Published:Updated:

ஸ்டாலினின் துபாய் விசிட்; தஞ்சை தேர் விபத்து; எழுவர் விடுதலை, இன்னும் பல... தமிழ்நாடு ரீவைண்ட் 2022

தமிழ்நாடு ரீவைண்ட் 2022
News
தமிழ்நாடு ரீவைண்ட் 2022

ரீவைண்ட் 2022: தமிழகத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

Published:Updated:

ஸ்டாலினின் துபாய் விசிட்; தஞ்சை தேர் விபத்து; எழுவர் விடுதலை, இன்னும் பல... தமிழ்நாடு ரீவைண்ட் 2022

ரீவைண்ட் 2022: தமிழகத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

தமிழ்நாடு ரீவைண்ட் 2022
News
தமிழ்நாடு ரீவைண்ட் 2022

2022-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...

தரமற்ற பொங்கல் பரிசுகள், வெடித்த சர்ச்சை !

தமிழகத்தில் இந்த ஆண்டு குடும்ப அட்டைத்தாரர்கள், இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்பவர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கப்பட்டது. இந்த பரிசுத்தொகுப்பில், அரிசி, வெல்லம், பருப்பு, ரவா, கோதுமை, வெல்லம், நெய், கரும்பு உள்ளிட்ட 21 வகையான பொருள்கள் இடம்பெற்றிருந்தது. பொங்கல் பரிசுகள் தரமற்ற முறையிலும், எடை குறைவாக இருந்ததாகவும், பல இடங்களில் முழுமையாக பொருள்கள் கிடைக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தமிழ்நாட்டு பொதுமக்களுக்களிடையே பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்பு

கரூர் காந்தி சிலை அகற்றம்: எம்.பி ஜோதிமணியை இழுத்துச் சென்ற போலீஸ்

கரூர் லைட்ஹவுஸ் ரவுண்டானாவில் 70 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த காந்தி சிலை அகற்றப்பட்டது. இதையடுத்து, புது சிலை வைப்பதாக மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் புது காந்தி  சிலையின் அஸ்திவாரம் தரம் இல்லாத வகையில் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி பிப்ரவரி 22 -ம் தேதி காங்கிரஸ் எம்.பி .ஜோதிமணி தலைமையில் 50 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் போலீஸார் வேறுவழியின்றி ஜோதிமணியை குண்டுக்கட்டாக இழுத்து சென்றனர் .

தமிழகத்தையே பதைபதைக்கவைத்த கோகுல்ராஜ் கொலை வழக்கு

தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆணவக்கொலை வழக்குகளில் முக்கியமானது நாமக்கல் மாவட்டத்தில் நடந்த கோகுல்ராஜ் கொலை வழக்கு. 2015-ம் ஆண்டு நடந்த இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. சாதி ஆணவக் கொலை வழக்கில், மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை அளித்தும், சாகும் வரை சிறையில் இருக்கவும் தீர்ப்பளித்தது. இந்த கொலை வழக்கில் சுவாதி பிறழ் சாட்சியாக மாறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோகுல்ராஜ் கொலை வழக்கு
கோகுல்ராஜ் கொலை வழக்கு

கர்நாடகா ஹிஜாப் விவகாரம் : தமிழக கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டம்!

கர்நாடக மாநிலம், உடுப்பி பி.யூ பெண்கள் கல்லூரியில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஹிஜாப் அணிந்து வந்த சில மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. இந்த விவகாரம் உலக அளவில் பேசுபொருளானது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இதையடுத்து, வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டம் 25-வது பிரிவை மேற்கோள்காட்டி, `ஹிஜாப் அணிவதென்பது மதப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதற்கான உரிமையின் பகுதியல்ல' எனக் கூறி ஹிஜாப் அணியத் தடைவிதித்தது. இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அடுத்து, சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 'கலாசார இனப்படுகொலைக்கு எதிராகப் போராடுவோம்' , 'ஹிஜாபை நாங்கள் ஆதரிக்கிறோம்' என ஹிஜாபுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டாலினின் துபாய் பயணம் : முதலீட்டாளர்கள் மாநாடு

