தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக தொழில், கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் கோவை முக்கிய நகரமாக உள்ளது. கோவை சர்வேதச விமான நிலையத்தைப் பொறுத்தவரை சிங்கப்பூர், சார்ஜா, டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட ஏராளமான பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு தமிழ்நாடு அரசு ரூ.1,132 கோடி ஒதுக்கி பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவ இரண்டு அதி நவீன ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கோவை விமானநிலைய இயக்குநர் செந்தில் வளவன் கூறுகையில், “விமான புறப்பாடு முனையத்தில் ஒரு ரோபோவும், விமான வருகை முனையத்தில் ஒரு ரோபோவும் நிறுத்தப்பட்டுள்ளன.

இவை யாரின் உதவியும் இல்லாமல் தானாகவே நகரும். பயணிகள் விமானத்துக்கு செல்ல வேண்டிய வழி, பாஸ்போர்ட் சரிபார்ப்பு போன்ற பணிகளுக்கு இந்த ரோபோக்களின் உதவியை நாடலாம்.
இந்த ரோபோக்கள் செயற்கை நுண்ணறிவு கொண்டவையாக உருவாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ரோபோவின் உதவியின் மூலம் நேரடியாக உதவி மையத்தைத் தொடர்பு கொண்டு தகவல்களை உடனுக்குடன் பெற முடியும். பயணிகளுக்கு எந்த மாதிரியான தகவல்கள் தேவைப்படுகின்றனவோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இணைத்து வீடியோ கால் மூலமாகப் பேசித் தீர்வைப் பெற ரோபோ உதவும்.

இதன் மூலம் பயணிகள் நேரடியாக உதவி மையத்தைத் தேடி வரவேண்டியதில்லை. தற்போது ஆங்கிலம் மூலம் ரோபோவின் சேவையை பெறலாம். விரைவில் தமிழ் மொழியிலும் ரோபோக்கள் சேவையை பெற முடியும்.” என்றார்.