Published:Updated:

என்னங்க சார் உங்க திட்டம்?!

மசோதா
பிரீமியம் ஸ்டோரி
News
மசோதா

ஆர்.டி.ஏ திருத்த மசோதா ஜனநாயகத்தின் தோல்வி

என்னங்க சார் உங்க திட்டம்?!

ஆர்.டி.ஏ திருத்த மசோதா ஜனநாயகத்தின் தோல்வி

Published:Updated:
மசோதா
பிரீமியம் ஸ்டோரி
News
மசோதா

செந்தில் ஆறுமுகம், சட்டப் பஞ்சாயத்து இயக்கம்

‘திறமையான, வெளிப்படையான அரசு நிர்வாகத்தைத் தருவோம்’ என்று 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையான ‘சங்கல்ப் பத்ரா’வில் உறுதியளித்தது பி.ஜே.பி. ஆனால், ஜூலை 22-ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டத் திருத்த மசோதா, இந்த உறுதிமொழிக்கு எதிராக இருந்தது. காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள், இந்த மசோதாவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும், 218 எம்.பி-க்களின் ஆதரவுடன் (எதிர்ப்பு 79) மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியிருக்கிறது மோடி அரசு!

இந்த மசோதாவில் என்னதான் இருக்கிறது, ஏன் இதுகுறித்து நாடெங்கும் விவாதங்கள் நடக்கின்றன? 2005-ல் தகவல் உரிமைச் சட்டம் அமலுக்கு வரும் வரை, அரசு அலுவலகங்களில் என்ன நடக்கிறது என்பது பரம ரகசியமாக இருந்தது. நிர்வாகத்தை வெளிப்படையாக்கி, அரசு அலுவலகத்தில் மக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் என்ன ஆகின்றன என்பது முதல், பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்குச் செலவழிக்கப்பட்ட தொகை வரை கடைக்கோடி மனிதனும் அறியும் வகையில் கொண்டுவரப்பட்டதுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

என்னென்ன மாற்றங்கள்?

இந்தச் சட்டத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு, மாநிலத் தகவல் ஆணையம், மத்திய தகவல் ஆணையம் ஆகியவற்றுக்கு இருக்கிறது. ஏராளமான ஊழல்கள் தோலுரிக்கப்படக் காரணமாக இருந்த இந்தச் சட்டத்தின் மூன்று முக்கியப் பிரிவுகளான 13, 16, 27 ஆகியவை இப்போது திருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மத்திய, மாநிலத் தலைமைத் தகவல் ஆணையர்கள், அவரின் கீழுள்ள தகவல் ஆணையர்கள் ஆகியோரின் பதவிக்காலம், சம்பளம், சலுகைகள், பணி குறித்த விதிமுறைகள் ஆகிய நான்கு முக்கிய அம்சங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

என்னங்க சார் உங்க திட்டம்?!

ஆணையர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என்று இருந்ததை, ‘மத்திய அரசு வரையறுக்கும் காலம் வரை’ என்று மாற்றியுள்ளனர். சம்பளம், சலுகைகளை ‘இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆணையர்களுக்கு இணையானது’ என்று இருந்ததை, ‘மத்திய அரசு வரையறுக்கும்’ என்று திருத்தியுள்ளனர். ஆணையர்களின் பணி விதிமுறைகளையும் `மத்திய அரசு வரையறுக்கும்’ என்கிறது மசோதா. உண்மையில், ‘வரையறுக்கப்படும்’ என்று குறிப்பிடப்படும் விவரங்கள் எல்லாம், முழுமையாக வரையறுக்கப்பட்டால்தான் இந்த மசோதாவின் முழுவீச்சும் நமக்குப் புரியவரும். ஆனால், இப்போது செய்யப்பட்டுள்ள அடிப்படை மாற்றங்களே ஆபத்தானவை; சட்டத்தை நீர்த்துப்போகச் செய்பவை என்பதே சமூகச் செயற்பாட்டாளர்களின் குற்றச்சாட்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எதற்காகத் திருத்தங்கள்?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தகவல் ஆணையர்கள், இந்தியத் தேர்தல் ஆணையர்களுக்கு இணையானவர்கள். தேர்தல் ஆணையர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையானவர்கள். இந்த அடிப்படையில் தகவல் ஆணையர்களும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையானவர்கள் ஆகிறார்கள். ‘அரசியல் சாசனத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையர்களும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆணையர்களும் சட்டத்தின் பார்வையில் இணையானவர்கள் இல்லை. ஆனால், 2005-ம் ஆண்டுச் சட்டத்தில் அப்படி உள்ளது. எனவே, இதை மாற்றுகிறோம்’ என்கிறது மத்திய அரசு.

மோடி
மோடி

இத்தனை சட்ட நுணுக்கம் சொல்லும் மத்திய அரசுக்கு, ஓர் எளிய கேள்வி... சட்டம் அமல்படுத்தப்பட்டு 14 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மத்திய அரசு காரணமாகச் சொல்லும் முரண்பாட்டால், இதுநாள் வரை ஏற்பட்ட சட்டச்சிக்கல் ஒன்றைச் சொல்ல முடியுமா? இந்த முரண்பாட்டால் குழப்பத்துக்கு உள்ளான வழக்குகள் சிலவற்றைப் பட்டியலிட முடியுமா? பல்வேறு குளறுபடிகள், தாமதம், அலைக்கழிப்புகள் இருந்தாலும், இந்தச் சட்டம் நொண்டிக்கொண்டாவது ஓடிக்கொண்டுதானே இருக்கிறது. பிறகு ஏன் திருத்தம்? அதுவும் வெள்ளி அன்று தாக்கல் செய்து, திங்களே நிறைவேற்ற வேண்டிய தலை போகும் அவசரம் ஏன்? இதில் வேடிக்கை என்னவென்றால், மசோதாவைத் தாக்கல் செய்த மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங், ‘‘இந்தத் திருத்தங்கள் மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வலுப்பெறும். காங்கிரஸ் அவசரப்பட்டு இயற்றிய சட்டத்தில் குறைபாடுகள் உள்ளன. எங்கள் அரசு, அதை நிவர்த்தி செய்கிறது’’ என்கிறார்.

