், அதிலும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஏரியாவில், பக்கத்தி லேயே பேருந்து நிறுத்தம் இருக்கும் இடத்தில், பீக் ஹவரில்... கடுகளவு அறிவிருப்பவர்கள்கூட கட்டடத்தை இடிக்க மாட்டார்கள். ஓர் இளம் பெண்ணின் உயிரைப் பறித்தே விட்டது சிலருடைய அறிவிலித்தனம்.

ஓர் உயிர் போனபிறகு, அந்த இடத்தில் தற்போது சிமென்ட் ஷீட்டை வைத்து அடைத்திருக்கிறார்கள். காலம் கடந்த இந்த செயல் இறந்துபோன அந்தப் பெண்ணை மறுபடியும் உயிர்ப்பித்து தருமா? தரத்தான் முடியுமா?

- சுஜாதா ஜோசப், சென்னை-24