ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் தன் வசப்படுத்தியதிலிருந்து தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதிலும் குறிப்பாக ஊழியர்களின் பணிநீக்கம் என்பது பேசுபொருளாகவே மாறியிருந்தது. ட்விட்டர் நிறுவனத்தில் 7,500 பேர் பணியாற்றி வந்த நிலையில், சுமார் 3,700 பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டனர்.
பின், "ட்விட்டர் நிறுவனத்தை லாபகரமானதாகக் கொண்டு செல்ல ஊழியர்கள் அதிக நேரம் பணி செய்ய வேண்டியிருக்கும். அதிக நேரம் வேலை செய்ய விருப்பம் இல்லாதவர்கள் விலகிக்கொள்ளலாம்" என்றும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நவம்பர் 21-ம் தேதி வரை ட்விட்டர் நிறுவனத்தின் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
எலான் மஸ்கின் இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் ராஜினாமா கடிதங்களை அனுப்பி வருகின்றனர். நவம்பர் 21-ம் தேதி வரை ட்விட்டர் நிறுவனத்தின் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் நெட்டிசன்கள் #RIPTwitter என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். இதுமட்டுமின்றி 'it's been a good run' என்று ட்விட்டரின் ஆயுள் அவ்வளவுதான் என்ற குறிப்பில் பதிவிட்டு வருகின்றனர்.
ட்விட்டர் அலுவலகங்கள் தற்போது செயல்படாமல் இருப்பதால், தற்போது செயல்பட்டு வரும் ட்விட்டர் ஆப் மற்றும் வலைதளம் விரைவில் செயலிழக்கும் என்றே டெக் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, "கால்பந்து உலகக்கோப்பை வரும் நவம்பர் 20-ம் தேதி தொடங்கவிருப்பதால் அப்போது அதிக பயனர்கள் ட்விட்டரை உபயோகிப்பார்கள். அப்போது நிச்சயம் ஆப் கிராஷ் ஆகும், ஆனால் அதைச் சரி செய்ய யாரும் இருக்கமாட்டார்கள்" என்கின்றனர்.