கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

தென்மாவட்டங்களின் வறட்சிமுகத்தை மாற்றப்போகும் கனவுத்திட்டம்!

குலசேகரப்பட்டினம்
பிரீமியம் ஸ்டோரி
News
குலசேகரப்பட்டினம்

நிலநடுக்கோட்டுக்கு எவ்வளவு நெருக்கத்தில் இருந்து ராக்கெட்களை ஏவுகிறோமோ அந்த அளவுக்குக் குறைவான எரிபொருள் தேவைப்படும்.

தமிழகத்தின் நீண்டநாள் கனவொன்று நனவாகிக் கொண்டிருக்கிறது. குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவுதளத்திலிருந்து அடுத்த 24 மாதங்களில் ராக்கெட் விண்ணில் பறக்கும் என்று ISRO தலைவர் சோம்நாத் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் அமையவுள்ள ஏவுதளத்தால் தென்மாவட்டங்களின் முகமே மாறப்போகிறது என்கிறார்கள் விண்வெளித்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.

விண்வெளித்துறையில் இந்தியாவின் வளர்ச்சி வளரும் நாடுகளையே விழியுயர்த்த வைத்திருக்கிறது. இதுவரை தன் சொந்தப் பயன்பாட்டுக்கான செயற்கைக்கோள்களைத் தவிர, 34 நாடுகளின் 375 செயற்கைக்கோள்களை விண்ணுக்குக் கொண்டுசென்று நிலைநிறுத்தியுள்ளது இந்தியா. குறைந்த செலவில் ராக்கெட் அனுப்பும் நாடுகளில் ஒன்றாக வளர்ந்துவரும் இந்தியாவை நாடிப் பெரிய நாடுகளும் முன்னணி நிறுவனங்களும் வரத்தொடங்கியுள்ள சூழலில், தமிழகத்தின் குலசேகரப் பட்டினத்தில் விண்வெளி ஏவுதளம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளன.

தென்மாவட்டங்களின் வறட்சிமுகத்தை மாற்றப்போகும் கனவுத்திட்டம்!

ஸ்ரீஹரிகோட்டாவின் கதை

1960-ல் ISRO தலைவராக சதீஷ் தவான் பொறுப்பேற்றிருந்தபோது இந்தியாவில் ஏவுதளம் அமைப்பதற்கான இடத்தைக் கண்டறிய மூத்த விஞ்ஞானி ஆர்.எம்.வாசகம் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் அந்தக்குழு தீவிர ஆய்வு செய்து நாகப்பட்டினத்தையும் ஸ்ரீஹரிகோட்டாவையும் பரிந்துரைத்தது. நாகப்பட்டினத்தில் விண்வெளி மையம் அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில், அப்போதிருந்த அரசியல்சூழலைப் பயன்படுத்தி ஸ்ரீஹரிகோட்டாவுக்கு ஏவுதளத்தைக் கொண்டு சென்றது ஆந்திரா. 1970-களின் பிற்பகுதியில் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளம் பயன்பாட்டுக்கு வந்தது. அன்று தொடங்கி இந்திய விண்வெளித்துறையின் ஆகப்பெரிய வளர்ச்சிக்குப் பெரும் அர்ப்பணிப்பை வழங்கியுள்ளது, ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம். அங்கு தற்போது இரண்டு ஏவுதளங்கள் செயல்படுகின்றன. சராசரியாக ஆண்டுக்கு 10 ராக்கெட்கள் அங்கிருந்து ஏவப்படுகின்றன.

வளரும் இந்தியா

சமீப தொழில்நுட்ப வளர்ச்சி விண்வெளித் துறையில் மிகப்பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது. 5 டன், 6 டன் எடையுள்ள பிரமாண்ட செயற்கைக்கோள்கள் 200 கிலோ, 300 கிலோ அளவுக்குள் இப்போது அடங்கி விடுகின்றன. செயற்கைக்கோள்கள் சுருங்கியதால் அவற்றை விண்வெளிக்குச் சுமந்து செல்லும் ராக்கெட்களும் அளவில் சிறியதாகத் தேவைப்படுகின்றன. தவிர உலகெங்கும் விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பு அதிகரித்துவிட்டது. தொலைத்தொடர்பு, தொலையுணர் செயற்கைக்கோள்களின் தேவைகள் பன்மடங்கு பெருகிவிட்டன. உலகத்தோடு ஒப்பிடும்போது இந்தியாவில் சிக்கனமான செலவில் ராக்கெட்கள் ஏவப்படுவதால் பின்தங்கிய நாடுகள் முதல் வளர்ந்த நாடுகள் வரை பலவும் இந்தியாவை நாடி வரத் தொடங்கியுள்ளன.

