அரசியல்
அலசல்
Published:Updated:

தகவல்களை மூடி மறைக்கும் தமிழ்நாடு தகவல் ஆணையம்... கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!

மாநில தகவல் ஆணையம்
பிரீமியம் ஸ்டோரி
News
மாநில தகவல் ஆணையம்

தகவல் உரிமைச் சட்டத்தின் பிரிவு 18-ன் கீழ், தவறு செய்யும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கலாம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் காக்கவேண்டிய மாநில தகவல் ஆணையமே, ‘ஊழல் அதிகாரிகளுடன் கைகோத்துக்கொண்டு தவறுகளை மூடிமறைப்பதில் ஆர்வம் காட்டிவருகிறது’ என்று கொந்தளிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்!

அரசுத்துறைகளில் பெருகிவரும் ஊழலைத் தட்டிக்கேட்டு அம்பலப்படுத்த சாமானியர்களுக்கு சட்டம் வழங்கிய அதிகாரமே, ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்.’ இந்தச் சட்டத்தின்படி, அரசுத்துறை மற்றும் அரசு உதவிபெறும் துறைகளில் நமக்குத் தேவையான தகவல்களை எளிதாகக் கேட்டுப் பெற முடியும். ஆனால், அண்மைக்காலமாக மாநில தகவல் ஆணையத்தின் செயல்பாடுகள், கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கின்றன.

இது குறித்துப் பேசுகிற கோவை மூத்த வழக்கறிஞர் லோகநாதன், “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, அரசு, பொதுத்துறை அலுவலகத்திடம் நாம் ஒரு தகவல் கேட்டு மனு அனுப்பினால், சம்பந்தப்பட்ட துறையிலிருந்து 30 நாள்களுக்குள் பதில் கொடுக்கப்பட வேண்டும். அப்படி 30 நாள்களில் கொடுக்கப்படாவிட்டால் மேல்முறையீடு செய்யலாம். இதிலும் உரிய பதில் கிடைக்காதபோது, நேரடியாக ஆணையத்திடம் முறையிடலாம். ஆனால், ஆணையமும்கூட இப்போது உடனடித் தீர்வைத் தராமல், இழுத்தடிக்கும் வேலையைத்தான் செய்துவருகிறது. இன்னும் சில இடங்களில், ஆணையம் உத்தரவிட்ட பிறகும்கூட தகவல்களை வழங்குவதில்லை.

தகவல்களை மூடி மறைக்கும் தமிழ்நாடு தகவல் ஆணையம்... கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் கோரப்பட்ட ஒரு தகவலுக்கு, ‘நீங்கள் வழக்கறிஞர் என்பதால் தர முடியாது’ என பதிலளித்திருக்கின்றனர். இது சட்டத்துக்கு விரோதமானது. ஏனெனில், இந்திய குடிமகனாக இருக்கும் ஒவ்வொருவரும், தகவல் கோரலாம் என்றுதான் சட்டம் சொல்கிறது.

மத்திய தகவல் ஆணையம், தினசரி விசாரிக்கும் வழக்குகளை இணையத்தில் உடனடியாக ‘அப்டேட்’ செய்துவிடுகிறது. ஆனால், மாநில தகவல் ஆணையமோ, மாதங்கள் சில கடந்தும்கூட வழக்கு விவரங்களை ‘அப்டேட்’ செய்வதில்லை. இதேபோல் 2019-ம் ஆண்டிலிருந்து இதுவரை ஆண்டறிக்கையையும் பதிவு செய்யவில்லை. தகவல் ஆணையத்தின் இந்த மெத்தனச் செயல்பாடுகள் குறித்த தகவல்களைக்கூட, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துதான் வாங்கினேன்” என்றார்.

