
பெண்கள் சுயச்சார்புடனும் சுயமரியாதை யுடனும் வாழும் தேசமே வலிமையான தேசம்.
ஒரு மணி நேரத்தில் இந்தியாவின் ஏதோவொரு திசையில் நான்கு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படு வதாகச் சொல்கின்றன புள்ளிவிவரங்கள். பெரும்பாலான சம்பவங்கள் கட்டப்பஞ்சாயத்தில் முடித்து வைக்கப்படுகின்றன. சமூகத்தின் அவச்சொல்லுக்கும் சட்டத்தின் அலைக்கழிப்புக்கும் அஞ்சி, பலர் தங்களுக்கு நேர்ந்ததை வெளியில் சொல்வதேயில்லை. வெகுசில புகார்களே காவல்நிலையம் செல்கின்றன. சமூகத்துக்கும் அதிகார வர்க்கத்துக்கும் பெண்கள் அடங்கி எல்லாக் கொடுமைகளையும் சகித்துக்கொள்ள வேண்டும் என்ற எதார்த்த நிலையைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது திருவள்ளூரில் நடந்த சம்பவம்.
திருவள்ளூர் மாவட்டம், அல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அந்த 19 வயது இளம்பெண். பெற்றோர் பிரிந்துவிட்டதால் சித்தி வீட்டில் வளர்ந்திருக்கிறார். இந்தப் பெண்ணுக்கு அவரின் அம்மா வழி உறவினரான அஜித் என்பவர் நெடுங்காலமாக தொல்லை கொடுத்துவந்திருக்கிறார். இத்தனைக்கும் அஜித்துக்குத் திருமணமாகி குழந்தைகளும் இருக்கின்றன. பலமுறை இதுகுறித்து வீட்டில் சொல்லி பிரச்னையாகியிருக்கிறது. ஒருமுறை அஜித் தவறாக நடக்க முயல, அவரை ஓங்கி அறைந்து விரட்டியிருக்கிறார். இதைக் கேள்விப்பட்டு அஜித்தின் மனைவி குழந்தைகளோடு தன் அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்தச்சூழலில் ஒருநாள், வயற்காட்டுக்குச் சென்றுகொண்டிருந்த பெண்ணை, அஜித் கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறார். தன்னைத் தற்காத்துக்கொள்ளப் போராடிய அந்தப்பெண், அஜித்தைப் பிடித்துத் தள்ள, அஜித் கையிலிருந்த கத்தி நழுவியிருக்கிறது. பெண் அதை எடுத்துக் குத்த, சம்பவ இடத்திலேயே அஜித் இறந்துவிட்டார்.
குத்திய கத்தியோடு சோழவரம் காவல் நிலையம் சென்ற அந்தப் பெண், நடந்த சம்பவத்தை முழுமையாகச் சொல்லி சரணடைந்திருக்கிறார். வழக்கை விசாரித்த காவல்துறை, ‘தற்காப்புக்காக நடந்த கொலை’ என்று உறுதிசெய்து அந்தப் பெண்ணை வழக்கிலிருந்து விடுவித்திருக்கிறது.
“தற்காப்புக்காகத் தாக்குற உரிமை எல்லோருக்கும் உண்டு. ஆனால், அது தற்காப்புக்காக நடந்ததுதான்னு காவல்துறை விசாரணையில உறுதியாகணும். அந்தப் பையன் ரொம்ப நாளாகவே டார்ச்சர் கொடுத்திருக்கான். பெண்ணின் பெற்றோர் பிரிஞ்சிருக்கிறது அந்தப் பையனுக்கு வசதியா இருந்திருக்கு. யார்கிட்ட சொல்றதுன்னு தெரியாம அந்தப்பொண்ணு தவிச்சிருக்காங்க. அந்தப் பையனை வலுவா கண்டிக்க யாருமில்லை. எல்லை மீற முயற்சி செஞ்ச ஒரு கட்டத்துல அந்தப் பெண் தன்னைக் காப்பாத்திக்க அவனைத் தாக்கியிருக்காங்க. அவன் கொண்டு வந்த கத்தியை வெச்சே அவனைக் குத்தியிருக்காங்க. சம்பவம் நடந்ததும் நேரா ஸ்டேஷனுக்கு வந்துட்டாங்க.
விசாரணை அதிகாரிக்கு ரெண்டு நாள் டைம் கொடுத்து எல்லாக் கோணத்துலயும் விசாரிக்கச் சொன்னோம். சாட்சியங்கள், தடயங்களை வச்சு நல்லா விசாரிச்சு ‘இது தற்காப்புக்கான கொலைதான்’னு அறிக்கை கொடுத்தார். அந்த அடிப்படையில அந்தப் பொண்ணை விடுவிச்சுட்டோம்” என்கிறார் திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன்.

தற்காப்புக் கொலைக்கான வரையறை என்ன?
