
ரெளடிகள் நெட்வொர்க் ஒரு நாளிலோ, ஒருசில மாதங்களிலோ உருவாகிவிடவில்லை. போலீஸையே மிரட்டும் அளவுக்கு ரெளடிகள் வளர்ந்ததை கைக்கட்டி வேடிக்கை பார்த்ததே போலீஸ்தான்.
சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு, கூடுதல் எஸ்.பி-யாக வெள்ளத்துரை நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் ஏற்கெனவே தமிழகம் முழுவதும் 12 ரெளடிகளை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றவர் என்பதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரும் தொழில் நிறுவனங்களைக் குறிவைத்து கட்டப்பஞ்சாயத்து செய்துவரும் ரெளடிகளை ஒடுக்கும் ஸ்பெஷல் அசைன்மென்ட் இவருக்குத் தரப்பட்டிருப்பதாகக் கூறுகிறது காவல்துறை வட்டாரம்!
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொழிற்சாலைகளில் ஸ்க்ராப் எடுக்கும் பிசினஸ் மிகப் பெரிய அளவில் நடந்துவருகிறது. பல நூறு கோடிகள் கொழிக்கும் தொழில் இது. உள்ளூர் அரசியல் பிரமுகர்களும், ஏரியா தாதாக்களும் பின்னிப் பிணைந்துள்ள இந்தத் தொழிலில் கொஞ்சம் அசந்தாலும் தலையை எடுத்துவிடுவார்கள். கடந்த காலங்களில் அப்படி நடந்த கொலைகள் ஏராளம். ஒருகாலத்தில் இந்தத் தொழிலில் ரெளடிகளாக இருந்தவர்களே, இன்று புறநகர் ஏரியாக்களில் அரசியல் தலைவர்களாகவும், கல்வித்தந்தைகளாகவும் வலம்வருகிறார்கள். இன்றைய ரெளடிகள் நாளைய தலைவர்களாகத் துடிக்கிறார்கள். இவர்களுக்கும் கட்சி பேதமெல்லாம் கிடையாது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோலோச்சுவார்கள். லெட்டர்பேடு கட்சி முதல் ஆளுங்கட்சி வரை இதில் அடக்கம்.

காஞ்சிபுரத்தில் ரெளடி ஸ்ரீதர் மறைவுக்குப் பிறகு, அவனது இடத்தைப் பிடிக்க ஸ்ரீதரின் கார் டிரைவர் தினேஷுக்கும், ஸ்ரீதரின் உறவினர் தணிகை அரசு என்கிற தணிகாவுக்கும் கேங் வார் ஏற்பட்டுள்ளது. இவர்களின் மோதலில் மட்டுமே இதுவரை 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. கடைசியாக, கடந்த ஏப்ரல் 24 அன்று தொழிலதிபரும், அ.தி.மு.க பிரமுகருமான திருமாறன் என்பவர் மறைமலை நகரில் கோயிலில் வழிபட்டுக்கொண்டிருக்கும்போதே வெடிகுண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கொலைசெய்யப்பட்டார்.