ஏவுதளம் அமையவுள்ள இடம்
ஏவுதளம் அமையவுள்ள இடம்

இந்த வளர்ச்சியை உள்வாங்கிய மத்திய அரசு விண்வெளிக் கொள்கையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதுநாள்வரை ISRO-வின் ராக்கெட் தயாரிப்பு, செயற்கைக்கோள் உற்பத்திப் பணிகளில், மறைமுகமாக 125-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்களிப்பு செய்துவந்தன. தற்போது தனியார் நிறுவனங்களே நேரடியாக விண்வெளி நடவடிக்கைகளில் ஈடுபட மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதன்மூலம் சிறிய ரக ராக்கெட்கள், செயற்கைக்கோள்கள் தயாரிப்பு ஊக்கமடைந்துள்ளது. ஐ.ஐ.டிக்கள் பலவும் நேரடியாக இந்தப் பணியில் இறங்கிவிட்டன. AgniKul, Skyroot போன்ற தனியார் நிறுவனங்கள் பெரும் திட்டங்களைக் கையில் எடுத்துள்ளன.

செலவு குறைவு

இந்த மாற்றங்களால் பெருகும் அதீதத் தேவைகளை நிறைவு செய்ய புதிய ஏவுதளங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று நெடுங்காலமாக விண்வெளித்துறை வல்லுநர்கள் கோரிக்கை விடுத்துவருகிறார்கள். இதையடுத்து விஞ்ஞானி நாராயணா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் பல்வேறு மாநிலங்களிலும் பொருத்தமான இடத்தைத் தேடியதில் குலசேகரப்பட்டினம் உகந்த இடமாகத் தேர்வு செய்யப்பட்டது.

ஆயினும் அதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்படவில்லை. 2013-ம் ஆண்டே தமிழக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி, பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குக்கு இந்தக் கோரிக்கையை முன்வைத்துக் கடிதம் எழுதினார். தூத்துக்குடி எம்.பி கனிமொழியும் தொடர்ந்து இதற்காகக் குரல் கொடுத்தார். தமிழிசை சௌந்தர்ராஜன் போன்றோரும் அழுத்தம் தந்தார்கள். ISRO தலைவராக சிவன் பணியாற்றிய காலங்களில் இதற்கான பணி விரைவு படுத்தப்பட்டது. தற்போது மாதவன்குறிச்சி, படுக்கப்பத்து, அமராபுரம், கூடல்நகர் போன்ற பகுதிகளில் சுமார் 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு முழுவீச்சில் பணிகள் தொடங்கியுள்ளன.

‘‘நிலநடுக்கோட்டுக்கு எவ்வளவு நெருக்கத்தில் இருந்து ராக்கெட்களை ஏவுகிறோமோ அந்த அளவுக்குக் குறைவான எரிபொருள் தேவைப்படும். உலகத்திலேயே ராக்கெட்களை ஏவுவதற்கு மிகவும் உகந்த இடம், பிரெஞ்ச் கயானா. காரணம், அது நிலநடுக்கோட்டுக்கு 5 டிகிரி கோணத்தில் நெருக்கமாக இருக்கிறது. ஸ்ரீஹரிகோட்டா நிலநடுக்கோட்டிலிருந்து 13.43 டிகிரி கோணத்தில் இருக்கிறது. ஆனால், குலசேகரப்பட்டினம் 8 டிகிரி கோணத்தில் இருக்கிறது. அதனால் இங்கிருந்து ராக்கெட்டுகளை அனுப்பும்போது எரிபொருள் தேவை மூன்றில் ஒரு பங்காகக் குறையும். கூடுதல் எடையுள்ள செயற்கைக்கோள்களைக் கொண்டு செல்ல முடியும்” என்கிறார்கள் நிபுணர்கள்.

