அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

சாலையில் மாடுகள்... அதிகரிக்கும் விபத்து... அலட்சியத்தில் சுங்கச்சாவடி நிர்வாகம்...

சாலையில் மாடுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
சாலையில் மாடுகள்

கடுகடுக்கும் மக்கள்!

`திண்டிவனம்-புதுவை நெடுஞ்சாலையில் கேட்பாரின்றி சுற்றித்திரியும் மாடுகளால் அடுத்தடுத்து விபத்துகள் ஏற்படுகின்றன’ என்று தொடர் குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.

விழுப்புரம் மாவட்டம், வானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாட்டுக்காரஞ்சாவடி, மொரட்டாண்டி உள்ளிட்ட 12 சிற்றூர்களைக்கொண்டது திருச்சிற்றம்பலம் ஊராட்சி. இதன் எல்லைகளுக்குள்தான் திண்டிவனம் - புதுவை தேசிய நெடுஞ்சாலை (NH32) சுங்கச்சாவடி அமைந்திருக்கிறது. வாகனங்களின் அணிவகுப்புக்குப் பஞ்சமில்லாத இந்தப் பகுதிகளில் கால்நடைகளால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன என்று புலம்புகிறார்கள் வாகன ஓட்டிகள்.

சாலையில் மாடுகள்... அதிகரிக்கும் விபத்து... அலட்சியத்தில் சுங்கச்சாவடி நிர்வாகம்...


“கடந்த மாதம் 23-ம் தேதி நள்ளிரவு, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே பைக்கில் சென்ற வட மாநில இளைஞர் ஒருவர் சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது மோதி, தனியார் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல், சுங்கச்சாவடிக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ் ஒன்றும் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. திண்டிவனம்-புதுவை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைந்திருக்கும் பகுதி மற்றும் மயிலம் ரோடு பகுதிகளில் இரவும் பகலுமாக நூற்றுக்கணக்கான மாடுகள் சுற்றித்திரிவதால் இங்கே அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன” என்கின்றனர் உள்ளூர் பொதுமக்கள்.

இந்தப் பிரச்னையின் வீரியம் குறித்து நம்மிடம் பேசிய திருச்சிற்றம்பலம் ஊராட்சித் தலைவர் வெங்கடேசன், “விபத்துகளைத் தவிர்ப்பதற்காக ஒலிபெருக்கி மூலம் மாடுகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தோம். அதையடுத்து, அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த சிலர், தங்களுடைய மாடுகளை ஓட்டி சென்றாலும், பெரும்பாலானோர் எங்கள் எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. எனவே, கடந்த மாதம் சாலையில் சுற்றித்திரிந்த 47 மாடுகளைப் பிடித்து ‘பட்டி’யில் அடைத்தோம். இதைக் கேள்விப்பட்டு மாட்டின் உரிமையாளர்கள் சிலர் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், ‘மாடுகளால் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. இனி மாடுகள் சாலையில் சுற்றினால் பிடித்து விற்றுவிடுவோம்’ என்று எச்சரித்து அனுப்பினேன். ஆனாலும் நிலைமை மாறவில்லை. இந்தப் பகுதி, மொரட்டாண்டி டோல்கேட் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வருகிறது. சாலைப் பராமரிப்புக்காக மக்களிடமிருந்து லட்சங்களில் நிதி பெறும் அவர்கள், இது குறித்த அக்கறையோடு நடந்துகொள்வதில்லை” என்றார்.

சாலையில் மாடுகள்... அதிகரிக்கும் விபத்து... அலட்சியத்தில் சுங்கச்சாவடி நிர்வாகம்...

டிராவல்ஸ் டிரைவரான சிவகுமார், “அண்மையில்கூட நான் ஓட்டிச் சென்ற வாகனத்தின் குறுக்கே வந்த மாடுகளால் விபத்துக்குள்ளாக இருந்து, மயிரிழையில் தப்பிப் பிழைத்தேன். இந்த சுங்கச்சாவடியைப்போல வேறு எங்கேயும் இத்தனை மாடுகள் கூட்டத்தைப் பார்க்க முடியாது. வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்கும் சேர்த்துத்தான் சுங்கக் கட்டணம் செலுத்துகிறோம். ஆனால், இவர்கள் இந்தப் பிரச்னையைக் கண்டுகொள்வதில்லை. அதேசமயம் அரசியல் தலைவர்கள் யாராவது இந்த வழியில் வருகிறார்கள் என்றால், ஒரு மாடுகூட சாலையில் இருக்காது. மாடுகளின் உரிமையாளர்களும் பாலைக் கறந்துவிட்டு, மாடுகளை அப்படியே சாலையில் விட்டுவிடுகின்றனர். இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் டூ வீலரில் செல்பவர்கள்தான்” என்றார் ஆதங்கத்தோடு.

