பகலில் சாமி... இரவில் டிப்டாப் ஆசாமி! - பிரபல கொள்ளையன் ‘துப்பாக்கி’ சேகர் சிக்கியது எப்படி?

2007-ல் சிறையிலிருந்து வெளிவந்தபோதும், மீண்டும் திருட்டு வழக்குகளில் சிக்கி சிறைக்குச் சென்ற சேகர், கடந்த 2019-ல் வெளியே வந்து தலைமறைவானான்.
தொடர் திருட்டு வழக்குகளில் தேடப்பட்டுவந்த பிரபல கொள்ளையன் துப்பாக்கி சேகரை, கடந்த 13-ம் தேதி நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு கைது செய்திருக்கிறது சென்னை போலீஸ். மூன்று ஆண்டுகளாகப் பகலில் சாமியாராகவும், இரவில் டிப்டாப் ஆசாமியாகவும் மாறுவேடம் போட்டுக்கொண்டு போலீஸாருக்குத் தண்ணி காட்டிவந்த துப்பாக்கி சேகரின் குபீர் ஃப்ளாஷ்பேக் வேறு ரகம்.
சென்னை கொளத்தூர், ராஜமங்கலம், பெரவள்ளூர் ஆகிய காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் பூட்டிய வீடுகளில் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறிவந்தன. கொள்ளை நடந்த ஒருசில இடங்களில் கிடைத்த சிசிடிவி காட்சிகளில், பேன்ட் சர்ட் அணிந்த டிப்டாப் ஆசாமி ஒருவனின் உருவம் மட்டுமே போலீஸாருக்குத் தடயமாக எஞ்சியது. எனினும், சிசிடிவி காட்சிகளில் அந்த ஆசாமியின் முகம் தெளிவாகத் தெரியாத காரணத்தால் அவனை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில்தான், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு, தனிப்படை போலீஸாருக்கு அந்த டிப்டாப் ஆசாமியின் குடும்பம் திருவள்ளூர் அருகிலுள்ள புட்லூரில் இருக்கிறது என்று தகவல் கிடைத்தது.
உடனடியாக அங்கு சென்ற போலீஸார், டிப்டாப் ஆசாமியின் வீட்டைக் கண்டுபிடித்து அங்கிருந்த பெண்ணிடம் சிசிடிவி காட்சிகளைக் காட்டி விசாரித்தனர். அந்தப் பெண், “இவர் என்னுடைய கணவர் சேகர்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் பிரிந்துவிட்டோம்.” என்று போலீஸாரிடம் தெரிவித்தார். சேகரின் மனைவி அளித்த தகவலின் அடிப்படையில், அவர் திருப்பதியில் தலைமறைவாக இருப்பது போலீஸாருக்குத் தெரியவந்தது. ஆனால் அங்கு அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்னைக்குத் திரும்பியது தனிப்படை.
இந்த நிலையில், கடந்த 13-ம் தேதி சென்னையிலிருந்து காசிக்குச் செல்லும் ரயிலில் சேகர் பயணிக்கவிருப்பதாகத் தனிப்படை போலீஸாருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக வில்லிவாக்கம் பகுதிக்கு விரைந்தது தனிப்படை. அப்போது அங்கு காவி உடையில் சாமியார் வேடத்தில் இருந்தார் துப்பாக்கி சேகர். அவரைக் கைதுசெய்து விசாரித்தபோது சேகரின் வண்டவாளங்கள் போலீஸாருக்குத் தெரியவந்தன.

இது குறித்து துணை கமிஷனர் ராஜாராமிடம் பேசினோம். ``கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக கொளத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற 15 கொள்ளை வழக்குகளில் துப்பு துலங்காமலிருந்தது. அதனால், சிசிடிவி காட்சியில் கிடைத்த உருவத்தைவைத்து பழைய குற்றவாளிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தோம். அப்போது, அம்பத்தூர், ஆவடிப் பகுதிகளில் நடந்த திருட்டு வழக்குகள் மற்றும் இரட்டைக் கொலை வழக்கில் கைதான சேகர் என்கிற துப்பாக்கி சேகரின் அங்க அடையாளங்களோடு தடயங்கள் ஒத்துப்போயின. இதையடுத்து சேகரின் விவரங்களைத் திரட்டினோம்.
சிறுவயதில் கொளத்தூர் ராஜமங்கலத்தில் வளர்ந்த சேகர், 1993-ல் அம்பத்தூரில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் கைதாகி, 14 ஆண்டுகள் சிறையிலிருந்தான். சிறையில் சமையல் வேலை செய்யும்போது, சமையல் கரண்டியை எப்போதும் இடுப்பில் துப்பாக்கிபோல சொருகிவைத்திருந்ததால் அவனுக்கு ‘துப்பாக்கி சேகர்’ என்று சக கைதிகள் பட்டப்பெயர் வைத்துவிட்டனர். நாளடைவில் அதுவே அவன் அடைமொழியாகிவிட்டது.

2007-ல் சிறையிலிருந்து வெளிவந்தபோதும், மீண்டும் திருட்டு வழக்குகளில் சிக்கி சிறைக்குச் சென்ற சேகர், கடந்த 2019-ல் வெளியே வந்து தலைமறைவானான். இந்த மூன்று ஆண்டுகள் இடைவெளியில்தான் தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்திருக்கிறான். இதற்காக, சிசிடிவி இல்லாத வீடுகளை, பகலில் காவி வேடத்தில் நோட்டமிடுவான். பூட்டிய வீடுகள்தான் சேகரின் டார்கெட். சர்க்கரைநோய் பாதிப்பு இருப்பதால் கொள்ளையடிக்கும்போது அவசரமில்லாமல் பொறுமையாகச் செயல்படுவது இவன் ஸ்டைல். மேலும், கொள்ளையடித்துவிட்டு, சாமியார்போல காவி உடையணிந்து சென்னை, திருப்பதி ஆகிய பகுதிகளில் தலைமறைவாகச் சுற்றிக் கொண்டிருந்திருக்கிறான். போலீஸிடம் சிக்காமல் இருக்க பகலில் சாமியார் வேடத்திலும், இரவில் டிப்டாப் ஆசாமியாகவும் உலவிவந்த சேகரை நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைதுசெய்திருக்கிறோம்” என்றார்.
தனிப்படை போலீஸாரிடம் பேசினோம். ``15 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட சேகரிடமிருந்து இதுவரை 65 சவரன் தங்க நகைகள், 300 கிராம் வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. எனினும், கொள்ளை நடந்த வீட்டின் உரிமையாளர்கள் கொடுத்த புகாருக்கும், சேகர் அளித்திருக்கும் வாக்குமூலத்துக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவர், தன்னுடைய வீட்டிலிருந்து 15 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டதாகப் புகார் அளித்திருந்தார். ஆனால், வாக்குமூலத்தில், “அவர் வீட்டிலிருந்து ஒரே ஒரு ஓட்டை வாட்ச்தான் சார் திருடினேன்” என்கிறான் சேகர்” என்று முடித்துக் கொண்டனர்.