முதல்வராகப் பொறுப்பேற்று முதன்முறையாக முதல்வர் ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரக நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். இதற்காக மார்ச் மாதம் 24-ம் தேதி மாலை சென்னையிருந்து தனி விமானத்தில் கிளம்பினார். துபாயில் நடந்த கண்காட்சியில் தன் குடும்பத்தினர், நிர்வாகிகள், அமைச்சர்களோடு கலந்துகொண்டார். அந்த கண்காட்சியில் 192 நாடுகள் பங்கேற்றது. இந்த நிலையில், முதல்வரின் துபாய் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா... இல்லை குடும்பச் சுற்றுலாவா என்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்தனர்.

மு.க.ஸ்டாலின் துபாய் பயணம்
மு.க.ஸ்டாலின் துபாய் பயணம்
ட்விட்டர்

வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து:-

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யும் வகையில், 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி அ.தி.மு.க ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் இது தொடர்பான அரசாணைய திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், இது தொடர்பாக நடந்த மேல்முறையீடு வழக்கில், ``வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கியது செல்லாது. சாதியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீடு வழங்க முடியாது'' என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தது.

புதிய கல்விக் கொள்கை:

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இந்த நிலையில்,  டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில், புதிய கல்விக் கொள்கைக்கான 13 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது.  இந்த குழு ஓராண்டுக்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மு.க ஸ்டாலின்
மு.க ஸ்டாலின்

இரட்டைஇலை சின்னம்; வழக்கறிஞர் தற்கொலை

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னால், அ.தி.மு.க கட்சியில் இரண்டு அணிகள் உருவானது. அந்த சமயத்தில் நடைபெற்ற ஆர். கே நகர் சட்டமன்ற தேர்தல் சமயத்தில் இரண்டு அணிகளும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரின. இதனால், இந்தியத் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையில், பல்வேறு தகவல்களை கொடுத்தவர் வழக்கறிஞர் கோபிநாத். முக்கிய சாட்சியான இவரை விசாரணைக்கு ஆஜராகும் படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அதற்கு முந்தைய நாள் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர் தேர் விபத்து:-

தஞ்சாவூர் பூதலூர் சாலையில், சதய விழாக் கொண்டாட்டத்தில் தேரில் வீதியுலா சென்ற போது உயரழுத்த மின்கம்பியில் தேர் உரசியதால், மின்சாரம் தாக்கி மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் துள்ளத் துடிக்க உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே கண்ணீர்க் கடலில் ஆழ்த்தியது.

தஞ்சாவூர் தேர்த் திருவிழா விபத்து
தஞ்சாவூர் தேர்த் திருவிழா விபத்து

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தீ விபத்து:-

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலுள்ள கல்லீரல் சிகிச்சைப் பிரிவு கட்டடத்தில், மருத்துவ உபகரணங்கள் வைக்கும் அறையில், பெரும் வெடிச்சத்தத்துடன் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது, பொது மக்களை பீதியில் ஆழ்த்தியது. அந்த கட்டடத்தில் கல்லீரல் சிகிச்சைப் பிரிவு ஐ. சி.யூ வார்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. பல நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக மருத்துவமனை சார்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

`திமுக தேர்தல் அறிக்கையில் மதுஒழிப்பு பற்றி கூறவில்லை’ - எம்.பி கனிமொழி

ஏப்ரல் மாதம் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் நடந்த பள்ளி நிகழ்வு ஒன்றில் திமுக எம் .பி கனிமொழி  
கலந்துக்கொண்டார் . அப்போது பள்ளி மாணவி ஒருவர் மதுபான கடைகளை எப்போது நிரந்திரமாக மூடுவீர்கள் என்று கேட்டதற்கு, ``தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் மதுக்கடைகளை முழுவதுமாக மூடுவோம் என்று எதுவும் கூறவில்லை. ஆனால் கடைகளை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்று கூறியது சர்ச்சையானது. ஆனால் 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக்கை ஒழிப்பதாக  திமுக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது .

