இந்தியாவின் 75-வது சுதந்திரத்தை கொண்டாடும் வகையில், முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ரயில் பாகங்களைக் கொண்டு அடுத்தாண்டு ஆகஸ்ட்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அதன்படி ஏற்கெனவே 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டதையடுத்து, குஜராத் தலைநகர் காந்தி நகரையும், மகாராஷ்டிரா தலைநகரையும் இணைக்கும் வகையில் மூன்றாவது வந்தே பாரத் ரயில் சேவையைக் கடந்த செப்டம்பர் 30-ம் தேதியன்று, பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இதில், மூன்றாவதாக இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில், பட்வா-மணிநகர் இடையே சென்றுகொண்டிருந்தபோது தண்டவாளத்தில் எருமை மாடுகள் மோதியதில், இன்ஜினின் முன்பகுதி சேதமடைந்தது. இருப்பினும் பெரியளவிலான விபத்து ஏற்படவில்லை. அதையடுத்து மும்பை சென்ட்ரல் டெப்போவில், ரயிலின் சேதமடைந்த பகுதி உடனடியாக சரிசெய்யப்பட்டது.
இந்த நிலையில் சம்பவம் நடந்த மறுநாள் குஜராத்திலுள்ள ரயில்வே பாதுகாப்புப் படை, எருமை மாடுகளின் உரிமையாளர்களுக்கெதிராக வழக்கு பதிவுசெய்திருக்கிறது.

இது குறித்து, ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் பிரதீப் சர்மா, ``நான்கு எருமை மாடுகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, ரயில்வே சட்டம், 1989-ன் பிரிவு 147-ன் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது" என ஊடகத்திடம் தெரிவித்தார். மேலும் அதிகாரிகளின் கூற்றுப்படி, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கு ரயில்வே எடுத்துவருவதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், எருமை மாடுகளின் உரிமையாளர்களை இதுவரை ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கண்டுபிடிக்கவில்லை.