ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

உங்களுக்கு இயற்கையோடு பேசணுமா? - கற்றுத்தர காத்திருக்கிறது ‘ஜேகே’யின் ரிஷிவேலி!

‘ஜேகே’யின் ரிஷிவேலி!
பிரீமியம் ஸ்டோரி
News
‘ஜேகே’யின் ரிஷிவேலி!

ரமண மகரிஷி, மகாத்மா காந்தி ஆசிரமங்கள்போல, ஜே.கே பயன்படுத்திய பொருள்களை இங்கே காட்சிக்கு வைக்கவில்லை. காரணம், தனக்குப் பிறகு அருங்காட்சியகம் எதுவும் வேண்டாம் என்று அவர் சொல்லிவிட்டார்

மதம், சமயம், மரபு போன்ற கோட்பாடுகளுக்குள் சிக்காமல் மனித மனங்களோடு உரையாடி, அந்த மனங்கள் சஞ்சலப்படும்போதெல்லாம் அதற்கு காரணம் என்னவென்று அறிந்து அதிலிருந்து மீட்கும் முயற்சியை செய்து வந்தவர் தத்துவவியலாளர் `ஜே.கே' என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி. இவர் 1895-ம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் மதனபள்ளியில் (தற்போதைய ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்துக்குட்பட்ட ஊர்) பிறந்தார். தனது 14-ம் வயதில், பிரம்மஞான சபையின் தலைவர் அன்னி பெசன்ட் அம்மையாரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டார். அம்மையார் இவரை வழிகாட்டியாக அங்கீகரித்து, இவருக்கென ஆன்மிக நிலையத்தையும் உருவாக்கினார். ஆனால், அந்தப் பெரும் பதவியையும், ஆன்மிக நிலையத்தையும் கிருஷ்ணமூர்த்தி துறந்தார்.

அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான திறன், நவீன சமூகத்தில் மனித நேயத்தோடு எப்படி வாழ்வது, தனி மனிதன் சுய பாதுகாப்பை உருவாக்கிக்கொள்வது எப்படி, வன்முறை, பயம், கவலை இவற்றிலிருந்து விடுபடுவது எப்படி என்பதை சிந்தித்து, அதை மக்களிடையே நெருங்கிப் பழகி போதித்து வந்தார் ஜே.கே. கல்வி கற்பதற்கான சூழல், தியானம் செய்ய மற்றும் இயற்கையைப் புரிந்துகொள்வதற்கான இடமாக 1926-ம் ஆண்டு ‘ரிஷி வேலி' (Rishi Valley) உருவானது. ஜே.கே பிறந்த ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், மதனபள்ளியிலிருந்து 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது `ரிஷி வேலி’. மிகவும் பின்தங்கிய, வறட்சியான கிராமப் பகுதியில் இது உருவாக்கப்பட்டு, இன்று அந்தப் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பையும், மருத்துவ உதவிகளையும் வழங்கி வருகிறது. தற்போது `கிருஷ்ணமூர்த்தி ஃபவுண்டேஷன் இந்தியா’ என்ற அமைப்பால் இது நிர்வகிக்கப்படுகிறது. இங்கு பல பொறுப்புகளையும் பெண்கள் நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி

பறவைகளின் கீச்சொலிகள் மட்டுமே சங்கீதம் பாடிக் கொண்டி ருந்த ஒரு காலையில், இரண்டு மலைகளுக்கு இடையே சுமார் 350 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கும் `ரிஷி வேலி’க்குள் நுழைந்தோம். ஓங்கி வளர்ந்த மரங்கள் இதமான குளிருக்கும் காற்றுக்கும் இசைவு தெரிவித்தபடி வரவேற்றன. அமைதி, தியானம், இயற்கையோடு வாழ்தல், பறவைகளை ரசித்தல் போன்ற விருப்பம் உள்ளவர்களுக்கு ஏற்ற இடம். சரியாக 8.30 மணிக்கு தியான மண்டபத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், வெளியி லிருந்து வந்திருப்பவர்கள் என்று அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். பாடல்களோடு அந்நாளை தொடங்கு கிறார்கள்.

