
பிளஸ் டூ படிக்கும்போதே ராமர், லெட்சுமணன் ரெண்டு பேரும் ராணுவத்துல சேர்றதுக்காகப் பயிற்சி எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா ராமருக்குக் கிடைக்கலே. லெட்சுமணனுக்குக் கிடைச்சிருச்சு
ஊரே கண்ணீரில் தத்தளிக்கிறது. இளைஞர்கள் கதறுகிறார்கள். மாணவர்கள் ‘அண்ணா... அண்ணா' என்று தேம்புகிறார்கள். லெட்சுமணனின் மரணம் தும்மக்குண்டு புதுப்பட்டி கிராமத்தையே புரட்டிப்போட்டிருக்கிறது.
லெட்சுமணன், காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் உள்ள இந்திய ராணுவ முகாமில் பணியாற்றினார். ஆகஸ்ட் 11-ம் தேதி பயங்கரவாதிகள் ஊடுருவி நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். அவர்களில் லெட்சுமணனும் ஒருவர்.
மதுரை விமான நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்ட லெட்சுமணனின் உடல், ராணுவ மரியாதை மற்றும் அரசு மரியாதைக்குப் பிறகு ஊருக்குக் கொண்டு வரப்பட்டு 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. மதுரை கடந்து பல்வேறு பகுதிகளிலிருந்தும் இளைஞர்கள், மாணவர்கள் வந்து லெட்சுமணனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

லெட்சுமணனின் அம்மா ஆண்டாளும் அப்பா தர்மராஜும் துவண்டு கிடக்கிறார்கள். எளிய குடும்பம். ஊரில் சரியாக வேலை கிடைக்காததால் தர்மராஜ் கேரளாவில் வேலை செய்துவந்தார். ஆண்டாள் உள்ளூரில் விவசாய வேலைகளுக்குச் சென்றுவருகிறார். ராமர், லெட்சுமணன் என இரட்டைப் பிள்ளைகள். சிரமமான சூழலிலும் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்துள்ளனர்.
திருமங்கலம், உசிலம்பட்டி, பேரையூர் வட்டாரத்தில் பலர் ராணுவத்தில் பணியாற்றுகிறார்கள். ராமர், லெட்சுமணன் இருவருக்குமே ராணுவத்தில் சேர்வதுதான் கனவு. லெட்சுமணனுக்கு அது வாய்த்தது. அவர் ராணுவத்தில் இணைந்தபிறகே குடும்பம் ஓரளவுக்கு மீண்டு வந்திருக்கிறது.
‘‘ரெட்டைப்புள்ளைகளா பொறந்ததால மூத்தவனுக்கு ராமன்னும், சின்னவனுக்கு லெட்சுமணன்னும் பேரு வச்சோம். பேருக்கு ஏத்த மாதிரி அண்ணன் மேல ரொம்பப் பாசமா இருப்பான் லெட்சுமணன். அவன் எதிர்பார்த்த மாதிரியே ராணுவத்தில வேலை கிடைச்சதும், ‘இனிமே நீ வேலைக்குப் போகாதம்மா... நான் பாத்துக்கிறேன்... அண்ணன் ராணுவத்துக்கு வர்றவரைக்கும் அவனுக்கும் ஏதாவது ஒரு தொழிலை அமைச்சுக் குடுத்திருவோம்'னு சொல்லிட்டுப் போனான். எப்படா புள்ளையப் பாப்போம்னு இருக்கும். போன் பேசினா தொந்தரவாப் போயிருமேன்னு மனசுக்குள்ள அடக்கிக்கிட்டுக் கிடப்போம். இப்படி உயிரில்லாம புள்ள வந்து சேருவான்னு நாங்க நினைக்கவேயில்லையே’’ - ஆண்டாள் கதறியழ, மனைவியைத் தேற்ற வாய்க்காமல் தர்மராஜும் கதறுகிறார். ஊரும் சேர்ந்து அழுகிறது.