இன்னொரு பக்கம் ஏ ப்ளஸ் ரௌடி பட்டியலில் இருக்கும் குன்றத்தூர் வைரம் ஸ்க்ராப் தொழிலில் கோலோச்சுகிறான். சில ஆண்டுகளுக்கு முன்பு தொழில் போட்டியில் குன்றத்தூர் வைரத்தின் எதிரியும், அ.தி.மு.க பிரமுகருமான பி.பி.ஜி.குமரன் வெடிகுண்டு வீசிக் கொலைசெய்யப்பட்டான். தற்போது ஸ்க்ராப் தொழிலில் கோலோச்சுவதில் குன்றத்தூர் வைரத்துக்கும், படப்பை குணாவுக்கும் இடையே கடும் போட்டி நடக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வியடைந்தான் குன்றத்தூர் வைரம். கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற படப்பை குணா, மதுரமங்கலம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும், அவரின் மனைவி எல்லம்மாள் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலராகவும் இருக்கிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தின் ‘அன்பான’ ஆளும் புள்ளி, குணாவுக்கு ஆதரவாகக் களமிறங்கியிருப்பதால் அரசியல்ரீதியாகவும் போட்டி சூடுபிடித்திருக்கிறது. ஒரு வழக்கில் போலீஸ் தேடுவதால், தலைமறைவாக இருக்கும் குணா, கடந்த டிசம்பர் 29 அன்று பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேரில் வந்து, தனது ஆறு ஏக்கர் நிலத்தை விற்பனை செய்துவிட்டுச் சென்றிருக்கிறான்.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிப்காட்டில் ஸ்க்ராப் எடுப்பதில் லோகு, சேட்டு, சங்கர் ஆகிய மூவருக்குள் கடும் போட்டி நிலவுகிறது. மூவருமே அரசியல் கட்சிகளின் பின்னணியில் இயங்குகிறார்கள். சென்னையைச் சேர்ந்த ரௌடி சி.டி.மணி கண்ணசைவு இல்லாமல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஸ்க்ராப் பிசினஸ் நடப்பதில்லை. அ.தி.மு.க ஆதரவாளரான அவனுக்கு சில மாதங்களுக்கு முன்பு போலீஸார் ‘மாவுக்கட்டு’ போட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் வைத்திருக்கிறார்கள். ஆனாலும், வரவேண்டிய மாமூல் அவன் தரப்புக்கு தவறாமல் வந்துவிடுகிறது என்கிறார்கள்.
ரெளடிகள் நெட்வொர்க் ஒரு நாளிலோ, ஒருசில மாதங்களிலோ உருவாகிவிடவில்லை. போலீஸையே மிரட்டும் அளவுக்கு ரெளடிகள் வளர்ந்ததை கைக்கட்டி வேடிக்கை பார்த்ததே போலீஸ்தான். காரணம், மாமூல். இப்போது ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஒரகடம், மணிமங்கலம், சோமங்கலம் ஆகிய காவல் நிலையங்களில் மூட்டைகளில் அள்ளாத குறையாக மாமூலை அள்ளுகிறார்கள். இவ்வளவுக்கும் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி சுதாகர் கடந்த ஏழு மாதங்களில் 274 ரௌடிகளைக் கைதுசெய்துள்ளார்; 299 ரௌடிகளிடம் ‘நன்னடத்தை உறுதிமொழிப் பத்திரம்’ எழுதி வாங்கி, கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவந்திருக்கிறார். இந்த நிலையில்தான் காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டிருக்கிறார் ஏ.எஸ்.பி வெள்ளத்துரை.

போலீஸ் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் பற்றி வெள்ளத்துரையிடம் பேசினோம்... “ஏ, ஏ ப்ளஸ், பி பிரிவு ரெளடிகள் 560 பேரின் பட்டியல் தயாராக இருக்கிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டுமே சுமார் பத்து ரெளடிக் கும்பல்கள் தொழிற்சாலைகளை மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்துவருகின்றன. பிரபல டயர் கம்பெனி ஒன்றை, படப்பை ரெளடி ஒருவன் தனது கட்டுப்பாட்டில் மிரட்டிவைத்திருக்கிறான். ரௌடியாகச் சம்பாதித்துவிட்டு, சிலர் தொழிலதிபராக வலம்வரு கிறார்கள்... சிலர் அரசியல் கட்சிகளில் சேர்ந்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்துக்கொண்டுதான் இருக்கிறோம். விரைவில் ரெளடிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரௌடிகளால் பாதிப்பு ஏற்பட்டால், எனது மொபைல் எண் 86674 29100-க்கு எந்நேரமும் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம்” என்றார்.
சட்டத்தின் வாயிலாக ரெளடிகள் ஒடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!