கனிமொழி
கனிமொழி

ஆதீனம் பல்லக்கு சர்ச்சை:- 

பட்டணப்பிரவேச வைபவத்தில் ஆதீனங்கள் பல்லக்கில் பவனி வருவது சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியது. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின், பட்டினப்பிரவேச நிகழ்வுக்கு கடுமையான எதிர்ப்புகள் வந்த நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23-ன் படி சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், ஆதினத்தை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்ல தடை விதிக்கப்பட்டது.

பேரறிவாளன் விடுதலை:- 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைவாசம் அனுபவித்துவந்த எழுவரில் ஒருவரான பேரறிவாளனை, உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் விடுதலை செய்தது. பேரறிவாளனை அரசமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவின் கீழ் தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த நிகழ்வு இந்திய அளவில் உற்று நோக்கப்பட்ட முக்கியமான நிகழ்வாகும்.

பேரறிவாளன் விடுதலை
பேரறிவாளன் விடுதலை

அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரம்:

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக அரசியல் களம் தற்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா என்ற இந்த மூன்று முக்கிய புள்ளிகளை சுற்றி நகர்ந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க கட்சிக்குள் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோருக்கிடையே யார் தலைமை என்ற போட்டி நிலவிவருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர். தற்போது இடைக்கால பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு இபிஎஸ் தாக்கல் செய்த வரவு செலவு கணக்கை தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருக்கிறது. இதனால் ஓபிஎஸ் அணியினர் அதிருப்தில் இருப்பதாக தெரிகிறது. இந்த விவகாரம் நாளுக்கு நாள் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதிமுக - ஓபிஎஸ் - இபிஎஸ்
அதிமுக - ஓபிஎஸ் - இபிஎஸ்

செஸ் ஒலிம்பியாட்:- 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை-28 முதல் ஆகஸ்ட்10-ம் தேதி வரை நடைபெற்றது. 185-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்றனர். செஸ் போட்டிகளில் ஒலிம்பிக் போட்டிக்கு நிகரான செஸ் ஒலிம்பியாட் இந்தியாவில் நடப்பது இதுவே முதன்முறையாகும்.

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி
செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி மாணவி மரணம், தொடரும் விசாரணை !

ஜூலை 13-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி பள்ளிவளாகத்தில் இறந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மாணவியின் மரணத்துக்கான காரணம் மர்மமாக இருந்த நிலையில், ஜூலை 17-ம் தேதி அந்த பள்ளிவளாகத்தில் கலவரம் வெடித்தது . CBCID-க்கு வழக்கு கைமாற்றப்பட்டது.  சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், மேலும் பலத் திருப்பங்களுடன் இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.

மாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவியேற்ற இளையராஜா!


பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள், குடியரசுத் தலைவரால் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா ஜூலை 25-ம் தேதி மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் தமிழில்  பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டார்.

இளையராஜா
இளையராஜா

மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த பொன்முடி !

ஜூலை மாதத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் கலந்துக்கொண்ட நிலையில், உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே. பொன்முடி பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்தார் .

ஆளுநர், ஆன்லைன் ரம்மி தற்கொலைகள்:-

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டச் செயலிகளுக்குத் தடைவிதிக்கும்விதமாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தமிழ்நாடு அரசு கடந்த மாதம் கொண்டுவந்தது. ஆனால், இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த ஆண்டு மட்டுமே நிறைய நபர்கள் தமிழ்நாட்டில் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இதற்கு தடை விதிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி

ஆவின் பால் முறைகேடு விவகாரம் !

