அலசல்
Published:Updated:

கரை சேர்ந்தால் உயிர் வாழ ஒரு நாடு... இல்லையென்றால் கடலே இடுகாடு!

அகதிகளின் மரணப் பயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
அகதிகளின் மரணப் பயணம்

அகதிகளின் மரணப் பயணம்

‘‘எனது மகன் யாழ்ப்பாணத்தில் இருக்கிறான். மனைவி கொழும்பில், தந்தை வன்னியில், நோயாளியான தாய் தமிழகத்தில், சகோதரி பிரான்ஸில், உறவினர்கள் ஃபிராங்பர்ட்டில், நானோ ஆஸ்லோவில் வழிதவறிப்போன ஒட்டகம்போல் வாழ்கிறேன். விதிக் குரங்கால் சிதறடிக்கப்பட்ட பஞ்சுத் தலையணைபோல எங்கள் குடும்பத்தினர்...’’ - ஓர் ஈழ அகதியின் பாடுகளை ‘அகதியின் துயரம்’ நூலில் இப்படியாக விவரித்திருப்பார் பேராசிரியர் சூரியநாராயணன்!

ஓர் அகதியின் துயரத்தை இதைவிட அழுத்தமாக யாராலும் சொல்லிவிட முடியாது. சில ஆண்டுகளுக்கு முன் துருக்கி கடற்கரையில் ஒதுங்கிய ஏலான் என்ற நான்கு வயது சிறுவனின் சடலம், அகதிகளின் உயிர் வாழும் போராட்டம் எப்படியானது என்று உலக மக்களின் முகத்தில் அறைந்து உணர்த்தியது. ‘பல்வேறு பிரச்னைகளால் சொந்த நாட்டைவிட்டு ஏழு கோடிக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தினமும் 35,000 பேர் சொந்த நிலத்தைவிட்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள்’ என்று கூறுகிறது புலம் பெயர்ந்தோர் தொடர்பான ஒரு புள்ளிவிவரம். அவர்களில் ஈழத்தமிழர்களும் அடங்குவர்.

கரை சேர்ந்தால் உயிர் வாழ ஒரு நாடு... இல்லையென்றால் கடலே இடுகாடு!

உள்நாட்டு அரசியல், ஒற்றை தேசியப் பார்வை, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் சமீபகாலமாக அகதிகளை பல்வேறு நாடுகள் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், பலரும் உயிரைப் பணயம்வைத்து சட்டவிரோதமாகச் செல்கிறார்கள். இதற்காக ஈழத்தமிழர்கள் தேர்ந்தெடுக்கும் ஆழிவழிப் பயணம், வலி மிகுந்தது. கனடாவுக்குச் செல்வதற்காக மதுரை மற்றும் மங்களூரில் தங்கியிருந்த இலங்கைத் தமிழர்கள் 65 பேர் சமீபத்தில் கைதுசெய்யப்பட்ட சம்பவம் இதற்கு ஓர் உதாரணம். ஏஜென்ட்டுகளிடம் லட்சக் கணக்கில் பணத்தைக் கொடுத்து ராமேஸ்வரம், தூத்துக்குடி வந்து, மதுரை மற்றும் கர்நாடகாவின் மங்களூரில் சின்னச் சின்ன அறைகளில் தங்கியிருந்து, கனடா செல்லும் கடல்வழி மரணப் பயணத்துக்குக் காத்திருந்த வேளையில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை கனடாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்த ஏஜென்ட்டுகளும் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். நேற்று, இன்றல்ல இவர்களின் துயரப்பாடுகள்!