இதையடுத்து சுங்கச்சாவடி மேலாளர் வெங்கடரமணாவிடம் இந்தப் பிரச்னை குறித்து விளக்கம் கேட்டபோது, “மாடுகளின் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பலனில்லை. இந்த நிலையில் மாடுகளை விரட்டுகிற எங்களுடைய ஊழியர்களிடம் லோக்கல் ஆட்கள் பிரச்னைக்கு வருகிறார்கள். தேசிய நெடுஞ்சாலையில் மொத்தம் 38 கி.மீ எங்களின் பராமரிப்புப் பகுதி. காவல்துறை, தாசில்தார், கலெக்டர் என்று எல்லோருக்கும் புகார் கொடுத்திருக்கிறோம். என்.ஹெச்.ஏ.ஐ-க்கும் (National Highways Authority of India) இது குறித்துத் தகவல் தெரிவித்திருக்கிறோம். அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு உதவினால்தான் மாடுகளால் ஏற்படும் விபத்துகளை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும்” என்றார்.

புதுச்சேரி யூனிட் என்.ஹெச்.ஏ.ஐ திட்ட இயக்குநரக பொறியாளர் ராஜா நம்மிடம் பேசியபோது, “ரோந்துப் பணியின்போது, தொடர்ச்சியாக மாடுகளைக் கட்டுப்படுத்த முயல்கிறோம். சாலைகளில் கால்நடைகளுக்காக பி.ஜி.ஆர் (Pedestrian Guard Rails) அமைத்திருக்கிறோம். மூன்று வருடங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரும் கால்நடை உரிமையாளர்களிடம் பேசியிருந்தார். ஆனால், இந்தப் பகுதி மக்கள், பிரச்னைகளின் தீவிரத்தைப் புரிந்துகொள்வதில்லை. என்.ஹெச்.ஏ.ஐ திட்ட இயக்குநரிடமும் இது குறித்துக் கலந்துரையாடிவிட்டு விரைவாக நடவடிக்கை எடுக்கிறோம்” என்றார்.

வெங்கடேசன், சிவகுமார், வெங்கடரமணா, அன்பரசு
வெங்கடேசன், சிவகுமார், வெங்கடரமணா, அன்பரசு

ஆரோவில் காவல் நிலைய ஆய்வாளர் அன்பரசு, “கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்தப் பகுதியில் ஐந்து வாகன விபத்துகளும், இரண்டு உயிரிழப்புகளும் மாடுகள் மூலமாக நிகழ்ந்திருக்கின்றன. அண்மையில், ஊராட்சிமன்றத் தலைவருக்குக் கடிதம் கொடுத்து, மாடுகள் பிடிக்கப்பட்டு பட்டியில் அடைக்கப்பட்டன. சாலையில் சுற்றித்திரியும் பல மாடுகளின் உரிமையாளர்கள் யார் என்பதே தெரியவில்லை. அவையும் ஓரிரு தினங்களில் பிடிக்கப்பட்டு, பராமரிக்காத உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்” என்றார்.

விவரமறிந்த சில காவல்துறை அதிகாரிகளோ, “ஒரு வருடத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட விபத்துகள் இங்கு மாடுகளால் நடக்கின்றன. ஆனால், பெரிய அளவில் காயங்கள் ஏற்படாதவர்கள், வழக்கு பதிவதால் ஏற்படும் அலைச்சலுக்குப் பயந்து, ‘வெறும் வாகன விபத்து’ என்று மட்டும் குறிப்பிட்டு வண்டிக்கு இன்ஷுரன்ஸை க்ளெய்ம் செய்துகொள்கிறார்கள். அதனாலேயே, மாடுகளால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை குறைவாகப் பதிவாகியிருக்கிறது” என்றனர்.

வாகன ஓட்டிகள் மற்றும் மாடுகளின் நலனைக் காக்க சம்பந்தப்பட்ட சுங்கச் சாவடி நிர்வாகமும், அரசும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டியது அவசியம்!