அரை லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகளில் 70 மிலி.அளவு குறைந்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நிலையில், நுகர்வோர்களின்‌ நலன்‌ பேணும்‌ வகையில்‌ அனைத்துத் தரம், அளவுகள்‌, உணவு பாதுகாப்பு மற்றும்‌ தர நிர்ணய சட்டத்துக்கு உட்பட்டு ஆவின் பால் விநியோகம் செய்கிறோம் என ஆவின் நிர்வாகம் விளக்கமளித்தது. இருப்பினும் ஆவின் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிவருவது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை

ராகுல் காந்தியின் 3,570 கி.மீ பாரத் ஜோடோ யாத்திரை செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் ஆரம்பித்தது. கேரளா, கர்நாடகா, தெலங்கானா உட்பட பல மாநிலங்களில் யாத்திரை நடைபெற்று வருகிறது. 100 நாள்களை கடந்த யாத்திரை மூலம் ராகுல் காந்தி மக்கள் மனதை வெல்வார் என காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர் .

ஸ்டாலினின் துபாய் விசிட்; தஞ்சை தேர் விபத்து; எழுவர் விடுதலை, இன்னும் பல...  தமிழ்நாடு ரீவைண்ட் 2022

மலக்குழி மரணம்:-

 தமிழகத்தில் கழிவுநீர் தொட்டிக்குள் சிக்கி, விஷவாயு தாக்கி பணியாளர்கள் மரணமடையும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. துப்புரவு பணியில் ஈடுபடும் போது அதிக உயிரிழப்பு நடந்த மாநிலங்களில் தமிழகம் தான் முதல் இடத்தை பிடித்திருக்கிறது என மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் அண்மையில் அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில், இது அனைவருக்கும் தலைகுனிவு என முதல்வர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்திருந்தார்.

.ராசாவின் மனுதர்ம சர்ச்சை :


செப்டம்பர் மாதம் சென்னை வேப்பேரி பெரியார் திடலில்  நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தி.மு.க எம்.பி ஆ.ராசா மனுதர்மத்திலிருந்த ஒரு சில கருத்துக்களை மேற்கோள்காட்டி பேசினார். இந்த நிலையில், இது குறித்து பல்வேறு நபர்கள் போலீஸில் புகாரளித்தனர். அப்போது அவர்,`` நாங்கள் இந்து மதத்துக்கு எதிரானவர்கள் இல்லை. இந்து மதத்தின் பெயரால் சொல்லப்படும் சனாதானத்திற்கு எதிரானவர்கள்'' என்று விளக்கமளித்தார்.

ஆ.ராசா
ஆ.ராசா

பட்டியலின சிறுவனுக்கு பிஸ்கட் தர மறுப்பு:-

தென்காசி சங்கரன்கோவிலில் பாஞ்சால குளம் கிராமத்தில் பட்டியலின பள்ளி குழந்தைகளுக்கு ஊர் கட்டுப்பாடு இருப்பதாக கூறி கடைக்காரர் கடையில் தின்பண்டம் தர மறுத்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொன்முடியின் இலவசப் பேருந்து சர்ச்சை!

`பெண்கள் பேருந்தில் ஓசியில் பயணம் செய்கிறார்கள்' என அமைச்சர் பொன்முடி கூறியது தமிழகத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது. இதையடுத்து, அதற்கு பதிலளித்த அவர், ``பெண்களின் இலவசப் பயணம் குறித்து நான் விளையாட்டுத்தனமாக, சும்மா பேசியதைப் பெரிதாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதை நான் எந்தத் தவறான எண்ணத்திலும் பேசவில்லை'' என்றார். இந்த நிலையில், ஸ்டாலின் வார்த்தைகளில் கவனம் தேவை என  தி.மு.க.வி-னருக்கு எச்சரிக்கை விடுத்தார். அதோடு திமுக-வினரின் செயல்களால் இரவில் தூக்கம் வருவதில்லை என வேதனையையும் தெரிவித்தார் .

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி
தே.சிலம்பரசன்

ராஜராஜ சோழன்... இந்துத்வா:-

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான சமயத்தில், இயக்குநர் வெற்றிமாறன், ``ராஜராஜ சோழன் இந்து அரசராக்கப்படுவது, வள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது போன்றவை நடைபெற்று வருகிறது'' எனக் கூறியது சமூக வலைத்தளங்களில் கடும் விவாதத்தை கிளப்பியது. இதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் கமல்ஹாசன், “ராஜராஜ சோழன் காலத்தில் இந்து என்ற சொல்லே கிடையாது. சைவம், வைணவம் என்பது மட்டுமே” எனக் கூறினார்.

