Published:Updated:

“தாய்ப் பத்திரம் வேண்டும்!” - பதிவுத் துறை நிபந்தனை... பதறும் ரியல் எஸ்டேட் துறை

“தாய்ப் பத்திரம் வேண்டும்!” - பதிவுத் துறை நிபந்தனை... பதறும் ரியல் எஸ்டேட் துறை
பிரீமியம் ஸ்டோரி
News
“தாய்ப் பத்திரம் வேண்டும்!” - பதிவுத் துறை நிபந்தனை... பதறும் ரியல் எஸ்டேட் துறை

“தாய்ப் பத்திரம் வேண்டும்!” - பதிவுத் துறை நிபந்தனை... பதறும் ரியல் எஸ்டேட் துறை

ண மதிப்பிழப்பு நடவடிக்கை, அங்கீகாரமில்லாத மனைப்பிரிவு பதிவு பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் சொத்துகளை விற்பதும் வாங்குவதும் பெரிதும் குறைந்தது. இதனால் பதிவுத்துறை தொய்வடைந்தது. இந்தப் பிரச்னையிலிருந்து மீண்டுவரும் நேரத்தில், பதிவுத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் மற்றும் பத்திரப்பதிவுத் தொழில் செய்பவர்களின் தலையில் இடியாக விழுந்துள்ளது.

‘போலி ஆவணங்கள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், ஆவணப் பதிவின்போது அந்த இடம் தொடர்பான தாய்ப் பத்திரம் பதிவாளரால் சரிபார்க்கப்பட வேண்டும். இதை உறுதிசெய்ய, அதில் குறிப்பு எழுதி, தேதியுடன்  கையொப்பமிட வேண்டும். அசல் ஆவணம் தொலைந்துபோயிருந்தால், அதுபற்றி காவல்துறையால் அளிக்கப்பட்ட சான்றைச் சரிபார்க்க வேண்டும். வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டிருந்தால், வங்கியிலிருந்து இதுதொடர்பாக வாங்கிய சான்றைச் சரிபார்க்க வேண்டும்’ எனப் பதிவுத் துறை ஐ.ஜி குமரகுருபரன் அந்தத் துறையில் உள்ளவர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

“தாய்ப் பத்திரம் வேண்டும்!” - பதிவுத் துறை நிபந்தனை... பதறும் ரியல் எஸ்டேட் துறை

‘‘இந்த விதி, பதிவுத்துறைச் சட்டம் மற்றும் விதிகளுக்குப் புறம்பானது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அசல் ஆவணத்தில் முத்திரை அளித்து, அதை ஸ்கேன் செய்துகொண்டு, பிறகு அது உரியவர் களிடம் ஒப்படைக்கப்படும் என்கிறார்கள். ஒரு குடும்பத்தில் நான்கு பேருக்கு ஒரு சொத்து பாகப்பிரிவினை செய்தபிறகு, அதில் ஒருவரிடம்தான் தாய்ப் பத்திரம் இருக்கும். பிற்காலத்தில் அவர்களுக்குள் தகராறு ஏற்படும் சூழலில், தாய்ப் பத்திரம் வைத்திருக்காதவர்கள் தங்களது நிலத்தை விற்பனை செய்யும்போது சிக்கல் வரும். தாய்ப் பத்திரத்தை வைத்திருப்பவர், அதை இவருக்குக் கொடுக்கவில்லையென்றால் பத்திரத்தைப் பதிவுசெய்ய முடியாது. இதனால் பகை மேலும் பகையாகிக்கொண்டே செல்லும். அப்பார்ட்மென்ட் போன்றவற்றில் சுமார் 50 குடியிருப்புகளுக்கு ஒரு தாய்ப் பத்திரம்தான் இருக்கும். யாரிடம் தாய்ப் பத்திரம் கேட்டு அணுகுவது? ஏற்கெனவே ஏராளமான பிரச்னைகளால் ரியல் எஸ்டேட் துறை சரிவில் உள்ளது. இந்த உத்தரவால் நிலம் மற்றும் வீடுகளின் விற்பனை சுத்தமாக முடங்கிப் போய்விடும் ” என்பது ரியல் எஸ்டேட் துறையைச் சார்ந்திருப்பவர்களின் பதற்றம்.

இதுகுறித்து காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மாவட்டப் பதிவாளர் செங்கல்வராயன், “இந்தச் சுற்றறிக்கையே பதிவுச் சட்டத்துக்குப் புறம்பானது. பதிவுத்துறை விதிகளில் திருத்தம் கொண்டுவர வேண்டு மென்றால், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, ஜனாதிபதியிடம் ஒப்புதல் வாங்கிய பிறகுதான் செயல்படுத்த முடியும். ஆனால், இதை மிகச் சாதாரணமாக ஒரு சுற்றறிக்கையில் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்குப் பதிவுத்துறை ஐ.ஜி  தெரிவிக்கிறார்.

