உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. உலக அளவில் பெரும் ரசிகப் பட்டாளத்தைப் பெற்ற கால்பந்து போட்டியின் முடிவுகள் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கின்றன. இந்த நிலையில், குரூப் F பிரிவின் லீக் ஆட்டத்தில் பெல்ஜியம், மொராக்கோ அணிகள் மோதின. இதன் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 0-0 என்ற சமநிலையில் இருந்தன.
அதன் இரண்டாம் பாதியில், மொரோக்கோ அணி 2 - 0 என்ற நிலையில் முன்னிலை பெற்று வெற்றிபெற்றது. இதன் அடிப்படையில், குரூப் F புள்ளி பட்டியலில், மொரோக்கோ 4 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பெல்ஜியம் 3 புள்ளிகளுடன் 3-ம் இடத்திலும் உள்ளன. இந்த முடிவுகள் வெளியானவுடன், பெல்ஜியம் அணி தோல்வியின் எதிரொலியாக பெல்ஜியம் பிரஸ்ஸல்ஸில் கலவரம் வெடித்தது. கார், சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கால்பந்தாட்ட ரசிகர்களால் தீவைத்து எரிக்கப்பட்டன. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிவருகின்றன.
இதனால், அந்தப் பகுதியில், நீண்ட நேரம் பரபரப்பான நிலை ஏற்பட்டது. பெல்ஜிய தலைநகர் முழுவதும் பல இடங்களில் கலவரங்கள் நடந்தன. இதில், ஒரு பத்திரிகையாளர் ஒருவரின் முகத்தில் காயம் ஏற்பட்டது. கலவரத் தடுப்பு காவல்துறை தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. இரவு 7 மணியளவில் அமைதி திரும்பிய பகுதிகளும் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக காவல்துறை வட்டாரம் தெரிவித்திருக்கிறது.