லெட்சுமணன் ஊருக்கு வநதுவிட்டால் திருவிழா தானாம். மாணவர்களை அழைத்து பரிசளிப்பது, இளைஞர்களைத் திரட்டி கிரிக்கெட் விளையாடுவது, சுற்றுலா அழைத்துச் செல்வது எனக் கலகலப்பாக இருப்பாராம்.
‘‘அண்ணன் ஊருக்கு வந்தா அவர் வீட்டுலதான் கிடப்போம். ஊருக்கு என்ன மாதிரி வசதிகளையெல்லாம் கொண்டு வரணும்னு பேசிக்கிட்டே இருப்பார். எந்தப் படிப்பைப் படிச்சா எந்த வேலைக்குப் போகலாம்னு வழிகாட்டுவார். ஃபிட்னஸ் பத்தி அவர் சொல்லிக் கொடுத்ததைத்தான் எல்லோரும் ஃபாலோ பண்றோம். அவரைப் பார்த்துதான் எங்களுக்கெல்லாம் ராணுவத்துல சேரும் ஆசையே வந்துச்சு. கடந்த முறை ஊருக்கு வந்தப்போ எல்லோரையும் டூர் கூட்டிட்டுப் போனார். பிள்ளைகளுக்கெல்லாம் நோட்டு, பேனா வாங்கிக் கொடுத்தார். எங்களுக்கெல்லாம் வழிகாட்டியா இருந்தவர் இப்போ இல்லாமப்போயிட்டாரே...’’ என்று கலங்குகிறார்கள் தும்மக்குண்டு புதுப்பட்டி இளைஞர்கள்.
‘‘பிளஸ் டூ படிக்கும்போதே ராமர், லெட்சுமணன் ரெண்டு பேரும் ராணுவத்துல சேர்றதுக்காகப் பயிற்சி எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா ராமருக்குக் கிடைக்கலே. லெட்சுமணனுக்குக் கிடைச்சிருச்சு. கஷ்டம் உணர்ந்து வளர்ந்த பையன். படிக்கிற காலத்துலயே அப்பா, அம்மாவோட கஷ்டத்தைப் போக்க களை பறிக்க, கதிர் அறுக்கன்னு கிடைக்கிற வேலைக்குப் போயிருவான். அவன் ராணுவத்துக்குப் போன பிறகுதான் ஆண்டாளோட கஷ்டம் குறைஞ்சுச்சு. லெட்சுமணன் சம்பாத்யத்துல ரெண்டு ஏக்கர் நிலம் வாங்குனாங்க. அந்த நிலத்துல அப்பாவுக்கு ஒரு கோழிப்பண்ணை வச்சுக் கொடுக்கணும்னு லெட்சுமணன் ஆசைப்பட்டான். ஆனா அந்த நிலத்துலயே அவனை அடக்கம் செய்ற நிலை வந்திருச்சு...’’ - உறவினர்கள் கண்கலங்கி நிற்கிறார்கள்.

லெட்சுமணனின் அண்ணன் ராமர் பேசும் நிலையில் இல்லை. ‘‘தம்பி விட்ட பணியைத் தொடர்வேன்’’ என்று மட்டும் சொல்கிறார்.
25 வயதில் தேசத்துக்காக உயிர்துறந்திருக்கிறார் லெட்சுமணன். ராணுவத்துக்கு அடுத்தபடியாக அவர் நேசித்தது கிரிக்கெட். அவரது உடலை நல்லடக்கம் செய்தபோது கூடவே ஒரு கிரிக்கெட் மட்டையையும் வைத்தார்கள் இளைஞர்கள். மிகுந்த மரியாதையோடும் கண்ணீரோடும் லெட்சுமணனுக்குப் பிரியாவிடை கொடுத்தது தும்மக்குண்டு புதுப்பட்டி கிராமம்.
தேசத்துக்காகத் தன் உயிரைத் தந்த லெட்சுமணனைக் காலம் என்றென்றும் நினைவுகூரும்.