பதிவு செய்யப்பட்ட ஒரு பத்திரத்தில், மீண்டும்  எழுத சட்டத்தில் யாருக்கும் அனுமதி கிடையாது. நீதிமன்ற உத்தரவு பெற்று மட்டுமே ஆவண நகலில் குறிப்புகள் எழுத முடியும். தற்போது, ‘பத்திரத்தை ஒருவரிடமிருந்து வாங்கி, அதனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சில நாள்கள் வைத்திருந்து, சார்பதிவாளர் மேலெழுத்து சான்றிடுவர்’ எனச் சொல்கிறார்கள். சார்பதிவாளர் நில உரிமை ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டுமென்றால், வில்லங்கச் சான்று மட்டுமே போதுமானது. ஆவணத்தில் உள்ள வாசகங்களின் அடிப்படையில்தான் பத்திரத்தைப் பதிவுசெய்ய வேண்டும். தற்போது உள்ள சுற்றறிக்கையின்படி, சார்பதிவாளர்களிடம் அசல் ஆவணங்களைக் கொடுத்து, அது தொலைந்து விட்டால் யார் பொறுப்பேற்பார்கள்? அங்கே தொலையாமல் இருக்கும் என்பதற்கு யார் உத்தரவாதம் கொடுப்பார்கள்? அசல் ஆவணங்களைப் பெறும் பதிவாளர், ‘இன்னாரிடம் அசல் ஆவணம் பெற்றுக் கொள்ளப்பட்டது’ எனக் காப்புறுதி ரசீது அளிப்பாரா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“தாய்ப் பத்திரம் வேண்டும்!” - பதிவுத் துறை நிபந்தனை... பதறும் ரியல் எஸ்டேட் துறை

‘சார்பதிவாளர் என்பவர் நீதிபதி அல்ல. அவர் பதிவுக் கட்டணத்தையும் ஸ்டாம்பையும் வசூல் செய்யும் முகவராக மட்டுமே செயல்பட அதிகாரம் படைத்தவர்’ எனப் பல வழக்குகளில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நில உரிமையில் பிரச்னையென்றால், நீதிமன்றத்துக்குத்தான் செல்ல வேண்டும். மாறாக, ஒரு நீதிபதி போல ஒரிஜினல் டாக்குமென்டுகளைப் பதிவாளரிடம் கொடுக்க வேண்டும் எனத் தற்போது உத்தரவு போட்டுள்ளனர்” என்கிறார்.

இதுகுறித்து பதிவுத்துறை ஐ.ஜி குமரகுருபரனிடம் பேசினோம். “தாய்ப் பத்திரத்தைச் சரிபார்ப்பது என்பது, ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் முறைதான். அதில் சரிபார்த்ததற்குச் சான்றாகத் தற்போது கையொப்பம் இடச் சொல்லியுள்ளோம்; அவ்வளவுதான். சார்பதிவாளர்களின் அலட்சியத்தால்தான் சிலர் சொத்துகளை இழந்து நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டுள்ளனர். பதிவுத்துறையில் ஒரு சுற்றறிக்கை அனுப்புவதற்கும், கண்காணிப்பதற்கும் ஐ.ஜி-க்கு அதிகாரம் உள்ளது. சில சார்பதிவாளர்கள், தவறான முறையில் சம்பாதிப்பதற்காக இதுபோன்ற பிரச்னைகளை எழுப்புகிறார்கள். தாய்ப் பத்திரத்தைச் சார்பதிவாளரிடம் கொடுத்தால், அதைப் பார்த்துவிட்டு அப்போதே திருப்பிக் கொடுத்துவிடுவார். அவர் வைத்துக்கொள்ள மாட்டார். நீங்கள் சொல்வதுபோல் பாகப்பிரிவினைப் பத்திரங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்காகச் சில திருத்தங்களைக் கொண்டுவரலாம். ஆனால், மற்ற பதிவுகளுக்குத் தாய்ப் பத்திரம் கட்டாயம்” என்று சொன்னார்.

நாம் பதிவுத்துறை ஐ.ஜி-யிடம் பேசியதைத் தொடர்ந்து அடுத்த நாளே மீண்டும் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. ‘பாகப்பிரிவினை காரணமாகத் தாய்ப் பத்திரம் இல்லாதவர்கள், பதிவுக்காக அசல் தாய்ப் பத்திரத்தைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சார்பதிவாளர்கள் அசல் பத்திரத்தைச் சரிபார்க்க வாங்கினால்,   அதை அலுவலகத்தில் வைத்திருக்கக் கூடாது. சரிபார்த்துவிட்டு அப்போதே உரியவரிடம் அதைக் கொடுத்துவிட வேண்டும்’ என அந்தச் சுற்றறிக்கை குறிப்பிட்டது. நாம் குறிப்பிட்ட குறைகளை நிவர்த்தி செய்வதாக இருந்தது அந்த அறிவிப்பு.

நல்லது நடந்தால் சரிதான்!

- பா.ஜெயவேல்