Published:Updated:

கொலையில் முடிந்த சாலை வெறி; யாருக்கு வரும், எப்படித் தடுக்கலாம்? உளவியல் பார்வை!

பைக் பயணம்
News
பைக் பயணம்

ராய்ப்பூரில் நடந்த சம்பவத்தைப் பார்க்கும்போது இதை சாலை வெறி பயணத்தில் மட்டுமே ஒப்பிட்டு பார்க்க முடியாது. கொலையே செய்யும் அளவுக்கு வெறி லட்சத்தில் ஒருவருக்கு வேண்டுமானால் வரலாம். மிக அரிதாக சிலருக்குத்தான் இந்த மனநிலை பிரச்னை ஏற்படும்.

Published:Updated:

கொலையில் முடிந்த சாலை வெறி; யாருக்கு வரும், எப்படித் தடுக்கலாம்? உளவியல் பார்வை!

ராய்ப்பூரில் நடந்த சம்பவத்தைப் பார்க்கும்போது இதை சாலை வெறி பயணத்தில் மட்டுமே ஒப்பிட்டு பார்க்க முடியாது. கொலையே செய்யும் அளவுக்கு வெறி லட்சத்தில் ஒருவருக்கு வேண்டுமானால் வரலாம். மிக அரிதாக சிலருக்குத்தான் இந்த மனநிலை பிரச்னை ஏற்படும்.

பைக் பயணம்
News
பைக் பயணம்

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே கன்காலிபாரா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவம் நாட்டில் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 15 வயதுச் சிறுமி, 40 வயதுள்ள மாற்றுத்திறனாளி ஒருவரை குத்திக்கொன்றுள்ளார்.

கேட்கும் திறன் இல்லாத மாற்றுத்திறனாளியை, சிறுமி கொலை செய்யும் அளவுக்கு என்ன நடந்தது... காரணம் நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது.

கைது செய்யப்பட்ட சிறுமி
கைது செய்யப்பட்ட சிறுமி

15 வயதுச் சிறுமி தன் தாயுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சைக்கிளில் சென்றுகொண்டிருந்த சுதாமா லேடர் என்பவரை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அதற்காக ஹாரன் அடித்தும், அவர் வழி விடவில்லை. அவருக்கு கேட்கும் திறன் இல்லை என்பது அந்தப் பெண்ணுக்குத் தெரியவில்லை. எனவே, பல முறை கோபத்தில் ஹாரன் அடித்துக் கொண்டே இருந்தவர், அதற்கு பதில் இல்லை என்றதும் அவர் தன்னைப் புறக்கணிக்கிறார் என்று நினைத்து, தனது டூ வீலரை சாலையில் நிறுத்திவிட்டு லேடரை நோக்கி கத்த ஆரம்பித்தார். அவருக்கு காது கேட்காது என்பதை அறியாத அந்தச் சிறுமி, தான் வைத்திருந்த கத்தியால் சுதாமா லேடரின் கழுத்தில் குத்தியதாகக் கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் மீட்டு அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

அந்தச் சிறுமியோ தன் தாயை அந்த இடத்தில் விட்டுவிட்டு வேகமாகத் தப்பித்துச் சென்றுவிட்டார். தகவல் அறிந்த காவல்துறையினர் அந்தச் சிறுமியை மந்திர் ஹசௌத் பகுதியில் மடக்கிப் பிடித்தனர். அத்துடன் தாக்குதல் செய்யப் பயன்படுத்திய ஆயுதத்தையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

சாலையில் வேகமாகச் செல்வது, அடுத்தவரை முந்த நினைப்பது, விடாமல் ஹாரன் அடிப்பது என இந்த வெறி ஏன் ஏற்படுகிறது, அதை எப்படித் தடுக்கலாம் என்பதை நெல்லை, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் யுவராஜிடம் கேட்டோம்.

``பிற வாகனங்களில் செல்பவரின் மீதும், சாலையில் செல்பவரின் மீதும் தாக்குதல் நடத்துதல், ஹாரன்களை ஒலித்து, அதிக இரைச்சலை ஏற்படுத்துதல், திட்டுதல், சண்டை போடுதல், வாகன நெரிசலால் ஏற்படும் உணர்ச்சிப்பெருக்கு, சைகைகள் மூலமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல் போன்றவை Road rage எனப்படும் சாலைவெறியின் அறிகுறிகள். இது பெரும்பாலும் 18 முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்களை அதிகமாக பாதிக்கிறது.

Curiosity எனப்படும் ஆர்வக்கோளாறு உணர்வுநிலை அதிகம் உள்ள பருவம் டீன்ஏஜ் மற்றும் அதையொட்டிய பருவம். பொதுவாக இந்தப் பருவத்தில் எதையுமே அதீதமாகச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருப்பது இயல்புதான். விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாதது, கவனமின்மை, அறியாமை போன்றவையும் இந்த மனநிலைக்குக் காரணமாகிறது.

சாலை வெறி
சாலை வெறி

சில இளைஞர்கள், சாலையில் வாகனம் ஓட்டும்போது ஹீரோயிசத்தைக் காட்ட வேண்டும், அடுத்தவர்களுடைய கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று நினைத்து அதிகமான வேகத்தில் வண்டியை ஓட்டுகின்றனர். சமீபகாலமாக இத்தகைய சம்பவங்கள் அதிகரித்திருப்பதால் விபத்துகளும் அதிகரித்திருக்கின்றன.