குலசேகரப்பட்டினத்தில் ஆய்வுசெய்த ISRO விஞ்ஞானிகள்
குலசேகரப்பட்டினத்தில் ஆய்வுசெய்த ISRO விஞ்ஞானிகள்

நேரடிப்பயணம்

‘‘எதிர்காலத்தில் நிறைய எஸ்.எஸ்.எல்.வி போன்ற சிறிய ரக ராக்கெட்களின் தேவை ஏற்படவுள்ளது. ஐ.ஐ.டி உட்பட பல நிறுவனங்கள் இவற்றைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவற்றை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்பமுடியாது. சர்வதேச விதிமுறைகளின்படி, இன்னொரு நாட்டின் மீது செல்லுமாறு ராக்கெட்களை அனுப்பக்கூடாது. குறிப்பிட்ட தூரத்துக்கொருமுறை ராக்கெட்களின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும். அவற்றிலிருந்து சில பாகங்கள் பூமியில் விழும். மக்கள் வாழும் பகுதிகளின் மேல் ராக்கெட்டைச் செலுத்துவது ஆபத்து. பிற நாடுகளின் மீது விழுந்துசேதம் ஏற்பட்டால் அது சர்வதேசப் பிரச்னையாகிவிடும். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மேற்கு நோக்கி ராக்கெட்டைச் செலுத்தினால் அது இலங்கைக்கு மேலே சென்றுவிடும். அதனால் முதலில் தென்கிழக்காக அனுப்பி, இலங்கையைத் தாண்டியதும் திரும்பவும் தெற்குத் திசையில் திருப்பி மேலே கொண்டு செல்லவேண்டும். இப்படித் திருப்பி அனுப்புவதால் ராக்கெட்டின் செயல்திறன் குறையும். எரிபொருள் தேவை அதிகமாகும்.இதனால் அது சுமந்து செல்லும் செயற்கைக்கோள்களின் எடையையும் குறைவாக வைக்கவேண்டிய நிலை இருக்கிறது. பத்துக் கிலோ மீட்டரில் போய்ச்சேர வேண்டிய ஒரு இடத்தை 100 கிலோ மீட்டர் சுற்றிப்போவதுபோல நாம் ராக்கெட்களை அனுப்பிக்கொண்டிருக்கிறோம். பெரிய ராக்கெட்களில்கூட தற்போது மூன்று அல்லது மூன்றரை டன்னுக்கு மேல் வைத்து அனுப்பமுடியவில்லை...’’ என்கிறார் ISRO-வின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை.

இப்போது உலகம் முழுவதும் சிறியவகை செயற்கைக்கோள்களே அதிகம் தயாரிக்கிறார்கள். அவற்றை நாம் தற்போது பயன்படுத்தும் பெரிய ராக்கெட்களில் வைத்து அனுப்புவது தேவையற்ற பொருட்செலவு. அரைக்கிலோ தக்காளி வாங்க லாரி எடுத்துச்செல்வது போல. 200 கிலோ, 300 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை அனுப்பும்படியான ராக்கெட்களே எதிர்காலத்தில் அதிகம் தேவைப்படும். அவற்றை அனுப்ப குலசேகரப்பட்டினம் மிகவும் பொருத்தமாக இருக்கும். தவிர, அங்கிருந்து ராக்கெட்களை அனுப்பும்போது அது இலங்கைக்கு மேல் போகாது. நேரடியாக நிலைநிறுத்த வேண்டிய பகுதிக்குச் சென்றுவிடும்.

ஏவுதளம் அமையவுள்ள இட வரைபடம்
ஏவுதளம் அமையவுள்ள இட வரைபடம்

பங்களிப்பு அதிகரிக்கும்

‘‘இன்று உலகளாவிய விண்வெளிச் சந்தையின் மதிப்பு 450 பில்லியன் டாலர். இதில் இந்தியாவின் பங்களிப்பு வெறும் 2% தான். குலசேகரப்பட்டினம் ஏவுதளம் இந்தியாவை வெகுதூரம் முன்னோக்கிக் கொண்டு செல்லும். தற்போது மத்திய அரசு விண்வெளித்துறையில் தனியாரை அனுமதித்திருப்பதால் நிறைய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உருவாகும். உலகெங்கும் உள்ள நிறுவனங்களுக்காக அவர்கள் பணியாற்று வார்கள். இதன்மூலம் அந்நியச் செலாவணி அதிகரித்து இந்தியாவின் பங்களிப்பு இன்னும் மேம்படும். பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்’’ என்கிறார் ISRO-வின் முன்னாள் இயக்குநர் சிவன்.