ஆறுமுகசாமி ஆணையம்:

2016-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரின் மரணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஜெயலலிதா மரணத்தை குறித்து விசாரிக்க, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் 4 வருடங்கள் கழித்து அறிக்கையை தாக்கல் செய்தது. ஜெயலலிதா மரணத்தில் தொடர்பு இருப்பதாக சசிகலா ,முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை இந்த ஆணையம் குற்றம்சாட்டியிருக்கிறது.

ஆறுமுகசாமி ஆணையம்
ஆறுமுகசாமி ஆணையம்

நிர்மலா சீதாராமனின் டாலர் சர்ச்சை:- 

சமீபத்தில் டாலர் - ரூபாய் மதிப்பு ஒப்பீடு குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. 'ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையவில்லை, டாலர் மதிப்புதான் உயர்ந்திருக்கிறது' என்று அவர் குறிப்பிட்டார். அவருடைய இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் கேலிக்குரியதாகவும், பேசுபொருளாகவும் மாறியது.

முன்னதாக நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “நான் வெங்காயம் அதிகம் சாப்பிடும் குடும்பத்திலிருந்து வரவில்லை” என கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.

சட்டப்பேரவையில் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம்

மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற குழு, குடியரசுத் தலைவரிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்திலும் இந்தியை பயிற்சி மொழியாக்க வேண்டும். ஒன்றிய அரசின் நிர்வாகத் தொடர்புகள் அனைத்துக்கும் இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியானது.

இது தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் சட்டப்பேரவையில் இந்தி திணிப்புக்கு எதிரான தனி தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார். அதில், `` இது வெறும் மொழிப் போராட்டம் மட்டுமல்ல; தமிழினத்தை, தமிழர் பண்பாட்டைக் காக்கும் போராட்டம்'' என்றார். மேலும் பல்வேறு கட்சி தலைவர்களும் இந்தி மொழி திணிப்புக்கு குரல் கொடுத்தனர்.

இந்தி மொழி
இந்தி மொழி

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்!

அக்டோபர் மாதம் கோவை உக்கடத்தில் ஜமேசா முபின் என்பவர் ஓட்டி சென்ற சார் வெடித்து விபத்துக்குள்ளானது. விசாரணையிலும், அவரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையிலும் வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்த தேவையான பொருள்கள் 109 பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் முபினுக்கு  பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் , வழக்கை என்.ஐ.ஏக்கு பரிந்துரைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து பல திருப்பங்களுடன் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மனுதர்மம் - விசிக!

பெண்களை அடக்கி வைக்கும் மனுஸ்மிருதியை ஒரு லட்சம் பிரதிகள் அச்சடித்து நவம்பர் மாதத்தில் விநியோகம் செய்ய இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அண்மையில் அவர் , ``மனுஸ்மிருதி பிராமண பெண்கள் உட்பட அனைத்து பெண்களையும் மிகவும் இழிவுபடுத்துகிறது. பெண்களை மட்டுமல்ல சூத்திரர்களையும் மிகவும் மோசமாக கட்டமைக்கிறது'' என்று பேசியது சர்சையை ஏற்படுத்தியது.

விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன்
எஸ்.தேவராஜன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு : எழுவர் விடுதலை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை  விதிக்கப்பட்ட 7 பேரில் பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கு பிறகு மே 18-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.இதைத் தொடர்ந்து , மற்ற ஆறு பேரும் நவம்பர் மாதம் 11-ம் தேதி விடுதலைச் செய்யப்பட்டனர். ஆனால் அவர்களில் இலங்கைத் தமிழர்களான முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

உயிரிழந்த தமிழக கால்பந்து வீராங்கனை பிரியா!

