
`முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று சொல்லி முதன்முறையாக முதலமைச்சர் பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்.
ஓடியதே தெரியவில்லை 2021. 2022-க்குள் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த நேரத்தில், இந்திய அளவிலும் தமிழக அளவிலும் 2021-ல் நடந்த முக்கிய நிகழ்வுகள் இங்கே...
ஜனவரி
16 நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தத் தொடங்கியது மத்திய அரசு.
26 குடியரசு தினத்தன்று மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது விவசாயிகளின் ஒரு பகுதியினர், செங்கோட்டையில் கொடியேற்ற... தலைநகரில் கலவரம் வெடித்தது. `பாதை விலகிச் சென்றவர்கள் விவசாயிகள் அல்ல; பா.ஜ.க ஆதரவாளர்கள்’ என்றன விவசாய சங்கங்கள்.
27 சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலையானார். பெங்களூரு டு சென்னை சாலையில் ஆதரவாளர்கள் வரவேற்பு தந்ததால், நான்கு மணி நேரப் பயணம் 24 மணி நேரமானது.
பிப்ரவரி
24 கடந்த 2020-ல் சீரமைக்கப்பட்ட குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் மைதானம், `நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது சர்ச்சையானது.
பிப்ரவரி மாதத்தில்தான் ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் முதன்முறையாக பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொட்டது.
மார்ச்
3 `அரசியலிலிருந்து ஒதுங்குகிறேன்’ என்று தொண்டர்களுக்குக் கடிதம் எழுதி ஷாக் கொடுத்தார் சசிகலா!
ஏப்ரல்
1-7 இந்தியாவில் கொரோனா வேகமாகப் பரவிவந்த சூழலில், உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வார் கங்கை நதிக்கரையில் மிகப்பெரிய அளவில் கும்பமேளா விழா நடைபெற்றது. முகக்கவசம், சமூக இடைவெளியின்றி சுமார் 70 லட்சம் பேர் கலந்துகொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
3 சத்தீஸ்கர் மாநிலத்தில், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர்மீது மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில், 22 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
6 தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மார்ச் 27 முதல் ஏப்ரல் 6 வரை பல்வேறு கட்டங்களாக மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரள மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல்கள் நடைபெற்றன.
ஏப்ரல் மாத இறுதியில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாவின் ‘டெல்டா வேரியன்ட்’ கோரத் தாண்டவம் ஆடியது. கொத்துக் கொத்தாக மக்கள் உயிரிழந்தார்கள்.
மே
2 ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாகின. தமிழ்நாட்டில் தி.மு.க-வும், மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸும், கேரளாவில் சி.பி.எம்-மும் வெற்றிபெற்றன. அஸ்ஸாமில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி ஆட்சியமைத்தது.
7 `முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று சொல்லி முதன்முறையாக முதலமைச்சர் பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்.
10 அ.தி.மு.க-வின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் எடப்பாடி கே.பழனிசாமி.
24 சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததால் கைது செய்யப்பட்டார்.
மே மாதம் இந்தியா முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட, உயிரிழப்புகள் அதிகரித்தன. மயானங்கள் நிரம்பிவழிந்தன. படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் அவதியுற்றார்கள்.
ஜூன்
16 பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த புகாரில் காவல்துறையால் தேடப்பட்டுவந்த சிவசங்கர் பாபா கைதுசெய்யப்பட்டார்.
ஜூலை
8 தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கே.அண்ணாமலை.
18 இஸ்ரேலிய நிறுவனத்தின் ‘பெகாசஸ்’ ஸ்பைவேரைப் பயன்படுத்தி, இந்தியா விலுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட பலரது அலைபேசி உரையாடல்களை மத்திய அரசு ஒட்டுக் கேட்டதாக செய்தி வெளியாகி சர்ச்சை வெடித்தது. எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் நாடாளுமன்றம் ஸ்தம்பித்தது.
28 கர்நாடகாவில் பா.ஜ.க-வின் எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய... புதிய முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார் பசவராஜ் பொம்மை.
ஆகஸ்ட்
1 டெல்லியில் 9 வயதான பட்டியல் சமூகச் சிறுமி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலைசெய்யப்பட்டதுடன் பெற்றோர் கண்முன்பாகவே எரிக்கப்பட்ட கொடூரச் சம்பவம் நடந்தது. நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர்.
2 தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆளுநர், முதலமைச்சர், சபாநாயகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆனால், வரலாற்றைத் திரித்து விழா நடத்துவதாகக் கூறிய அ.தி.மு.க விழாவைப் புறக்கணித்துவிட்டது.