இப்போது ராக்கெட்களின் உதிரி பாகங்கள், நெல்லை மாவட்டத்திலுள்ள மகேந்திரகிரி மையத்தில் ஒருங்கிணைத்து சோதனை செய்யப்பட்டு சாலை வழியாக ஸ்ரீஹரிகோட்டா எடுத்துச் செல்லப்படுகின்றன. அதேபோல, கிரையோஜெனிக் இன்ஜினின் எரிபொருளான திரவ ஹைட்ரஜனும் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு சுமார் 1,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விசாகப்பட்டினம் வழியாக ஸ்ரீஹரிகோட்டா கொண்டு செல்லப்படுகிறது.

குலசேகரப்பட்டினத்துக்கும் மகேந்திரகிரிக்கும் வெறும் 70 கி.மீ தொலைவுதான். இங்கேயே ராக்கெட் தயாரித்து, சோதனை செய்து இங்கிருந்தே ஏவினால் செலவுகளும் பெருமளவு குறையும்.

தென்மாவட்டங்களின் வறட்சிமுகத்தை மாற்றப்போகும் கனவுத்திட்டம்!

சிக்கன நாடாகும் இந்தியா

‘‘இப்போது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சராசரியாக ஆண்டுக்குப் பத்து ராக்கெட்கள்தான் அனுப்புகிறோம். எதிர்காலத்தில் மூன்று நாள்களுக்கு ஒன்று என்ற வேகத்தில் அனுப்பவேண்டியிருக்கும். இன்று ஒரு ராக்கெட்டை அனுப்ப ஆறு மாதங்களுக்கு முன் திட்டமிட வேண்டும். எதிர்காலத்தில் அதற்கெல்லாம் சாத்தியமில்லை. உடனுக்குடன் ராக்கெட்கள் தயாராக இருக்கவேண்டும். மகேந்திரகிரி டு குலசேகரப்பட்டினம் பகுதியை ‘ஸ்பேஸ் காரிடாரா'க அறிவித்து மேம்படுத்தினால் ராக்கெட்களை இங்கேயே செய்யமுடியும். தவிர, நான்குக்கும் மேற்படட ஏவுதளங்களை இங்கே உருவாக்கமுடியும். இதன்மூலம் உலகின் சிக்கனமான விண்வெளித் தொழில்நுட்ப நாடாக இந்தியா மாறும்.

குலசேகரப்பட்டினத்தை மையமாகக் கொண்டு இயங்கினால் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் சர்வதேச விண்வெளிச் சந்தையில் இந்தியாவின் மதிப்பை 10 சதவிகிதமாக உயர்த்தமுடியும். உலகளவில் இந்தியாவில்தான் செல்போன் கட்டணம் குறைவு. இதைப்போல விண்வெளிக் கட்டணமும் குறையும். இப்போது ஸ்ரீஹரிகோட்டாவில் ஒரு கிலோ செயற்கைக்கோளை விண்ணுக்குக் கொண்டுசெல்ல 20,000 டாலர் முதல் 25,000 டாலர் வரை ஆகும். குலசேகரப்பட்டினத்தில் இதை 10,000 டாலருக்குள் அனுப்பிவிட முடியும். நிறைய வாடிக்கையாளர்கள் வந்தால் இன்னும் இந்தச் செலவு குறையும். அதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் நம்மைத் தேடிவரும்’’ என்கிறார் மயில்சாமி அண்ணாத்துரை.

தகவல் தொழில்நுட்பம், விவசாயம் சீதோஷ்ணநிலை, பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களுக்காக ஏவப்படும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் வர்த்தகம் வரும் 2025-ம் ஆண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் பங்களிப்பு ஆபத்தா?

‘‘வளர்ந்த பல நாடுகளில் வெவ்வேறு இடங்களில் ஒன்றுக்கு மேம்பட்ட ஏவுதளங்கள் இருக்கின்றன. ஆனால் நாம் ஸ்ரீஹரிகோட்டாவில் மட்டுமே ஏவுதளம் வைத்திருக்கிறோம். தற்போது குலசேகரப்பட்டினத்தில் நம் கனவு கூடி வந்திருக்கிறது. இடம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்துவிட்டது. இத்திட்டம் தொடர்பாக அப்பகுதி மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படப்போகும் பல்வேறு விதமான வளர்ச்சிகளில் நான் முக்கியமாகப் பார்ப்பது மாணவர்கள் மத்தியில் ஏற்படப்போகும் மாற்றத்தைத்தான். தென்மாவட்டங்களில் இருந்து, ஏராளமானோர் விண்வெளித்துறை சார்ந்த படிப்புகளைத் தேர்வு செய்ய இது உந்துசக்தியாக இருக்கும்...’’ என்கிறார் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.