பெற்றோர்கள் கண்டிப்பாகத் தங்கள் மகன்/ மகளுக்கு குடும்பத்திலும் சமூகத்திலும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளை சொல்லிக்கொடுக்க வேண்டும். வண்டியை ஓட்டும் வேகம் நிதானமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். பிள்ளைகளுக்கு வாகனம் வாங்கிக்கொடுக்கும்போது அதற்கான தேவை எந்த அளவு உள்ளது என்பது குறித்து பெற்றோர் யோசிக்க வேண்டும்.

கார்/பைக்
கார்/பைக்

இந்த மாதிரி சாலை வெறி பிரச்னை இருப்பவர்கள்

அதிக வேகத்தில் வாகனங்களை ஓட்டுவார்கள்.

சிக்னலை மதிக்காமல் சிவப்பு விளக்கை மீறிச் செல்வார்கள்.

காரணம் இல்லாமல் மற்றவரை முறைத்துப் பார்ப்பார்கள், திட்டுவார்கள். சண்டைபோடுவார்கள்.

நமக்கு முன் செல்லும் வாகனங்களை காரணம் இல்லாமல் முந்திச் செல்ல நினைப்பார்கள்.

சாலையில் நடந்து செல்பவர்களை தகாத வார்த்தைகளில் திட்டுவார்கள்.

இந்த மாதிரி செயல்பாடுகள் இருக்கும் நபர்கள், உடனடியாக மனநல மருத்துவரை அணுகுவது நல்லது.

மது, போதைப்பொருள் பயன்படுத்தி இருக்கும்போதும் தன்னிலை மறந்து சிலருக்கு சாலை வெறி ஏற்படுவதுண்டு. சாலை பயணத்தில் இவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

சாலை வெறி தவிர்க்க சில ஆலோசனைகள்!

பசியோடு பயணம் செய்வதைத் தவிர்க்கலாம். அனைத்தையும் விட பசி மிகவும் ஆபத்தானது. பசி எளிதில் கோபத்தை உண்டாக்கும்.

நீண்ட நேரம் தூங்காது கண் விழித்து வாகனம் ஓட்டினால், சாலையின் ஓரமாக வாகனத்தை நிறுத்தி முகம் கழுவிவிட்டு சில மணி நேரம் ஓய்வெடுத்த பின், பயணத்தைத் தொடரலாம்.

மிகுந்த கோபம் அல்லது மனஉளைச்சலில் வாகனம் ஓட்ட நேர்ந்தால் ஒரு நிமிடம் சாலையின் ஓரமாக நின்று, நிதானமாகிய பின் மீண்டும் பயணத்தைத் தொடரலாம்.

பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது. பதற்றம்தான் சாலை வெறிக்கான அடிப்படை.

குழந்தைகளோடு பயணிக்கும்போது அவர்கள் மேல் கூடுதல் கவனத்தோடு இருப்பது நல்லது. வாகனம் ஓட்டும்போது உடன் பயணிப்பவர்கள் கோபமாகப் பேசினால் அதைக் கண்டு கொள்ளாது விட்டுவிடுங்கள்.

பயணம்
பயணம்

அதிக உணர்ச்சிவசப்படுதல், நாடகத்தன்மையோடு நடந்துகொள்பவர்களுக்கு `கிளஸ்டர்- பி பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்’ (cluster b personality disorder) என்ற பிரச்னை இருக்கும், இவர்களுக்கு சாலைவெறி வருவதற்கு அதிக வாய்ப்புகள் அதிகம்.

பொதுவாக, சாலை வெறியால் பாதிக்கப்பட்டவர்கள் அமைதியாகவே இருப்பார்கள். பல சமயங்களில் அதிகமாக கோபப்படுவார்கள். ஒரு மணிநேரத்துக்குள் சரியாகிவிடுவார்கள், நடந்ததை நினைத்து வருத்தப்படுவார்கள். இதை `டிஸ்ரப்டிவ் இம்பல்ஸ் கன்ட்ரோல் அண்டு டிஸ்ஆர்டர்’ (disruptive impulse control and conduct disorder) எனக் கூறுவர்.

பயணம்
பயணம்

நடத்தை பிரச்னை

ராய்ப்பூரில் நடந்த சம்பவத்தை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. கொலையே செய்யும் அளவுக்கு வெறி லட்சத்தில் ஒருவருக்கு வேண்டுமானால் வரலாம். மிக அரிதாக சிலருக்குத்தான் இந்த மனநிலை ஏற்படும். கையில் ஆயுதத்துடன் பயணம் செய்திருப்பதைப் பார்க்கும்போது, அந்தப் பெண்ணுக்கு வேறு பிரச்னைகள் இருந்தனவா என்பதையும் ஆராய வேண்டும். அது காவல்துறை விசாரணையில்தான் தெரியவரும் பொறுமையின்மையுடன் காணப்படும் இத்தகைய நபர்களை நடத்தை பிரச்னை (conduct disorder) உடையவர்களாகச் சொல்வோம்.

நடத்தை பிரச்னை உள்ளவர்கள் சிறு வயதிலேயே பொருள்களை உடைப்பது, திருடுவது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். வீட்டிலும் சரி, வெளியிலும் சரி நெறிமுறைகளை மீறி செயல்படுவார்கள். `மற்ற பிள்ளைகளை அடிக்கிறான், அடிக்கிறாள், பென்சிலை திருடுறான், திருடுறாள்’ போன்ற புகார்கள் பள்ளிகளில் இருந்து அடிக்கடி வரும்.

பெற்றோர்கள் இவர்களிடம் நடந்துகொள்ளும் விதத்தில் சரியான தீர்வு உள்ளது. இவர்களை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும், இவர்களிடம் வன்முறையாக நடக்கக் கூடாது. அன்பாக நடத்த வேண்டும், மனநல மருத்துவரை அணுகி உளவியல் சார்ந்த சிகிச்சை எடுப்பது நல்லது'' என்றார்.