‘‘பெண்களுக்கு மட்டுமல்ல; ஆண்களுக்கும் தற்காப்புக்காகத் தாக்குகிற உரிமை உண்டு. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 100, தற்காப்புரிமை (Private Defense)யை எல்லோருக்கும் தருகிறது. ஒருவர் தாக்கவரும்போது, தற்காத்துக் கொள்வதற்காக அவரைத் தாக்கலாம். அந்தத் தாக்குதலில் மரணம் நேர்ந்தாலும் அது கொலைக்குற்றம் ஆகாது. தாக்கிக் கொலை செய்ய முயல்தல், கொடுங்காயங்கள் ஏற்படும் சூழல், பாலியல்ரீதியான தாக்குதல், இயற்கைக்கு மாறான முறையில் இச்சையைத் தீர்த்துக்கொள்ளும் நோக்கில் சீண்டுதல், கடத்திச் செல்லும் நோக்கில் செயல்படுதல், விருப்பத்திற்குப் புறம்பாக அடைத்துவைத்துத் தாக்கும்போது தப்பிக்க முடியாமலும் சட்டபூர்வமாக அதிகாரிகளை அணுகமுடியாமலும் இருத்தல்... இதுபோன்ற நேரங்களில் தற்காப்புரிமையைப் பயன்படுத்தலாம்.
ஆனால், இதைத் தவறாகப் பயன்படுத்தினால் தண்டனை கடுமையாக இருக்கும். இந்தப் பெண் விஷயத்தில், நிதானம்தான் அவரைக் காப்பாற்றியிருக்கிறது. நடந்த சம்பவத்தை மறைக்கப் பார்த்திருந்தால் நிலைமை மோசமாக இருந்திருக்கும். கொடுமையை அனுபவிக்கும் பல பெண்கள் வெளியில் வரத் தயங்குகிறார்கள். உங்களுக்கு சட்டப் பாதுகாப்பு இருக்கிறது... எங்களை நம்புங்கள்” என்கிறார் அரவிந்தன்.
ஏற்கெனவே 2012-ம் ஆண்டு பிப்ரவரியில், மதுரை, ஊமச்சிக்குளம் பகுதியில் குடிபோதையில் மகளை பலாத்காரம் செய்ய முயன்ற ஒரு ஆணை, மனைவியே கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலைசெய்தார். இந்த வழக்கை விசாரித்த காவல்துறை அந்தப்பெண்ணைக் கைது செய்தது. பிறகு விசாரணையில் தற்காப்புக்கான கொலை என்பது தெரியவர, எஸ்.பியாக இருந்த அஸ்ரா கார்க் அந்தப்பெண்ணை வழக்கிலிருந்து விடுவித்தார். தற்போது, அல்லிமேடு பெண் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், சம்பவத்துக்குப் பிறகு அவரின் உறவினர்கள் அந்தப்பெண்ணை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும், உளவியல் ரீதியாக அந்தப்பெண் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார். தற்போது ஓர் இல்லத்தில் வைத்து அவருக்குக் கவுன்சலிங் வழங்கிவருகிறது காவல்துறை. எவ்விதத் தவறும் செய்யாமல் வாழ்க்கையே குலைந்து நிற்கும் இதுபோன்ற பெண்களுக்கான சமூகப் பாதுகாப்பு குறித்து நிறைய விவாதிக்க வேண்டியுள்ளது.
“பாலியல் ரீதியா ஒருவன் தொந்தரவு செய்ய வந்தால் தயங்காமல் எதிர்த்து அடி... எது நடந்தாலும் நான் உன் பக்கம் இருப்பேன் என்றுதான் சட்டம் சொல்கிறது. ஆனால் பெண்கள் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவதேயில்லை. பத்து வயதுப் பையன் சத்தம் போட்டாலே, அஞ்சி ஒடுங்கும் நிலையில்தான் பெண்கள் இருக்கிறார்கள். கலாசார ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் பெண்கள் தங்களைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். தனக்குத் தீங்கு விளைவிக்க வரும் ஆணை எதிர்கொள்ளும் துணிச்சலை வளர்த்துக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு பெற்றோர் தைரியத்தையும் முடிவெடுக்கும் திறனையும் சொல்லிச் சொல்லி வளர்க்கவேண்டும். நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாகிவரும் நிலையில், இதுவொன்றே தீர்வாக இருக்கும்” என்கிறார் பெண்ணியலாளரும் வழக்கறிஞருமான அஜிதா.
‘சுவாச் பாரத் இயக்கம்’ நடத்தி, குப்பைக்கூடையும் கையுமாக நம் தலைவர்கள் போஸ் கொடுத்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்தியாவின் பெருவாரியான கிராமங்களில் கழிவறை இல்லாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் புதர்களையும், மர மறைவுகளையும் தேடி ஒதுங்கும் நிலைதான் இருக்கிறது. அல்லிமேட்டுப் பெண், அப்படிச் சென்ற நேரத்தில்தான் வன்முறைக்கு உள்ளாகியிருக்கிறார். அல்லிமேட்டில் பல வீடுகளில் கழிவறை இல்லை. பல கிராமங்கள் அல்லிமேடுகளாகவே இருப்பது தேசிய அவமானம்.
பெண்கள் சுயச்சார்புடனும் சுயமரியாதை யுடனும் வாழும் தேசமே வலிமையான தேசம்.