
கைது செய்யப்பட்டவர்கள் இப்போது எங்கள் அமைப்பில் இல்லை. எங்கள் அமைப்பில் இணைபவர்களின் செயல்பாட்டைப் பார்த்த பிறகே பொறுப்பை நீட்டிப்போம்.
புதுப் பணக்காரர்கள், ஹவாலா புள்ளிகளாகப் பார்த்துக் கொள்ளையடித்துவந்த கும்பலை, வளைத்துப் பிடித்திருக்கிறது காவல்துறை. மனித உரிமை ஆர்வலர் என்கிற போர்வையில் இந்தக் கொள்ளைக் கும்பல் அட்டகாசம் செய்துவந்ததும், பெங்களூரு வரை கைவரிசை காட்டியிருப்பதும் போலீஸாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது!
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சாலையூரில் வசித்துவரும் சீனிவாசன், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். கடந்த டிசம்பர் 26-ம் தேதி இவர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து, வீட்டுக்குள் புகுந்த முகமூடிக் கும்பல், குடும்பத்தினரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பீரோவிலிருந்த 43 பவுன் நகை, 18 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது. இந்தக் கொள்ளை தொடர்பாக வேடசந்தூர் போலீஸார் விசாரித்துவந்த நிலையில், கடந்த ஜனவரி 9-ம் தேதி, திருச்சி பைபாஸில் தங்கம்மாபட்டியில் வாகன சோதனை செய்தபோது காரில் வந்த ஒரு கும்பலை போலீஸ் மடக்கியது. பெண் உட்பட எட்டு பேர்கொண்ட அந்தக் கும்பல் முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்கவும், அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிச் சென்று விசாரித்திருக்கின்றனர். அப்போது, ‘நாங்கள்தான் ரியல் எஸ்டேட் அதிபர் சீனிவாசன் வீட்டில் கொள்ளையடித்தோம். இந்தக் கொள்ளைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தது, `மனித உரிமைகள் கழகம்’ என்ற அமைப்பின் மதுரை மாவட்டச் செயலாளர் ஜோதியும், மதுரை மண்டலச் செயலாளர் தீனதயாளனும்தான்’ என அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறார்கள் கொள்ளையர்கள். தொடர்ந்து, போலீஸார் விசாரித்தபோதுதான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவர ஆரம்பித்தன.

நம்மிடம் பேசிய வேடசந்தூர் டி.எஸ்.பி துர்காதேவி, “ `மனித உரிமைகள் கழகம்’ என்று சொல்லிக்கொண்டு ரியல் எஸ்டேட் தரகராகச் செயல்பட்டுவந்த தீனதயாளனிடம், புதிதாக இடம் வாங்க சீனிவாசன் 5 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார். ‘சீனிவாசனிடம் நிறைய பணம், நகை இருக்கிறது. அவரிடம் கொள்ளையடிக்கலாம்’ என்று தீனதயாளன், தன் கூட்டாளியான ஜோதிக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். சென்னை, சேலம், நாமக்கல், ஓசூர் பகுதிகளைச் சேர்ந்தவர்களை இந்தக் கொள்ளைத் திட்டத்துக்காக வரவழைத்திருக்கிறார்கள். சீனிவாசன் வீட்டைத் தொடர்ந்து நோட்டமிட்டு, அவர் வீட்டில் இல்லாத நேரமாகப் பார்த்து கொள்ளையடித்துள்ளனர். சில நாள்கள் கழித்து, வாணியம்பாடியில் ஒரு ஹவாலா புள்ளியிடம் கொள்ளையடிக்க, கொள்ளையர்கள் சென்றபோதுதான் எங்களிடம் சிக்கினர். மனித உரிமைகள் கழக நிர்வாகிகள் என்று சொல்லிக்கொண்டு உசிலம்பட்டி உத்தப்பநாயக்கனூரைச் சேர்ந்த ஜோதியும், மதுரையைச் சேர்ந்த தீனதயாளனும் பல இடங்களில் இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து விசாரித்துவருகிறோம்” என்றார்.

இது குறித்து கூடுதல் தகவலை நம்மிடம் கொட்டிய போலீஸ் அதிகாரிகள், “ஊழல் செய்யும் அதிகாரிகள், வியாபாரிகள், புதுப் பணக்காரர்கள், ஹவாலா புள்ளிகளைக் குறிவைத்து கொள்ளையடிப்பதை இந்தக் கும்பல் வழக்கமாக வைத்திருக்கிறது. டிஸ்மிஸ் செய்யப்பட்ட போலீஸ்காரர் செல்வகுமார், தீனதயாளன் அறிவுறுத்தலில் கொள்ளைக்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். பெங்களூர் உள்ளிட்ட மற்ற ஊர்களிலும் இவர்கள்மீது வழக்குகள் இருப்பதாகத் தெரியவருகிறது. போலீஸ் பிடித்தபோது மனித உரிமைகள் கழக அடையாள அட்டையைக் காட்டி ரொம்பத் திமிராக ஜோதி பேசியிருக்கிறார். அவரை கஸ்டடி எடுத்து விசாரிக்கும்போது இன்னும் பல உண்மைகள் வெளிவரும்’’ என்றார்கள்.
மனித உரிமைகள் கழக நிறுவனர் சுரேஷ் கண்ணனிடம் பேசினோம். “கைது செய்யப்பட்டவர்கள் இப்போது எங்கள் அமைப்பில் இல்லை. எங்கள் அமைப்பில் இணைபவர்களின் செயல்பாட்டைப் பார்த்த பிறகே பொறுப்பை நீட்டிப்போம். இவர்கள் ஆரம்பநிலையிலேயே சரியாகச் செயல்படாததால், அப்போதே பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டோம். அவர்கள் வைத்திருந்த ஐ.டி கார்டுகள் பழையவை” என்றார்.
எல்லா ரூபங்களிலும் குற்றவாளிகள் வலம்வருகிறார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நம் பொறுப்பு!