சிவன், கனிமொழி, தங்கம் தென்னரசு, மயில்சாமி
அண்ணாத்துரை
சிவன், கனிமொழி, தங்கம் தென்னரசு, மயில்சாமி அண்ணாத்துரை

ஒரு லட்சம் பேருக்கு வேலை!

‘‘ஏவுதளம் வருவதால் மிகப்பெரும் வளர்ச்சியை அந்தப் பகுதிகள் எட்டும் என்பதில் சந்தேகமில்லை. இதன்மூலம் ஏராளமான தொழில் வாய்ப்புகள் உருவாகும். ஆவடியில் டேங்க் தொழிற்சாலை வந்தபிறகு அதையொட்டி பல சிறு தொழில் நிறுவனங்கள் வந்ததைப்போல குலசேகரப்பட்டினத்துக்கும் பல நிறுவனங்கள் வரும். இதை எதிர்நோக்கியே தமிழ்நாடு விண்வெளி, பாதுகாப்புத் தொழிற்துறைக்கான கொள்கையைத் தமிழக அரசு உருவாக்கியுள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் இந்தத் துறையில் ரூ.75,000 கோடி முதலீட்டை ஈர்ப்பதையும் ஒரு லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாவும் வேலைவாய்ப்பை உருவாக்குவதையும் இந்தக் கொள்கை இலக்காகக் கொண்டிருக்கிறது. சர்வதேச நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் வசதிகளை உருவாக்கித் தரவும் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உள்ளடங்கிய தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்குக் குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவுதளம் மிகப்பெரும் வாய்ப்பை உருவாக்கித்தரும்’’ என்கிறார் தமிழகத் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.

மேம்படும் தென்மாவட்டங்கள்

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம் பொறியாளர்கள் உருவாகிறார்கள். இப்போது அவர்களுக்கிருக்கும் ஒரே வாய்ப்பு, ஐ.டி. இனி விண்வெளித் தொழில்நுட்பம் சார்ந்த வேலைகளில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது கல்வியாளர்களின் நம்பிக்கை. வறட்சியின் அடையாளமாகவே காட்டப்படும் தென் மாவட்டங்களின் முகத்தைக் குலசேகரப்பட்டினம் ஏவுதளம் மாற்றும். தமிழகமே அதனால் ஏற்றம் காணும் என்ற நம்பிக்கை உருவாகிறது. நல்லது நடக்கட்டும்!

விண்வெளிக்கு இணையாக மிகப்பெரும் வளர்ச்சியை எட்டவுள்ளது டிரோன் தொழில்நுட்பம். வேளாண்மை, சுகாதாரம் போன்ற பல துறைகளில் எதிர்காலத்தில் டிரோன் பயன்படும் என்று கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் அரசே டிரோன் வழங்கும் சூழல்கூட உருவாகலாம். ராக்கெட் தொழில்நுட்பமும் டிரோன் தொழில்நுட்பமும் கிட்டத்தட்ட ஒன்று. ‘‘குலசேகரப்பட்டினத்தில் ஸ்பேஸ் காரிடர் உருவாகும்பட்சத்தில் டிரோன் தொழிற்சாலைகளும் பெருமளவு இப்பகுதிக்கு வர வாய்ப்புண்டு’’ என்கிறார்கள் மூத்த ISRO அதிகாரிகள்.

*****

குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்கப்பட்டால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5,000 பேருக்கு நேரடியாகவும் 25,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். மகேந்திரகிரி - குலசேகரப்பட்டினம் பகுதியை ஸ்பேஸ் காரிடாராக அறிவிக்கும்பட்சத்தில் மிகப்பெரிய விண்வெளித் தொழிற்பேட்டை உருவாக வாய்ப்புண்டு. இதனால் சுமார் 50,000 கோடி ரூபாய்க்கு மேல் தமிழகத்துக்கு முதலீடுகள் வரக்கூடும் என்கிறார்கள். அடுத்த 5 ஆண்டுகளில் 42,000 சிறிய செயற்கைக்கோள்கள் உருவாக்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். குலசேகரப்பட்டினம் விண்வெளி மையத்தால் அந்த வணிகத்தை ஈர்க்கமுடியும்.