அதிகரிக்கும் வழிப்பறிக் கொள்ளை... அச்சத்தில் பொதுமக்கள்... என்ன செய்யப்போகிறது காவல்துறை?

காவல்துறை தரப்பில் வழிப்பறிக் குற்றங்கள் அதிகரிக்கவில்லை என்று வெறும் எண்ணிக்கையாகச் சொல்கிறார்கள். ஆனால்
கடந்த சில தினங்களுக்கு முன்பாக, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆறு இளைஞர்கள் அங்கிருந்த பொதுமக்களிடம் பட்டாக்கத்தியைக் காட்டி மது குடிக்கப் பணம் கேட்டு மிரட்டி, வழிப்பறியில் ஈடுபட்டனர். சம்பவமறிந்து வந்த போலீஸார், அந்த ஆறு பேரையும் விரட்டிப் பிடித்து கைதுசெய்து, அவர்களிடமிருந்த ஐந்து பட்டாக்கத்திகளையும் பறிமுதல் செய்தனர். வழிப்பறியில் ஈடுபட்ட ஆறு இளைஞர்களும் வெறும் 19 முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்கள். தலைநகரில் மட்டுமல்ல, தமிழகம் முழுக்க இப்படிக் கத்தியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபடும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன!

கடலூரைச் சேர்ந்த வீரபாண்டி, பூபதி... இரண்டு இளைஞர்களும் கடந்த டிசம்பர் 09-ம் தேதி வேலைவாய்ப்பு தேடி கோவைக்குச் சென்றிருக்கிறார்கள். நள்ளிரவில் காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே இவர்கள் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த நான்கு இளைஞர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வீரபாண்டியையும் பூபதியையும் சரமாரியாகத் தாக்கி, அவர்களிடமிருந்து பணம், செல்போன் ஆகியவற்றைப் பறித்துச் சென்றிருக்கிறார்கள். படுகாயமடைந்த இளைஞர்கள் இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள் என்பதும், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வழிப்பறியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.


சென்னை பெரம்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஆகாஷ். கடந்த டிசம்பர் 17-ம் தேதியன்று ஜமாலியா இணைப்புச் சாலையருகே அவர் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, இரண்டு இளைஞர்கள் லிஃப்ட் கேட்டிருக்கிறார்கள். இரவு நேரமென்பதால், ஆகாஷும் இரக்கப்பட்டு அவர்களைத் தனது பைக்கில் ஏற்றியிருக்கிறார். சிறிது நேரத்தில் லிஃப்ட் கேட்டவர்கள் கத்தியைக் காட்டி, ஆகாஷிடம் பைக்கை நிறுத்தச் சொல்லி மிரட்டியிருக்கிறார்கள். மேலும், ஆகாஷின் தலையில் பலமாகத் தாக்கிவிட்டு, அவரின் செல்போன், ஸ்மார்ட் வாட்ச், பர்ஸ் ஆகியவற்றை மட்டும் பிடுங்கிக்கொண்டு தப்பித்துச் சென்றிருக்கிறார்கள். இது தொடர்பாக, அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் குமார் (22), தருண் (19) ஆகிய இரண்டு பேரை போலீஸார் கைதுசெய்து சிறையிலடைத்தனர். இதேபோல லிஃப்ட் கேட்டு வழிப்பறியில் ஈடுபட்ட வழக்குகள் மதுரை, திண்டுக்கல் பகுதிகளிலும் அதிக அளவில் பதிவாகியிருக்கின்றன.
காஞ்சிபுரம் குள்ளப்பன் நகர் பகுதியில், கடந்த டிசம்பர் 21-ம் தேதி இரவு 9 மணிக்கு கஞ்சா போதையில் வந்த மூன்று இளைஞர்கள் பட்டாக்கத்தியைக் காட்டி மிரட்டி, அங்கிருக்கும் கடை ஒன்றிலிருந்து செல்போன், பணம் ஆகியவற்றைப் பறித்துச் சென்றுள்ளனர். இதே கும்பல், அடுத்தடுத்து ஏழு கடைகளில் கத்தியைக் காட்டி மிரட்டிப் பணம் பறித்திருக்கிறது. பணம் தர மறுத்தவர்களைச் சரமாரியாக வெட்டி காயம் ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், சாலையில் சென்றுகொண்டிருந்த பொதுமக்களையும் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டிருக்கிறது. காஞ்சிபுரம் போலீஸார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் நான்கு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இதேபோல, மதுரையில் தள்ளுவண்டியில் கடை வைத்திருந்த குருசாமி என்பவரிடம் கத்தியைக் காட்டி 1,500 ரூபாய் பணம் பறித்தது, திருப்பூரில் 17 வயது சிறுவனைக் கத்திமுனையில் கடத்தி செல்போன், பணம் பறித்தது என்று இளம் வயதினர் ஈடுபட்ட வழிப்பறி மற்றும் குற்றச் சம்பவங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இந்தச் சம்பவங்கள் அனைத்தும் வெறும் உதாரணங்கள்தான். காவல் நிலையங்களில் அன்றாடம் இது போன்ற ஏராளமான வழக்குகள் பதிவாகின்றன. இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்.
“இந்த விஷயத்தில், வழக்கமாகக் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரைவிட முதல் முறையாகக் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அதிலும் 16 முதல் 25 வயது வரையுள்ள சிறார்களும் இளைஞர்களும் அதிகம் கைதாகிறார்கள்” என்றனர்.
அதிகரித்துவரும் வழிப்பறிக் குற்றங்கள் குறித்து தமிழ்நாடு காவல்துறை சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி சங்கரிடம் பேசினோம், “வழிப்பறிக் குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன என்பது தவறான தகவல். நகர்ப் பகுதிகளில், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மூன்று பிரிவுகளாகக் காவலர்கள் பிரிக்கப்பட்டு, அதிக அளவிலான காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். அதோடு, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்புப் பிரிவு காவலர்கள், காவல் அதிகாரிகள் குற்றவாளிகளையும், குற்றச் செயல்களையும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டில் 1,021 வழிப்பறிக் கொள்ளை வழக்குகளும், 7,613 வாகனத் திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளும் பதிவாகியிருக்கின்றன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைவிடக் குறைவுதான்” என்றார்.

காவல்துறை தரப்பில் வழிப்பறிக் குற்றங்கள் அதிகரிக்கவில்லை என்று வெறும் எண்ணிக்கையாகச் சொல்கிறார்கள். ஆனால், நடக்கும் சமீபத்திய சம்பவங்கள் அனைத்துமே பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கின்றன என்பதுதான் உண்மை. போதைப்பொருள்கள், மது உள்ளிட்ட விஷயங்களும் இந்தக் குற்றத்துடன் தொடர்புடையவை என்பதால், காவல்துறை இந்தக் குற்றங்களைத் தீவிரமாகக் கருதி நுட்பமான வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். செய்வார்களா?