6 இந்திய விளையாட்டுத்துறையில் சாதனை படைத்தோருக்கு வழங்கப்படும் உயரிய விருதான `ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ விருதின் பெயரை `மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
7 ஒலிம்பிக் போட்டிகளில், தடகளத்தில் தங்கம் என்கிற இந்தியாவின் 100 ஆண்டுக்கால கனவை நிறைவேற்றினார் நீரஜ் சோப்ரா. இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக ஒரு தங்கம், இரு வெள்ளி, நான்கு வெண்கலம் என மொத்தம் ஏழு பதக்கங்களை வென்று இந்தியா புதிய சாதனை படைத்தது.
14 அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின்கீழ் 58 நபர்களுக்குப் பணி நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
செப்டம்பர்
18 தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றுக் கொண்டார்.
20 காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளால் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் பதவியை ராஜினாமா செய்ய, புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றுக் கொண்டார். இந்தியாவில் தற்போது இருக்கும் முதல்வர்களில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒரேயொரு முதல்வரும் அவர்தான்!
அக்டோபர்
3 உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகள்மீது காரை மோதிய சம்பவத்தில் நான்கு விவசாயிகளும், ஒரு பத்திரிகையாளரும் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில், மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
3 சொகுசுக் கப்பலில் நடந்த விருந்தில், போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறி பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானை மும்பை போலீஸ் கைதுசெய்தது.
8 அரசு பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை, டாடா சன்ஸ் குழுமம் 18,000 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது. 68 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் `ஏர் இந்தியா’, டாடா வசம் சென்றது.
20-29 வங்கதேசத்தில் நடந்த துர்கா பூஜையில் குர்ஆன் அவமதிக்கப்பட்டதாகக் கூறி இந்துக்களுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து திரிபுராவில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியின்போது மசூதிகள் தாக்கப்பட்டு, எரிக்கப்பட்டதாக வெளியான வீடியோக்கள் அனலைக் கிளப்பின. இது பற்றி சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட 102 பேர்மீது சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதும் விவாதங்களைக் கிளப்பியது.
30 ``மொழிவாரி மாநிலங்கள் உருவான நவம்பர் 1-ம் தேதிக்கு பதிலாக, 1968-ல் பேரறிஞர் அண்ணா `தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டிய ஜூலை 18-ம் தேதியே இனி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும்’’ என்ற உத்தரவைப் பிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த முடிவுக்குத் தமிழ் உணர்வாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
நவம்பர்
நவம்பர் மாத தொடக்கத்தில், `ஜெய் பீம்’ படத்தில் வன்னியர் சங்கத்தை இழிவுபடுத்தும்விதமாக காலண்டர், கதாபாத் திரத்தின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி சர்ச்சை எழுந்தது. வன்னியர் சங்கம், பா.ம.க., நடிகர் சூர்யா மூன்று தரப்பும் மாறி மாறிக் கடிதப் போரில் ஈடுபட்டனர். இயக்குநர் த.செ.ஞானவேல் வருத்தம் தெரிவித்ததை அடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது.
11 ஆசிரியரின் பாலியல் தொந்தரவால், கோவை தனியார் பள்ளி மாணவி கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அடுத்த வாரமே கரூரைச் சேர்ந்த மற்றொரு மாணவியும் ஆசிரியரின் பாலியல் தொந்தரவால் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
19 பிரதமர் மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.
நவம்பர் மாதம் முழுவதும் பெய்த கனமழையால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது.
டிசம்பர்
4 நாகாலாந்தில் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.
8 குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.
11 மூன்று வேளாண் சட்டங்களை முறையாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி மத்திய அரசு திரும்பப்பெற்றுக்கொண்டதை அடுத்து, விவசாயிகளும் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
17 ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடலை தமிழக அரசின் மாநிலப் பாடலாக அறிவித்து அரசாணை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
17 நெல்லை சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியின் கழிப்பறைச் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, மாநிலம் முழுவதும் பள்ளிகளில் இருக்கும் பழுதான கட்டடங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டது தமிழக அரசு.
20 தேர்தல் சட்டத் திருத்த மசோதா-2021 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆதார் கார்டு - வாக்காளர் அட்டையை இணைத்தல், தேர்தல் ஆணையத்துக்கு அதிக அதிகாரம் வழங்குதல் போன்ற முக்கியச் சீர்திருத்தங்கள் மசோதாவில் இடம்பெற்றன.
21 பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21-ஆக உயர்த்தும் சட்ட வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
27 சென்னை திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டிருந்தாலும், குடிசை மாற்று வாரியக் குடியிருப்பிலுள்ள மற்ற வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு இந்தச் சம்பவம் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.