பாடல்கள் முடிந்த பின்னர், `ஸ்டடி சென்டர்’ என்றழைக்கப்படும் ஜே.கே தங்கிய இல்லத்துக்குச் சென் றோம். 20-ம் நூற்றாண்டின் ஆரம்ப கால பழைமையான கட்டடம். குறுகலான படிக்கட்டுகளில் ஏறிச் சென்றால் முதல் தளத்தில் நூலகம். ஒரு வெளிநாட்டுப் பெண்மணி ஹெட்போனில் ஜே.கேயின் உரையைக் கேட்ட வாறே ஜன்னல் வழி இயற் கையை ரசித்துக் கொண்டிருந் தார். நாம் ஒவ்வொரு அறை யாகச் சென்று பார்த்தோம். நம் கண்கள் எதையோ தேடி வட்டமிட்டபடியே இருந்ததை கவனித்த இல்ல பொறுப்பாளர் கீதா வரதன் புன்னகையுடன், “ஜே.கே பயன்படுத்திய பொருள்களை தேடுகிறீர்களா என்ன?!’’ என்று கேட்டுவிட்டு அவரே தொடர்ந்தார்... “ரமண மகரிஷி, மகாத்மா காந்தி ஆசிரமங்கள்போல, ஜே.கே பயன்படுத்திய பொருள்களை இங்கே காட்சிக்கு வைக்கவில்லை. காரணம், தனக்குப் பிறகு அருங்காட்சியகம் எதுவும் வேண்டாம் என்று அவர் சொல்லிவிட்டார். அவர் தங்கும் அறை, தியானம் செய்யும் அறை, உணவு உண்ணும் அறை, விருந்தினர் களைச் சந்திக்கும் அறை எல்லாமே இங்கிருக்கிறது. ஆனால், அவர் பயன்படுத்திய பொருள்கள் இங்கே எதுவும் இருக்காது. மேலும், `அந்தந்த கணத்தில் எப்படி வாழ்கிறோம்? அதுவே தியானம். இதற்காக பூஜைகள் செய்ய வேண்டாம், மந்திரங்கள் ஓத வேண்டாம்’ என்பதே ஜே.கேயின் வார்த்தைகள்’’ என்றவர்,

அனந்த ஜோதி
அனந்த ஜோதி

``ஆந்திராவின் மிகவும் வறண்ட பகுதியாகவும், தரிசு நிலமாகவும் இருந்த இந்த இடத்தை இன்று மரங்கள் அடர்ந்த சோலையாகவும், பறவைகள் சரணாலயமாகவும், உணவுப் பொருள்களை விளைவிக்கும் நிலமாகவும் மாற்றியிருக்கிறோம். இங்குள்ள அனைத்தும் மனிதர் களால் உருவாக்கப்பட்டவை. இந்த இடத்தில் அமைதி தவழ்கிறது. ஜே.கேவின் வழியில் அமைதியை விரும்பும் யாரும் இந்த இடத்துக்கு வரலாம். தன்னை உணரலாம்” என்று வரவேற்றார்.

`ரிஷி வேலி’யின் சிறப்புகளில் ஒன்று, இங்கே இயங்குகிற, ஜே.கே சிந்தனைகளை அடிப்படை யாகக் கொண்ட உறைவிடப் பள்ளி. இந்திய அளவில் சிறந்து விளங்கும் பள்ளி இது என்பது குறிப்பிடத்தக்கது. தான் இறக்கும்வரை(1986-ம் ஆண்டு வரை), ஒவ்வொரு குளிர்காலத்தின் போதும் இங்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ஜே.கே. அப்படி அங்கு செல்லும்போதெல்லாம் பல சொற்பொழிவு களையும், மாணவர்களுடனான உரையாடல் களையும் இங்கு நிகழ்த்தத் தவறியதில்லை. இந்த ஐ.சி.எஸ்.இ (Indian Certificate of Secondary Education - ICSE) சிலபஸ் பள்ளியில், சுற்றுவட்டார குழந்தைகளுடன் இணைந்து இந்தியாவில் உள்ள பெரும் திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களின் பிள்ளைகளும் படிக்கிறார்கள். சூழலுக்கு இசைந்த பள்ளிக் கட்டடங்கள், இந்தியாவின் தலைசிறந்த கட்டட வடிவமைப்பாளர் லாரி பேக்கரால் கட்டப் பெற்றுள்ளது. ‘`வீட்டில் இருப்பது போன்ற உணர்வு வரவேண்டும் என்பதற்காக வீடுபோலவே விடுதிகளையும் கட்டியிருக் கிறோம்’’ என்கிறார் பள்ளி முதல்வர் அனந்த ஜோதி.