லோகநாதன்
லோகநாதன்

சென்னை சமூக ஆர்வலர் காசிமாயனோ, “தகவல் உரிமைச் சட்டத்தின் பிரிவு 18-ன் கீழ், தவறு செய்யும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், ஆர்.டி.ஐ ஆர்வலர்கள் ஏராளமான புகார் அனுப்பியும், கடந்த 16 ஆண்டுகளாக ஓர் அதிகாரி மீதுகூட நடவடிக்கை எடுக்காமல் தவறுகளை மூடி மறைக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர் ஆணைய அதிகாரிகள். இந்த வகையில் என்னுடைய 160 புகார்கள் இப்போதும் நிலுவையில் இருக்கின்றன. இதேபோல் தவறு செய்யும் அதிகாரிகளுக்குக் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம்; துறைரீதியான நடவடிக்கைக்குப் பரிந்துரை செய்யலாம். உதாரணமாக, 2018-ம் ஆண்டில் ஒரு வழக்கில்கூட ஆணையம் இப்படியான எந்த உத்தரவையும் போடவில்லை. ஒவ்வோர் ஆண்டும் இதுதான் நடக்கிறது. ஆனால், அந்தத் தகவலையும் தருவதில்லை. இதன் பின்னணியில் பணம் பிரதான இடம் வகிக்கிறது. ஆக, ஊழலை ஒழிக்க அமைக்கப்பட்ட ஆணையமே, ஊழலில் சிக்கி, செயல்பட முடியாமல் தவிக்கிறது” என்றார் விரக்தியாக.

இதற்கிடையே, “அரசு அலுவலகங்களில் இருக்கும் பொதுத் தகவல் அலுவலர்கள் தங்களுக்குள் வாட்ஸ்அப் குரூப் வைத்துள்ளனர். அதில், ‘என்ன சொல்லி தகவல்களை மறுப்பது’ என்பதுவரை பேசிக்கொள்வார்கள்” என்கின்றனர் ஆணைய அதிகாரிகள் வட்டத்தின் உள்விவரம் அறிந்தவர்கள்.

காசிமாயன்
காசிமாயன்
தியாகராஜன்
தியாகராஜன்

கோவை சமூக ஆர்வலர் தியாகராஜன், “தமிழ்நாடு தகவல் ஆணையம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதில்லை. `தவறான காரணங்களைச் சொல்லி தகவல் கொடுக்க மறுக்கும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று சட்டம் சொல்கிறது. ஆனால் வழக்குகளை விசாரிக்கும் ஆணையம் அப்படிச் செய்யாமல், ‘தகவல்களை வழங்கிவிடுங்கள்’ என்று மென்மையாக உத்தரவிட்டு அதிகாரிகளைக் காப்பாற்றும் வகையிலேயே செயல்படுகிறது. இதன் காரணமாக ஊழல் அதிகரிக்கிறது. `உரிய தகவல் கிடைக்கப்பெறாமல் ஆணையத்திடம் வந்து போராடும் மனுதாரர்களுக்கு, இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆணையம் அதையும் வழங்குவதில்லை. மாறாக சில இடங்களில் மனுதாரர்களை மிரட்டும் சம்பவங்களே நடக்கின்றன. வழக்கு விசாரணையின்போது, இரண்டு தரப்பினரையும் நேரில் அழைத்துக்கூட விசாரிப்பதில்லை. ஒட்டுமொத்தத்தில், அதிகாரிகளும் ஆணையமும் கூட்டுக் களவாணிகளாகச் செயல்படுகின்றனர். எனவே, ஆணையத்தின் செயல்பாடுகளைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதுமுள்ள ஆர்.டி.ஐ ஆர்வலர்கள் ஒன்றிணைந்து, சென்னையில் ஜூலை 18-ம் தேதி போராட்டத்தில் ஈடுபடவிருக்கிறோம்” என்றார்.

ராஜகோபால்
ராஜகோபால்

இது குறித்து விளக்கம் கேட்க, தமிழ்நாடு தகவல் ஆணையம் அலுவலக எண்ணுக்குத் தொடர்புகொண்டு விவரங்களை எடுத்துச் சொன்னதோடு, முதன்மை ஆணையர் ராஜகோபால் தொடர்பு எண்ணும் கேட்டோம். ஆனால், தொடர்பு எண் தர மறுத்துவிட்ட அலுவலர்கள், “சாரிடம் தகவல் சொல்லிவிட்டோம். அவர் சொன்னதும் அழைக்கிறோம்” என்றனர். இதழ் அச்சேறுகிற இந்நேரம்வரை பதில் எதுவும் வரவில்லை. நமது கேள்விகளை sic@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பியிருக்கிறோம். ஆணையம் தரப்பிலிருந்து உரிய பதில் வரும் பட்சத்தில், அதைப் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

முறைகேடுகளை அம்பலப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்திலும் முறைகேடா? வெட்கக்கேடு!