2016-ல் நடந்த சம்பவம் ஒன்றை இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது. சமூக ஆர்வலர் ஒருவர், 1978-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழுள்ள கல்லூரியில் பி.ஏ தேர்வு எழுதிய மாணவர்களில் தேர்ச்சிபெற்ற மற்றும் தேர்ச்சிபெறாத மாணவர்கள் குறித்த விவரங்களைக் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பிக்கிறார். தகவல் மறுக்கப்படுகிறது. விவகாரம், மத்திய தகவல் ஆணையத்துக்கு வருகிறது. ‘மனுதாரர் கேட்ட தகவலை உடனடியாகத் தரவும்’ என்று உத்தரவிடுகிறார் அன்றைய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு. இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளாகிறது. ஏனென்றால், அந்தப் பட்டியலில் இருந்த ஒரு முக்கியப் பிரமுகரின் பெயர், நரேந்திர மோடி!

இது நடந்தது டிசம்பர் 2016-ல். பிரதமரின் கல்லூரிப் படிப்பு விவகாரத்தைப் பெரும் விவாதத்துக்கு உள்ளாக்கிய இந்தத் தீர்ப்புக்குப் பின்னர்தான், தகவல் ஆணையத்தை ‘சீர்திருத்தம்’ செய்யும் முயற்சிகள் தீவிரமாகத் தொடங்கின. இப்போது செய்யப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களை 2018-ம் ஆண்டே நிறைவேற்ற முயற்சிசெய்தது மத்திய அரசு. ஆனால், அப்போது அது நிறைவேறவில்லை.

2005-ல் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவுகளில் குறைபாடு இருக்கிறது என்பது, 13 ஆண்டுகள் கழித்து 2018-ல்தான் கண்டுபிடிக்கப்பட்டதா? கல்லூரி விவகாரத்தில், மத்திய தகவல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் தடை வாங்க ஓடிய விவகாரம், ஊடகங்களில் விரிவான விவாதத்துக்கு உள்ளாகியது. இதனால் எரிச்சலுற்றவர்கள் ஆணையத்தின் மீது தனது கோபப்பார்வையைத் திருப்பினார்கள் என்பதுதான் சட்டத்திருத்த மசோதாவின் பின்புலத்தில் மறைந்து கிடக்கும் விவகாரம்.

டெல்லி பல்கலைக்கழக விவகாரத்தில் தீர்ப்பளித்த ஸ்ரீதர் ஆச்சார்யலு, இந்தத் திருத்த மசோதாவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘இது தகவல், ஆணையத்தின் முதுகில் குத்தும் விவகாரம்’ என்று கூறி, `இந்தத் திருத்தத்தை எம்.பி-க்கள் எதிர்க்கவேண்டும்’ என்று குரல் கொடுத்துள்ளார். ஒரு மத்திய முன்னாள் தகவல் ஆணையரே இந்தத் திருத்தங்கள் குறித்து எச்சரிக்கை செய்வதை, அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியாது.

திருத்தத்தால் என்ன பிரச்னை?

தகவல் ஆணையர்களின் பதவிக்காலம், பணி வரையறைகள், சம்பளம், சலுகைகள் அனைத்தும் மத்திய அரசால் முடிவுசெய்யப்பட்டால் தகவல் ஆணையர்களால் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. அவர்கள் பயத்தின் காரணமாக மத்திய அரசைப் பகைத்துக்கொள்ள முன்வர மாட்டார்கள். இது ஊழலை வெளிக்கொண்டுவரும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைப் போடும். ஏற்கெனவே சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை உள்ளிட்ட பல துறைகளில் மத்திய அரசின் குறுக்கீடு இருக்கிறது. இந்தச் சூழலில், தகவல் ஆணையத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது என்பதன் வெளிப்பாடே இந்தத் திருத்தங்கள்.

மக்களவையில் அவசரமாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, மாநிலங்களவையிலாவது விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. முக்கியமாக, மாநிலங்களவையில் பி.ஜே.பி-க்குப் போதிய எண்ணிக்கை இல்லாத நிலை மற்றும் 14 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பி விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள பின்புலத்தில், திருத்தப்பட்ட அம்சங்கள் மறுபரிசீலனைக்கு உள்ளாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், டி.ஆர்.எஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன், மசோதாவை மாநிலங்களவையில் ஜூலை 25-ம் தேதி நிறைவேற்றிவிட்டது மத்திய அரசு. இதில் வெற்றி அடைந்ததாக மத்திய அரசு நினைக்கலாம்.

ஆனால், இதை ‘ஆபரேஷன் சக்சஸ்... பேஷன்ட் டெத்!’ என்கிற கோணத்தில்தான் பார்க்க வேண்டும். ஆர்.டி.ஐ மசோதாவின் வெற்றி... ஜனநாயகத்துக்குத் தோல்வி!