பெரியார் நகர் மருத்துவமனையில் மூட்டு ஜவ்வு அறுவைசிகிச்சை மேற்கொண்ட கால்பந்து வீராங்கனை பிரியா , காலில் ஏற்பட்ட தீவிர வலியால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பிரியா நவம்பர் 15-ம் தேதி மரணமடைந்தார். இந்த நிலையில், அமைச்சர் மா. சுப்பிரமணியன், ``ரத்த ஓட்டம் இல்லாததால் அவரின் வலது கால் அகற்றப்பட்து. பிரியாவுக்கு மிகச்சரியான உயர் தொழிற்நுட்ப சிகிச்சைதான் வழங்கப்பட்டது. ஆனால், மருத்துவர்கள் கட்டுக்கட்டுவதில் கவனக்குறைவாக இருந்ததால் ரத்த ஓட்டம் நின்றிருக்கிறது” என்றார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம்
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம்

பரந்தூர் விமான நிலையம்... மக்கள் போராட்டம்!

சென்னையில் இரண்டாவதாக ஒரு விமான நிலையம் பரந்தூரில் ரூ. 20,000 கோடி மதிப்பில் அரசு கட்ட திட்டம் தீட்டியிருக்கிறது . ஆனால் பரந்தூரில் விமான நிலையம் வந்தால், 13 கிராமங்களின் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் அழிக்கப்படும் என மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜக : காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட், டெய்சி-சூர்யா சிவா விவகாரம்!

காயத்ரி ரகுராமை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியிலிருந்து ஆறுமாத காலம் சஸ்பெண்ட் செய்திருக்கிறார். தமிழக பா.ஜ.க ஓ.பி.சி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா, கட்சியின் சிறுபான்மையினர் அணித் தலைவர் டெய்சி சரண் இருவருக்கும் இடையேயான சர்ச்சைக்குரிய ஆடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இந்த நிலையில், நாங்கள் சகோதரராக தான் பேசினோம் என்று இருவரும் கூறிய நிலையிலும், சூர்யா கட்சியை விட்டு விலகினார். 

சூர்யா சிவா
சூர்யா சிவா

டான்டீ தொழிலாளர்கள் போராட்டம் !

தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்துக்கு சொந்தமான (டான்டீ) 2,152 ஹெக்டேர் தேயிலை தோட்ட நிலங்களை மீண்டும் வனத்துறையிடமே வழங்கப்போவதாக அக்டோபர் 3-ம் தேதி  அரசாணை வெளியானது.  டான்டீயில் ஆயிரக்கான தொழிலாளர்கள் பணிசெய்கிறார்கள். இலங்கையிலிருந்து வந்த தமிழர்களும், மற்ற ஊரைச் சேர்ந்தவர்களும் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். தமிழக அரசின் இந்த முடிவால் டான்டீ தொழிலாளர்கள் போராட்டத்தில்  ஈடுபட்டதோடு, அதிருப்தியிலும் இருக்கின்றனர்.

அமைச்சரானார் உதயநிதி

 தி.மு.க ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கழிந்த நிலையில், தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், முதல்வர் மு.க ஸ்டாலினின் மகனுமான உதயநிதி அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் இதை வாரிசு அரசியல் என விமர்சனம் செய்து வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

ஜெயலலிதா நினைவு தினம்:

டிசம்பர் 5-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவுநாளை முன்னிட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை மெரினாவில் உள்ள அவரின் நினைவிடத்துக்கு அ.தி.மு.க தலைவர்கள் வந்தனர். இதையடுத்து தொண்டர்களிடம் எடப்பாட் பேசுகையில், "அம்மா இறந்த இந்நன்னாளில்".. எனத் தொடக்கத்திலேயே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது .

மாண்டஸ்
மாண்டஸ்

மாண்டஸ் புயல்

வருடம் தவறாமல் ஆஜராகும் புயல், இந்த வருடம் மாண்டஸ் எனும் பெயரோடு தமிழ்நாட்டுக்கு வந்தது. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.