கடந்த 1983-ம் ஆண்டில் இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமானபோது, ஈழத்தமிழர்கள் பல நாடுகளுக்கும் அகதிகளாகப் புலம்பெயர்ந்தனர். இந்தியாவில் மட்டும் மூன்று லட்சம் பேர் தஞ்சம் புகுந்தனர். நாளடைவில் பலர் சொந்த நாட்டுக்கும், பலர் வெவ்வேறு நாடுகளுக்கும் கிளம்பினர். 2009-ம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்த பிறகு பெரும் உயிரிழப்புகள், உடல் உறுப்பு இழப்புகள், பொருளாதார இழப்புகள் எனப் பல இழப்புகளைத் தாங்கிக்கொண்டாலும், இலங்கை தமிழ் மக்களால் நிம்மதியாக மூச்சுவிட முடியவில்லை. அதனால், இப்போதும் நிம்மதியான வாழ்க்கையைத் தேடி பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழக முகாம்களிலும் வெளியிலும் இலங்கை அகதிகள் 92,978 பேர் வசித்துவரும் நிலையில், இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்ல உயிரைப் பணயம் வைக்கும் தமிழர்கள் பற்றி அதன் உள் விவரங்கள் அறிந்தவர்களிடம் பேசினோம். ‘‘கனடா போன்ற நாடுகளுக்குக் கள்ளத்தனமாகச் செல்ல ஒவ்வொருவரும் ஏஜென்ட்டுகளிடம் லட்சக்கணக்கில் கொடுத்து இந்தப் பயணத்தைத் தொடர்கிறார்கள். இந்தப் பயணம் எப்போது முடியும் என்று யாருக்கும் தெரியாது. பெரிய மீன்பிடிப் படகுகள், சிறிய ஃபைபர் படகுகளில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, மண்டபம் கடற்கரைகளில் வந்து இறங்குகிறார்கள். இங்கிருக்கும் நேவி, கோஸ்ட் கார்டு, தமிழக கடலோரக் காவல் படை கண்களில் படாமல் மதுரை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் தங்குகிறார்கள். அடுத்த பயணம் பற்றி ஏஜென்ட் சொல்லும் வரை, வெளியே எங்கும் செல்லாமல் பூட்டிய அறைக்குள் அடைந்துகிடந்து, கிடைக்கும் உணவை உண்டு வாழ்கிறார்கள். அப்படித்தான் மதுரைக்கு வந்த 27 நபர்களும் கப்பலூர் தொழிற்பேட்டை அருகில் ஒரு சிறிய வீட்டில் ஒரு மாதம் வசித்திருக்கிறார்கள். சிலர் மங்களூரிலும் தங்கியிருக்கிறார்கள். ஒரு சிலர் வெளியே தலையைக்காட்டவே... காவல்துறையினரிடம் சிக்கிவிட்டார்கள்.

கரை சேர்ந்தால் உயிர் வாழ ஒரு நாடு... இல்லையென்றால் கடலே இடுகாடு!

தற்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் சட்டவிரோதமான குடியேறிகளைத் தடுக்க, பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவருகின்றன. ஆனாலும், கடல்வழியாகவும் நிலம் வழியாகவும் எல்லையைக் கடக்க பல நாட்டு அகதிகளும் முயன்றுவருகிறார்கள். கடந்த காலங்களில் ஆஸ்திரேலியாவுக்குச் சட்டவிரோதமாகப் படகு மூலம் சென்ற பல ஈழத்தமிழர்கள் கடலில் சிக்கிப் பலியாகியுள்ளார்கள். இதுபோல் ஐரோப்பிய நாடுகளுக்கு மத்திய தரைக்கடல் வழியாகச் செல்லும்போதும் பல நாட்டு அகதிகள் பலியாகியிருக்கிறார்கள்.

வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்திவிடுவதற்கென்றே பல நாடுகளிலும் ஏஜென்ட்டுகள் இருக்கிறார்கள். இவர்களுக்குத் தேவை பணம் மட்டும்தான். மனித உயிர்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். நாடு கடந்து செல்லும் சாலைகளில் ட்ரக்குகளில் அடிமாடுகள் போல இவர்கள் பதுங்கிச் செல்கிறார்கள். கடலில் மீன்பிடிக் கப்பல்களிலும், கன்டெய்னர் கப்பல்களிலும், மூச்சுத்திணறும் டேங்கர்களிலலும் பயணிக்கிறார்கள். அளவான உணவுதான் சாப்பிட முடியும். மலம் கழிக்க முடியாது. இரவு பகல் தெரியாது. இந்தப் பயணத்தில் நோய் தாக்கி இறப்பவர்களும் உண்டு. சண்டை போட்டுக்கொள்வோரும் உண்டு. இந்தக் கண்டத்தையெல்லாம் தாண்டி இமிகிரேஷன் அதிகாரிகள், ராணுவத்தினரிடம் சிக்காமல் ஒரு நாட்டுக்குள் நுழைந்துவிட்டால் அது அவர்களுக்கு மறுபிறப்புதான். ஆனால், இப்படியொரு பயணம் தேவையா என்பதை அகதிகள் யோசிக்க வேண்டும்’’ என்றார்கள்.

அகதியாக இருப்பதன் வலி அகதிக்கு மட்டுமே தெரியும்!