சாந்தாராம்
சாந்தாராம்

“அகவிழிப்பு, இயற்கையின் ஓர் அங்கம். மாணவர்களுக்கு அதைத்தான் போதிக்கிறோம். அந்தந்த கணத்தில் வாழ மனதைத் தயார்ப் படுத்துகிறோம். ஒரு மனிதனின் மனம் செம்மை யாக இருந்தால்தான் சிந்தனையே வளரும். காலை வேளையில் கவிதைகள், மாலை வேளைகளில் `அஸ்தான்சல்’ என்ற பெயரில் அந்திசாயும் வானத்தைப் பார்க்க வைப்பது, இரவு உணவுக்குப் பிறகு நட்சத்திரங்களைப் பார்க்கவைப்பது எல்லாம் மாணவர்களின் படைப்புத் திறனை அதிகரிக்கிறது. கோலாட் டம் முதல் ஐரிஷ், ஆப்பிரிக்க நாட்டுப்புற டான்ஸ் வரையிலான நடனங்கள், டிரம்ஸ் என இங்கு கற்றுத்தரப்படும் கலைகள் மாணவர்கள் மனங்களில் மனச்சோர்வுக்கு இடமில்லாமல் செய்யும், புத்துணர்வாக்கும். செயற்கை நுண்ணறிவு, இணைய அல்காரிதம் என்று தொழில்நுட்ப விஷயங்கள் அதிகம் பயிற்றுவிக்கிறோம். சூழல் மேலாண்மை, கழிவு மேலாண்மை, சமைப்பது, ஓவியம் வரைவது, மண்பாண்டங்கள் செய்வது என்று அனைத் திலும் ஈடுபட வைக்கிறோம்” என்றார் அனந்த ஜோதி.

உங்களுக்கு இயற்கையோடு பேசணுமா? - கற்றுத்தர காத்திருக்கிறது ‘ஜேகே’யின் ரிஷிவேலி!
உங்களுக்கு இயற்கையோடு பேசணுமா? - கற்றுத்தர காத்திருக்கிறது ‘ஜேகே’யின் ரிஷிவேலி!

``மாணவர்களின் கவனத்தை ஒருங்கிணைக் கும் விதமாக பறவைகளைப் பார்க்க ஒவ்வொரு வாரமும் அழைத்துச் செல்கிறோம். பாம்பை கண்டால்கூட யாரும் பயப்படமாட்டார்கள். அதுவும் ஓர் உயிர்தான் என்றே அணுகுவார்கள்’’ என்று ஆச்சர்யப்பட வைத்தார், பறவையியல் துறை இயக்குநர் சாந்தாராம். ``1991-ம் ஆண்டு இது பறவைகள் சரணலாயமாக அறிவிக்கப் பட்டது. 1995-ம் ஆண்டு முதல் பறவைகள் பற்றி தொலைதூரக் கல்வியும் நடத்தி வருகிறோம்’’ என் தகவலையும் பகிர்ந்தார்.

இன்னும், இயற்கை விவசாயம், நாட்டு மாடுகள் வளர்ப்பு, நீர் மேலாண்மை எனப் பலவிஷயங்கள் இந்தப் பள்ளத்தாக்கில் ஒருங் கிணைந்து உருவாக்கப்பட்டிருக்கின்றன. இயற்கையை எப்படி அணுக வேண்டும், ஓர் இடத்தில் இயற்கையான சூழலை எப்படி உருவாக்க வேண்டும் என்பதை இந்த இடத்தை ஒருமுறை பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம்.

பூமி சரணம்!

உங்களுக்கு இயற்கையோடு பேசணுமா? - கற்றுத்தர காத்திருக்கிறது ‘ஜேகே’யின் ரிஷிவேலி!

யாரெல்லாம் செல்லலாம்?

ஜே.கிருஷ்ணமூர்த்தியைப் பின்பற்றுபவர்கள், அவருடைய சிந்தனைகளை அறிந்துகொள்ள விரும்பு பவர்கள், அவரால் உருவாக்கப்பட்டிக்கும் கல்வியைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு `ரிஷி வேலி’ வெல்கம் சொல்கிறது (கோவிட் பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளன). முன்கூட்டியே மின்னஞ்சல் மூலமாக அனுமதி பெற வேண்டும். தொடர்புக்கு: இணையதளம்: www.rishivalley.org, மின்னஞ்சல்: office@rishivalley.org